12 மணி நேரம் வேலை திருத்த மசோதா - கூட்டணிக்கட்சிகளின் எதிர்ப்பால் பின்வாங்கிய தி.மு.க அரசு!

12 மணி நேரம் வேலை திருத்த மசோதா - கூட்டணிக்கட்சிகளின் எதிர்ப்பால் பின்வாங்கிய தி.மு.க அரசு!

கடந்த வாரம் பட்ஜெட் கூட்டத்தொடரின் கடைசிநாளன்று சட்டமன்றத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட 12 மணி நேர வேலை நேரம் தொடர்பான சட்ட மசோதா நிறுத்திவைக்கப்படுவதாக நேற்றிரவு முதல்வர் ஸ்டாலின் அறிவித்திருக்கிறார். இதற்கான காரணங்களை விளக்கி விரிவான அறிக்கையையும் வெளியிட்டிருக்கிறார்.

தொழிலாளர்களுக்கு 8 மணி நேர வேலை என்ற சட்டம் பல ஆண்டுகளாக அமலில் இருந்து வருகிறது. பணி நேரத்தை 12 மணி நேரமாக உயர்த்தும் சட்டமசோதா தமிழக சட்டமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட அன்றே கடுமையான விமர்சனங்களை சந்தித்தது. அ.தி.மு.க, பா.ஜ.க, பா.ம.க மட்டுமல்ல தி.மு.கவின் கூட்டணிக் கட்சிகளும் கண்டனங்களை தெரிவித்தன.

அடுத்தடுத்து தொடர்ந்து வந்த விமர்சனக் கணைகள், பல்வேறு தொழிலாளர் சங்கம் சார்பில் அறிவிக்கப்பட்ட போராட்ட அறிவிப்புகளால் தி.மு.க அரசு தயங்கியது. இது குறித்து நேற்று கருத்துக் கேட்பு கூட்டம் கூட்டப்பட்டது. இதில் தி.மு.க., அ.தி.மு.க., கம்யூனிஸ்டு, விடுதலை சிறுத்தைகள், பா.ம.க. உள்ளிட்ட கட்சி பிரநிதிநிதிகள் பங்கேற்றன. புதிய சட்டத் திருத்த மசோதாவை திரும்பப் பெறவேண்டும் என்று அனைவரும் கோரிக்கை விடுத்த நிலையில் நேற்றிரவு முதல்வர் ஸ்டாலின் விரிவான அறிக்கை வெளியிட்டிருக்கிறார்.

தமிழ்நாட்டில் பெரும் முதலீடுகளை ஈர்த்திடவும், இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பினைப் பெருக்கிடவும், குறிப்பாக தென் மற்றும் வட மாவட்டங்களில் வேலைவாய்ப்புகளை ஏற்படுத்திடும் நோக்கிலும் தமிழ்நாடு அரசால் நிறைவேற்றப்பட்டது. தொழிலாளர்களின் நலனைப் பாதுகாக்கக்கூடிய பல்வேறு அம்சங்கள் இச்சட்டத்தில் இருந்தாலும், சில தொழிற்சங்கங்கள் தெரிவித்த கருத்துக்களின் அடிப்படையில் மசோதா திரும்பப் பெறப்படுகிறது.

தமிழ்நாட்டின் தொழில் வளர்ச்சி, இளைஞர்களுக்கு நல்ல சம்பளத்துடன் கூடிய பல்லாயிரக்கணக்கான வேலைவாய்ப்புகள் உள்ளிட்ட முக்கிய அம்சங்களை பற்றி மிகுந்த அக்கறை கொண்டுள்ள இந்த அரசு, தொழிலாளர் நலன் காக்கப்பட வேண்டும் என்பதிலும் அதே அளவு அக்கறை கொண்டுள்ளது என்பதை விளக்கியிருக்கிறோம்.

ஆலோசனைக் கூட்டத்தில் பேசிய தொழிற்சங்கப் பிரதிநிதிகள், இச்சட்டமுன்வடிவினை நடைமுறைப்படுத்தினால் தொழிலாளர்களுக்கு ஏற்படக்கூடிய சிக்கல்கள், சிரமங்கள் குறித்து விவரமாக குறிப்பிட்டு, பரிசீலிக்க வேண்டுமாய் கேட்டுக் கொண்டார்கள்.

தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா, தலைவர் கருணாநிதி வழியில் முனைப்போடு செயல்பட்டு வரக்கூடிய இந்த அரசு ஒரு சட்டமுன்வடிவை எந்த அளவு உறுதியுடன் கொண்டு வருகின்றதோ, அது குறித்து மக்களிடம் ஏதேனும் மாற்றுக் கருத்துக்கள் வரப்பெற்றால் அவற்றையும் சீர்தூக்கி ஆராய்ந்து, கருத்துகளுக்கு மதிப்பளிக்கும் வகையில் நடந்து கொள்ளும். அந்த வகையில் சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட மசோதாவின் மீது பல்வேறு தொழிற்சங்க

பிரதிநிதிகள், அரசியல் கட்சிகள் தெரிவித்த கருத்துகளின் அடிப்படையில் மசோதா திரும்பப் பெறப்படுவதாக முதல்வர் அறிவித்திருக்கிறார்.

ஆக, 12 மணி வேலை நேரம் சட்டம் திரும்பப் பெறப்பட்டுள்ளது. அடுத்து மதுபானங்களை பயன்படுத்தும் உத்தரவிலும் ஏதாவது மாற்றம் வருமா? இன்றும் தெரிந்துவிடும்!

Related Stories

No stories found.
logo
Kalki Online
kalkionline.com