12 மணி நேர வேலை மசோதா - பின் வாங்கிய தி.மு.க அரசு; பாராட்டும் திருமாவளவன்!
தமிழக அரசு அறிமுகப்படுத்திய 12 மணி நேர வேலை நேரம் மசோதா, நிறைவேற்றப்பட்ட நாள் முதல் தொடர்ந்து தி.மு.க கூட்டணிக் கட்சிகளில் எதிர்ப்பை பெற்றது. இடதுசாரிகள், காங்கிரஸ், விடுதலைச் சிறுத்தைகள் உள்ளிட்ட தி.மு.க கூட்டணிக் கட்சியினர் மசோதாவை திரும்பப் பெறுமாறு தி.மு.க அரசுக்கு தொடர்ந்து அழுத்தம் வந்த நிலையில் நேற்று மசோதாவை திரும்பப் பெறுவதாக முதல்வர் அறிவித்திருக்கிறார்.
தமிழகத்தில் எந்தத் துறையை சேர்ந்தவர்களாக இருந்தாலும் தொழிலாளர்களுக்கு 8 மணி நேர வேலை என்ற சட்டம் அமலில் இருந்து வருகிறது. 8 மணி நேர வேலை நேரத்தை 12 மணி நேரமாக உயர்த்தும் சட்ட மசோதா, கடந்த மாதம் 21-ந்தேதி தமிழக சட்டசபையில் நிறைவேற்றப்பட்டது. தி.மு.க. கூட்டணிக் கட்சிகளும், பிரதான எதிர்க்கட்சியான அ.தி.மு.க.வும் இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தன.
இந்நிலையில் நேற்று பேசிய முதல்வர் ஸ்டாலின், எல்லார்க்கும் எல்லாம் கிடைக்க வேண்டும் என்பதுதான் நம்முடைய கொள்கை, அதுதான் நம்முடைய அடித்தளம். இப்போது தொழிலாளர் நலத்துறையின் சட்டமுன்வடிவு பற்றி ஒரு சர்ச்சை உருவாகி இருக்கிறது. தி.மு.க. அரசு கொண்டு வந்த சட்டத் திருத்தமாகவே இருந்தாலும் தி.மு.க.வினுடைய தொழிற்சங்கமும் இதற்கு எதிர்ப்பு தெரிவித்ததுதான் அதில் வேடிக்கை.
அதற்காக நான் அவர்களை பாராட்டவும் கடமைப்பட்டிருக்கிறேன். தி.மு.க., எத்தகைய ஜனநாயக மாண்பு கொண்ட அமைப்பு என்பதற்கு இது ஒரு எடுத்துக்காட்டு. இதை அவமானமாக கருதவில்லை இத்தகைய விமர்சனம் வந்ததும், உடனடியாக அனைத்து தொழிற்சங்கத்தினரையும் அழைத்து அமைச்சர்கள் முன்னிலையில் பேச்சுவார்த்தை நடத்தி, எந்தவித தயக்கம் இன்றி திரும்பப் பெற்றிருக்கிறோம் என்று பேசியிருக்கிறார்.
முதல்வரின் பேச்சை வரவேற்று பாராட்டு தெரிவித்த விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் நிறுவனர் திருமாவளவன், எட்டுமணி நேர வேலை என்பது உழைப்போரின் உரிமை என நிலை நாட்டிய புரட்சிகர வரலாற்றினைப் போற்றும் நாளாகவே மே நாள் கொண்டாடப்பட்டு வருகிறது. இவ்வுரிமையினைப் பறிக்கும் சதி முயற்சிகளில் கார்ப்பரேட் நிறுவனங்கள் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றன.
இந்திய ஒன்றிய அரசு தொழிலாளர்களின் நலன்களுக்கான 44 சட்டங்களை நான்கு சட்டத்தொகுப்புகளாகச் சுருக்கி, தொழிற்சங்க உரிமைகளை நசுக்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டுவருகிறது. வேளாண் சட்டங்களை எதிர்த்து தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு திரும்பப் பெற வைத்தனர். அதே போல தொழிலாளர் சட்டத் தொகுப்புகளை எதிர்த்தும் நாடே கொந்தளித்திருக்க வேண்டும். தொடர் போராட்டங்களில் ஈடுபட்டிருக்க வேண்டும். ஆனால், ஏனோ அது நிகழவில்லை
12மணி நேர வேலை என்னும் சட்ட மசோதாவை குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்கு அனுப்பாமல் நிறுத்தி வைத்ததுடன், இன்றைய மே நாளில் அதனைத் திரும்பப் பெறுவதாக முதல்வர் அறிவித்துள்ளார். முதல்வருக்கு பாட்டாளி
வர்க்கத்தின் சார்பில் எமது மனமார்ந்த நன்றியை உரித்தாக்குகிறோம் என்று திருமாவளவன் தெரிவித்திருக்கிறார்.
12 மணி நேர வேலை நேர திருத்த மசோதா திரும்பப் பெறப்பட்டதற்கு திருமாவளவன் உள்ளிட்ட தி.மு.க கூட்டணி கட்சித் தலைவர்கள் கொடுத்த அழுத்தம்தான் காரணம் என்கிறார்கள் அரசியல் விமர்சகர்கள்.