ஆளுநர் பதவி அலங்கார பொம்மையா?!

ஆளுநர் பதவி அலங்கார பொம்மையா?!
Published on

-மூத்த பத்திரிகையாளர் ஜாசன்.

தமிழகத்தில் நீட் விலக்கு மசோதாவை ஐந்து மாதங்கள் வைத்துக்கொண்டு விட்டு கையெழுத்து போடாமல் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி திருப்பி அனுப்பினார். இதனால் கோபமடைந்த திமுக பாராளுமன்ற உறுப்பினர்கள் ஆளுநரை திரும்பப் பெறுக டிஸ்மிஸ் செய்க என்று பாராளுமன்றத்தில் கோஷம் போட்டார்கள் ஆனால் மத்திய அரசாங்கம் ஆளுநர் இருவரும் எந்த கருத்தும் இதுவரை சொல்லவில்லை.

மறுபடியும் சட்டசபையை கூட்டி நீட் விலக்கு மசோதாவுக்கு தீர்மானம் நிறைவேற்றி அன்றே ஆளுநர் மாளிகைக்கு அனுப்பி விட்டது தமிழக அரசு.

ஆட்டுக்கு தாடி மாநிலத்துக்கு ஆளுநர் இரண்டுமே தேவை இல்லை என்பது அண்ணா கருத்து திமுக இந்த கருத்தை தேவைப்படும்போது சொல்வது வாடிக்கை தான் ஸ்டாலின் கூட சமீபத்தில் அண்ணாவை மேற்கோள்காட்டி இந்த கருத்தை சொல்லி இருக்கிறார்.

மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி ஆளுநர் ஜக்தீப் தன்கர் மோதல் தனிக்கதை. இருவருக்கான பனிப்போர் தற்சமயம் உச்சக்கட்டத்தை அடைந்துள்ளது ட்விட்டரில் ஆளுநரின் கணக்கை முதல்வர் மம்தா பானர்ஜி பிளாக் செய்துவிட்டார். மாநில அரசின் செயல்பாடுகளை விமர்சித்து டுவிட்டரில் கருத்து சொல்லி வந்தார் மேற்கு வங்க ஆளுநர் தன்கர் இதனால் ஆளுநர் ட்விட்டர் கணக்கை மம்தா பிளாக் செய்துவிட்டார்.

ஆளுநர் பதவி தேவையில்லை என்ற கருத்து நீண்ட ஆண்டுகளாக இந்த நாட்டில் இருக்கிறது. 1983 ஜூன் மாதத்தில் மத்திய மாநில உறவுகளை ஆராய்ந்து அறிக்கை தர முன்னாள் உச்சநீதிமன்ற நீதிபதி ஆர்.எஸ்.சர்க்காரியா தலைமையில் ஒரு குழுவை மத்திய அரசு அமைத்தது. அந்தக் குழு மத்திய மாநில அரசுகளுக்கும் உறவுகளுக்கு ஆளுநர் ஒரு முக்கிய காரணி என்ற நோக்கத்தில் சர்க்காரியா குழு சில கேள்விகளை அதுவும் குறிப்பாக ஆளுநர் பற்றி மாநில அரசாங்கங்களும் அரசியல் கட்சிகளுக்கும் அனுப்பியது. குறிப்பாக இக் கேள்விகள் ஆளுநர் செயல்பாடு பற்றி இருந்தது.

சர்க்காரியா குழு கேட்ட கேள்விகளுக்கு பல மாநில முதல்வர்கள் அரசியல் கட்சித் தலைவர்கள் சொன்ன பதிலின் சாராம்சம் இதுதான்.

ஆளுநர் பதவியை வேண்டாம் என்பது பெரும்பாலோர் கருத்தாக இருந்தது ஆளுநர் பதவி தேவையில்லை அந்த பதவியை நீக்கி விடலாம் என்று அன்றைய மேற்கு வங்க முதல்வர் ஜோதிபாசு கருத்து தெரிவித்திருந்தார்.

திரிபுரா அரசாங்கமும் தேவையில்லை என்ற கருத்தை பதிவு செய்திருந்தது. ஆந்திர முதலமைச்சர் என்டி ராமராவ் ஆளுநர் பதவி நீக்க வேண்டும் என்றார் எம்ஜிஆர் கருத்தும் அதுதான் கூடவே முதல்வர்கள் தரும் பட்டியலிலிருந்து ஆளுநரை குடியரசுத் தலைவர் நியமிக்க வேண்டும் என்று ஆலோசனை சொல்லியிருந்தார். ஆளுநர் பதவி மத்தியில் ஆளும் கட்சிக்கு அவசியம் அதை அவர்கள் நீக்க மாட்டார்கள் என்பதை தெரிந்த எம்ஜிஆர் குறைந்தபட்சம் மாநில முதல்வர்கள் கலந்தாலோசிக்க வேண்டும் என்பதற்காக இந்த கருத்தை பதிவு செய்திருந்தார்.

முதல்வர் ராமகிருஷ்ண ஹெக்டேவும் கிட்டத்தட்ட எம்ஜிஆரின் கருத்தை வழிமொழிந்தார். அவர் மாநில முதல்வர்களின் ஒப்புதலுடன் ஆளுநர் நியமிக்கப்பட வேண்டும் என்று சொல்லியிருந்தார்.

பாரதிய ஜனதா மாநில சட்டசபை ஆளுநர் பெயரை சிபார்சு செய்யட்டும் ஆளுநரை நீக்கும் அதிகாரம் பாராளுமன்றத்திற்கு இருக்க வேண்டும் என்று கருத்து தெரிவித்து இருந்தது. ஆளுநரை நியமிக்கும் முறை ஜனநாயகத்துக்கு முரணாக இருக்கிறது ஆளுநர் பதவி தேவையில்லை என்றும் குறிப்பிட்டது பாரதிய ஜனதா.

1969-ல் திமுக அமைச்சரவையில் நியமிக்கப்பட்ட சென்னை உயர்நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி பி.வி. ராஜமன்னார் தலைமையில் அமைக்கப்பட்ட குழு ஆளுநர் நியமனம் பற்றி தந்தப் பரிந்துரைகளை அமுல்படுத்த வேண்டும் என்று கருத்துச் சொன்னது கூடவே ஆளுநர் பதவி தேவையில்லை என்பதையும் வலியுறுத்தியது. சர்க்காரியா கமிஷன் ஆளுநர் நியமனம் பற்றி செய்த பரிந்துரைகள் மிக முக்கியமானவை.

ஆளுநர் ஏதாவது ஒரு துறையில் சிறந்தவராக இருக்க வேண்டும். வெளிமாநிலத்தவர் ஆக இருக்க வேண்டும் மாநிலங்களில் அரசியல் கட்சிகளின் மோதல்களில் அவரது தலையீடு அல்லது கருத்து தெரிவிக்க தடை விதிக்க வேண்டும் அரசியலில் நேரடியாக பங்கு பெற்ற வரை ஆளுநராக நியமிக்க கூடாது அரசியலை விட்டு ஒதுங்கியவர்களை பரிசீலிக்கலாம் குறிப்பாக மத்தியில் ஆளும் கட்சி சேர்ந்த பிரமுகரை வேறொரு கட்சி ஆளும் மாநிலத்தில் ஆளுநராக நியமிக்க கூடாது மாநில முதல்வரே கலந்து கொண்டுதான் ஆளுநர் நியமிக்கப்பட வேண்டும் என்பதை அரசமைப்பு சட்டத்தில் சேர்க்க வேண்டும் என்றெல்லாம் சொல்லி இருந்தது. ஆனா இந்த பரிந்துரைகள் எதையும் மத்தியில் ஆட்சிக்கு வந்த ஆட்சியிலிருக்கும் இருந்த எந்த மத்திய அரசும் செயல்படுத்தவில்லை என்பது உண்மை. ஆளுநர் மத்திய அரசின் ஏஜென்ட் என்பதுதான் இன்றுவரை உண்மை

ஆட்சியமைக்க பெரும்பான்மை பெற்ற அரசியல் கட்சியை அழைப்பது அமைச்சரவை பதவிப் பிரமாணம் அமைச்சர் நீக்கம் சட்டசபை கூட்டம் சட்டசபையை முடிவுக்குக் கொண்டுவருவது சட்டசபை இயற்றப்படும் எந்த சட்டமும் ஆளுநரின் கையெழுத்துக்கு பிறகுதான் நடைமுறைக்கு வரும் அரசின் எல்லா ஆணைகளும் ஆளுநர் உத்தரவு படி என்றுதான் குறிப்பிடப்பட்டிருக்கும்.

எதிர்க்கட்சித் தலைவராக மு.க.ஸ்டாலின் இருந்த போது எடப்பாடி மீது நடவடிக்கை எடுக்கச் சொல்லி ஆளுநரிடம் தான் மனு தந்தார் மத்திய அரசு இந்தி திணிப்பு என்று எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் போராட்டம் அறிவித்த போது அன்றைய ஆளுநர் பன்வாரிலால் புரோகித் ஸ்டாலினை அழைத்து அதெல்லாம் இந்தித்திணிப்பு எல்லாம் எதுவும் இல்லை நான் டெல்லியில் பேசிவிட்டேன் என்று தெரிவித்ததும் போராட்டத்தை ரத்து செய்தார் ஸ்டாலின்.

கேபிள் டிவி மாறன் சகோதரர்களின் கட்டுப்பாட்டில் இருந்தது எனவே தமிழக அரசு கேபிள் நடத்த சட்டம் இயற்ற ஜெயலலிதா முடிவு செய்து சட்டம் இயற்றிய போது அதற்கு அன்றைய ஆளுநர் சுர்ஜித்சிங் பர்னாலா ஒப்புதல் தரக்கூடாது என்று கருணாநிதியை அழைத்துக்கொண்டு தயாநிதி மாறன் சுர்ஜித் சிங் பர்னாலாவை சந்தித்தார். திமுகவும் தங்களது அரசியல் ஆட்டத்திற்கு ஆளுநரை பயன்படுத்தியிருக்கிறது.

மம்தா பானர்ஜி ஆளுநர் மோதல் உச்சத்தில் தற்போது ஆளுநரை பதவி நீக்கக் கோரி பாராளுமன்றத்தில் தீர்மானம் கொண்டுவர முடிவு செய்திருக்கிறார். மம்தா பானர்ஜி குடியரசுத் தலைவருக்கு ஆளுநரை நீக்க கடிதம் எழுதி இருக்கிறார். பிரதமருக்கு ஆளுநர் மீது புகார் சொல்லி ஆளுநரின் நீக்கப் பரிந்துரை செய்யச் சொல்லி முன்று நான்கு முறை கடிதம் எழுதி இருக்கிறார் மம்தா பானர்ஜி.

ஆளுநர் பற்றிய திமுகவின் கருத்து அன்றைய ஒரு நாளுடன் முடிந்துவிட்டது அதன்பிறகு விவகாரத்தில் தீவிரம் காட்டவில்லை இத்தனைக்கும் மாநில உரிமைக்கு திமுக தான் நீண்ட நாட்களாக போராடியது அல்லது தங்கள் கருத்தை பதிவு செய்தது குடியரசு தினம் சுதந்திர தினம் இரு தினங்களுக்கு ஆளுநர் தான் கொடி ஏற்றுவார் அதை மாற்றி குடியரசு தினத்திற்கு ஆளுநர் சுதந்திர தினத்திற்கு முதல்வர் என்று போராடி எல்லா மாநிலத்திற்கும் வாங்கித் தந்தது திமுக தலைவர் கருணாநிதி தான் என்பதும் உண்மை.

இந்திய அரசியலமைப்பு கூட்டாட்சி முறையை முன்னிறுத்தி இருக்கிறது. இதில் மத்திய மாநில உறவுகளுக்கு ஆளுநரின் பங்கு மிக முக்கியம் அதனால்தான் ஆளுநர் முதல்வர் மோதல் என்பதை யாரும் மாநில பிரச்சனையாக பார்ப்பதில்லை அதை தனிநபர் மோதலாகதான் பார்க்கிறார்கள் என்பதுதான் உண்மை.

ஆளுநர் பதவி என்பது அலங்கார பொம்மை என்பது உண்மை இல்லை என்பதுதான் உண்மை

சென்னா ரெட்டி ஜெயலலிதா மோதல்  உச்சத்தில் இருந்தது 1994 டிசம்பர் மாதம் டெல்லியில் அன்றைய தமிழக ஆளுநர் சென்னா ரெட்டி பெண் பத்திரிகையாளர்களிடம் பேசினார் அப்போது அவர் தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்து விட்டது மாநில அரசை கலைக்க போதுமான ஆதாரங்களை திரட்டி மத்திய அரசிடம் தந்துவிட்டேன் தைரியமான மத்திய அரசு என்றால் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சொன்னார்.

ஆனால் அடுத்த மாதம் சட்டசபையில் ஆளுநர் உரையில் அதே சென்னாரெட்டி தமிழ்நாட்டில் அனைத்து துறையிலும் முன்னேற்றம் கொண்டுள்ளது. சட்டம்-ஒழுங்கு பிரச்சனை இன்றி நான்கு ஆண்டுகளாக அமைதி மாநிலமாக தமிழ்நாடு திகழ்கிறது. என்று பேசினார் ஆளுநர் உரை என்பது ஆளுங்கட்சி எழுதி தருவது அதை ஆளுநர் வாசிப்பது என்பது சம்பிரதாய சடங்கு என்றாகிவிட்டது.

மேற்குவங்கத்தில் ஒரு முறை ஆளுநரால் அவரது உரையை வாசிக்க முடியாமல் திரும்பி போக நேர்ந்தது அச்சடிக்கப்பட்ட உரை எல்லா சட்டமன்ற உறுப்பினர்களுக்கும் தரப்பட்டது ஆளுநர் உரை என்று பேரவைத் தலைவர் பதிவு செய்தார். உடனே உயர்நீதிமன்றத்தில் சிலர் ஆளுநர் உரை நிகழ்த்தவில்லை ஆளுநர் உரைக்குபிறகுதான் சட்டசபை தனது செயலைத் தொடங்க வேண்டும் என்பது சட்டம் என்று வழக்குப் போட்டார்கள் ஆனால் நீதிமன்றம் ஆளுநர் உரையின் நோக்கம் ஏதோ ஒரு வகையில் நிறைவேற்றப்பட்டது என்று சொல்லி வழக்கை தள்ளுபடி செய்தது அதேசமயம் சில ஆளுநர்கள் சில குறிப்பிட்ட பகுதிகளை படிக்காமல் தவிர்த்த சம்பவங்களும் சில மாநிலங்களில் நடந்து இருக்கிறது.

இன்றுவரை ஆட்டுக்கு தாடி இருக்கிறது அதேபோல் மாநிலத்திற்கும் ஆளுநர் தொடர்ந்து இருந்து கொண்டுதான் இருக்கிறார்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com