25 தொகுதிகள் லட்சியம், 6 தொகுதிகள் நிச்சயம்?

தேசியத் தலைவர் நட்டா
தேசியத் தலைவர் நட்டா

2024 நாடாளுமன்றத் தேர்தலுக்கான பிரச்சாரத்தை பா.ஜ.க. இப்பொழுதே ஆரம்பித்துவிட்டது. கோவை காரமடையில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பங்கேற்க வந்திருந்த பா.ஜ.கவின் தேசியத் தலைவர் நட்டா, அதிரடியாக பேசி அரசியல் அதிர்வலைகளை ஆரம்பித்து வைத்திருக்கிறார்.

'தமிழ்நாடு பாதுகாப்பாக இல்லை. மாற்றம் கொண்டு வரவேண்டும். பிரிவினையைத் தூண்டுகிறார்கள். ஆனால், நாங்கள் ஒருமைப்பாட்டை வலியுறுத்துகிறோம்' என்று யார் பெயரையும் குறிப்பிடாமல் பேசிய நட்டா, வாரிசு அரசியல் பற்றி அடுத்தடுத்து சரவெடிகளை அள்ளி வீசியிருக்கிறார்.

'தி.மு.க என்பது கருணாநிதி குடும்பத்திற்கு சொந்தமான கட்சி. காங்கிரஸ் கட்சியோ இந்திரா காந்தி குடும்பத்திற்கு சொந்தமான கட்சி. பா.ஜ.கதான் எல்லோருக்கும் பொதுவான கட்சி' என்று தி.மு.க, காங்கிரஸ் கட்சிகளின் வாரிசு அரசியலையும் காட்டமாக விமர்சனம் செய்திருக்கிறார்.

நட்டாவின் தமிழக வருகை எப்போதும் சலசலப்பை ஏற்படுத்தத் தவறியதில்லை. சென்றமுறை வரும்போது எய்எம்எஸ் மதுரைக்கான பணிகள் அனைத்தும் முடிந்துவிட்டதாக அவர் பேசியிருந்தது, சர்ச்சையானது. எய்எம்ஸ் மருத்துவனைக்கான பூர்வாங்க பணிகளை பற்றி மட்டுமே தான் குறிப்பிட்டதாக மறுநாள் விளக்கம் அளித்திருந்தார். (மொழிபெயர்ப்பு சிக்கலோ?)

நட்டாவின் சமீபத்திய கோவை கூட்டத்தில் தமிழக பாஜகவின் முக்கிய தலைவர்களும், பா.ஜ.க எம்எல்ஏக்களும் பங்கேற்றார்கள். கூட்டத்தில் பேசிய மாநில தலைவர் அண்ணாமலை, 'தி.மு.க ஆட்சிக்கு வந்தது முதல் கொங்கு மண்டலம் புறக்கணிக்கப் படுகிறது. நாங்களோ கொங்கு மண்டலத்திற்கு என்ன நல்லது செய்யலாம் என்று மட்டுமே யோசிக்கிறோம்' என்றார்.

2024 நாடாளுமன்றத் தேர்தல் வியூகம் பற்றி குறிப்பிட்ட அண்ணாமலை, 'பா.ஜ.க தேசிய அளவில் 400 தொகுதிகளுக்கு மேல் கைப்பற்றி மீண்டும் ஆட்சியைப் பிடிக்கும்; குறைந்தபட்சம் 25 எம்.பிக்களை தமிழகத்திலிருந்து டெல்லிக்கு அனுப்ப வேண்டும்' என்றார்.

தி.மு.கவைப் போல் நாற்பதும் நமதே என்று அதீத நம்பிக்கையோடு பேசாமல், கள யதார்த்தத்தை உணர்ந்து 25 தொகுதிகளுக்கு குறி வைத்திருப்பதாக அண்ணாமலையின் ஆதரவாளர்கள் சந்தோஷப்படுகிறார்கள். தமிழ்நாட்டில் மொத்தமுள்ள 39 தொகுதிகளில் எந்தெந்த தொகுதிகளுக்கு பா.ஜ.க குறி வைத்திருக்கிறது என்பது பற்றி தகவல்கள் இல்லை.

கொங்கு மண்டலத்தில் தான் வலுவாக வருவதாக நம்பும் பா.ஜ.க, இம்முறை அதிக தொகுதிகளில் போட்டியிட தயாராகி வருவது நன்றாகவே தெரிகிறது. கொங்கு மண்டலத்தில் 6 நாடாளுமன்றத் தொகுதிகள் மட்டுமே வருகின்றன. கடந்த தேர்தல்களை விட பலமடங்கு சுறுசுறுப்பாக தி.மு.கவின் தேர்தல் பணிகளை ஆரம்பித்துள்ள நிலையில் பா.ஜ.கவினரின் நம்பிக்கை கேள்விக்குரியதாகிறது.

நட்டா பேசிய அதே தினம் சென்னையில் லாயிட்ஸ் ரோடு தலைமைச் செயலகத்தில் எடப்பாடி தலைமையிலான அ.தி.மு.கவினரின் கூட்டம் நடைபெற்றது. அதில் பெரும்பாலான அ.தி.மு.க மாவட்டச் செயலாளர்கள், எம்.எல்.ஏக்கள் பங்கேற்றார்கள். கூட்டத்தில், அ.தி.மு.க தலைமையில் மெகா தேர்தல் கூட்டணி அமைக்க முடிவாகிவிருப்பதாக செய்திகள் வெளியாகின.

25 தொகுதிகளுக்கு பா.ஜ.க குறி வைக்கிறது; அ.தி.மு.கவோ தன்னுடைய தலைமையில்தான் கூட்டணி என்கிறது. 25 தொகுதிகள் இலக்கு என்பது பா.ஜ.கவுக்கு மட்டும்தானா அல்லது அ.தி.மு.கவுக்கும் சேர்த்தா என்கிற கேள்வி எழுகிறது. ஒருங்கிணைந்த அ.தி.மு.கவை பா.ஜ.க விரும்புவதாக சொல்லப்பட்டு வந்த நிலையில் அ.தி.மு.க தலைமையில்தான் மெகா கூட்டணி என்று எடப்பாடி அறிவித்தது விவாதப்பொருளாக மாறியிருக்கிறது. கூட்டணி உண்டா, இல்லையா? சீக்கிரம் சொல்லுங்கப்பா!

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com