30 சதவீத கமிஷன் - தெலுங்கானாவில் காங்கிரஸ் ஆரம்பித்து வைத்த ஆட்டம்

30 சதவீத கமிஷன் - தெலுங்கானாவில் காங்கிரஸ் ஆரம்பித்து வைத்த ஆட்டம்

கர்நாடகாவில் காங்கிரஸ் பெற்ற மகத்தான வெற்றிக்கு 40 சதவீத கமிஷன் கோஷம் காரணம் என்று காங்கிரஸ் தலைவர்கள் நம்புகிறார்கள். இதையே அனைத்து மாநிலங்களிலும் பிரச்சாரத்தில் பயன்படுத்தவும் திட்டமிட்டிருக்கிறார்கள். ராஜஸ்தானில் அமல்படுதத முடியாது என்றாலும் மற்ற மாநிலங்களில் இதை முன் வைத்து பா.ஜ.கவுக்கு எதிராக பிரச்சாரத்தில் இறங்க முடியும்.

டெல்லி மேலிடத்தையும் முந்திக்கொண்டு கமிஷன் விஷயத்தை கையிலெடுத்திருக்கிறது, தெலுங்கானா காங்கிரஸ். இந்த ஆண்டு நடைபெற இருக்கும் தேர்தலில் 30 சதவீத கமிஷன் அரசான பி.ஆர்.எஸ் கட்சியின் ஆட்சியை எதிர்த்து அனைவரும் வாக்களிக்க வேண்டும் என்று பேச ஆரம்பித்திருக்கிறார்கள்.

நேற்று ஹைதரபாத்தில் நடைபெற் பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய தெலுங்கானா காங்கிரஸ் கமிட்டி தலைவரான ரேவந்த் ரெட்டி, 50 லட்சம் மாணவர்களுக்கு தெலுங்கானாவில் வேலை இல்லையென்றும், ஏராளமான தலித் குடும்பங்கள் பாதிக்கப்பட்டிருப்பதாகவும் பேசியவர், 30 சதவீத கமிஷன் பெறும் பி.ஆர்.எஸ் அரசை அனைத்து தரப்பு மக்களும் நிராகரிக்க வேண்டும் என்று பேசியிருக்கிறார்.

கர்நாடகாவில் பா.ஜ.க அரசு 40 சதவீத கமிஷன் பெற்றுக்கொள்ளவதாக பேசப்படுகிறது. ஆனால், முதல்வர் சந்திரசேகர் ராவ் பேசும்போது, பி.ஆர்.எஸ் சட்டமன்ற உறுப்பினர்கள் 30 சதவீத கமிஷன் பெற்றுக்கொள்வதாக பேசியிருக்கிறார். 10 லட்சம் மதிப்புள்ள தலித் மக்களுக்கான நல்வாழ்வு திட்டங்களை அமல்படுத்த 3 லட்சம் வரை கமிஷனாக பெறப்படுகிறது. ஆகவே, 30 சதவீத கமிஷனை முன்வைக்கும் பி.ஆர்.எஸ் கட்சியை மக்கள் நிராகரிக்க வேண்டும் என்றார்.

தலித் மக்களுக்கான நல்வாழ்வுத் திட்டங்கள் தென்னிந்திய மாநிலங்களிலேயே தெலுங்கானாவில்தான் நல்ல முறையில் செயல்படுத்தப்படுகின்றன என்றும் அதற்கு முதல்வர் சந்திரசேகர் ராவ் மற்றும் அவரது அமைச்சரவையினருக்கு விடுதலை சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன், சென்ற மாதம் பாராட்டு தெரிவித்திருந்தார். இந்நிலையில்தான் தலித் மக்களுக்கான நிதி ஒதுக்கீட்டில் முறைகேடு நடப்பதாக புகார் எழுந்திருக்கிறது.

ஏற்கனவே டெல்லி மதுபான ஊழலில் பி.ஆர்.எஸ் கட்சியின் தலைவரும், முதல்வரின் மகளுமான கவிதாவின் பெயர் அடிபட்டு வருகிறது. சி.பி.ஐ ஏற்கனவே அவரை விசாரணைக்கு அழைத்திருக்கிறது. விசாணையை தவிர்ப்பதற்காக கவிதா, பெண்களுக்கான இட ஒதுக்கீடு கோரி டெல்லியில் உண்ணாவிரதம் இருந்தார்.

ஒருவேளை கவிதா கைது செய்யப்பட்டால், 30 சதவீக கமிஷன் போன்ற கோஷங்கள் விஸ்வரூபமெடுக்கும். ஏகமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டு ஆட்சிக்கு வந்த சந்திரசேகர் ராவ் அரசுக்கும் இது சோதனை காலம் என்கிறார்கள்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com