பா.ஜ.க அரசில் 40 சதவீத கமிஷன் - காங்கிரஸ் கட்சியின் ஒரே பிரம்மாஸ்திரம்!

பா.ஜ.க அரசில் 40 சதவீத கமிஷன் - காங்கிரஸ் கட்சியின் ஒரே பிரம்மாஸ்திரம்!

கர்நாடகாவில் ஆளும் பா.ஜ.க அரசு அனைத்து வளர்ச்சித் திட்டங்களிலும் 40 சதவீத கமிஷன் பெற்றுக்கொண்டதாக தேர்தல் பிரச்சாரத்தின் முதல் நாள் தொடங்கி காங்கிரஸ் தலைவர்கள் குற்றம் சாட்டி வந்தார்கள். இதை மறுத்து பேசிய பிரதமர் மோடி, காங்கிரஸ் கட்சியாக இருந்தால் 85 சதவீத கமிஷன் பெற்றுக்கொண்டிருப்பார்கள் என்று பதிலடி தந்திருந்தார். ஆனாலும், 40 சதவீத கமிஷன் என்னும் கோஷம் மக்கள் மத்தியில் நன்றாகவே சென்றடைந்திருக்கிறது.

224 சட்டசபை தொகுதிகளை கொண்ட கர்நாடகத்தில் வருகிற 10-ந் தேதி தேர்தல் நடக்கிறது. சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சியை பிடிக்க காங்கிரஸ் கட்சி தீவிரமாக பிரச்சாரம் மேற்கோண்டது. பா.ஜனதா அரசு மீது 40 சதவீத கமிஷன் விவகாரத்தை முன்வைத்து காங்கிரஸ் பிரசாரம் செய்வதுடன், பா.ஜ.க முதல்வர் பசவராஜ் பொம்மை போன்ற தோற்ற உடைய ஒருவர் மீது ரூபாய் நோட்டுகள் மழை பொழிவது போன்ற விளம்பரத்தை வெளியிட்டு சர்ச்சையை கிளப்பியது.

பிரச்சாரம் செய்வதற்காக கர்நாடகா வந்த ராகுல் காந்தி, ப்ரியங்கா காந்தி போன்றவர்களும் 40 சதவீத கமிஷனை முன்வைத்து பேசி வருகிறார்கள். கர்நாடகத்தில் கடந்த 3 ஆண்டுகளுக்கும் மேலாக ஊழல் ஆட்சி நடைபெற்று வருகிறது. அதுபற்றி பிரதமர் மோடி எதுவும் பேசாமல் மௌனமாக இருக்கிறார். ஆளும் அரசு 40 சதவீத கமிஷன் பெற்று ஊழல் செய்திருக்கிறது என்று குற்றம் சாட்டியிருந்தார்கள்.

சமீபத்தின் நடந்த பிரச்சாரக் கூட்டத்தில் அதற்கு பதிலளித்த பிரதமர் மோடி, காங்கிரஸ் ஊழலுக்கு எதிராக போராடுவதில்லை. ஊழலில் ஊறிப்போன காங்கிரசால் ஊழலை ஒழிக்க சாத்தியமில்லை என்று கடுமையான பதிலடி தந்திருந்தார். காங்கிரஸ் கட்சி கொண்டு வந்த ஒவ்வொரு திட்டத்திலும் 85 சதவீதம் கமிஷன் பெற்று ஊழல் செய்திருந்தார்கள் என்றும் பேசியிருந்தார்.

ஆனாலும், காங்கிரஸ் கட்சியின் தொடர் பிரச்சாரத்தினால் 40 சதவீத கமிஷன் என்பது கர்நாடக வாக்காளர்கள் மனதில் நன்றாக பதிந்துவிட்டது. அதற்கு என்ன ஆதாரம் என்று ஒருமுறை காங்கிரஸ் கட்சியின் மாநில தலைவர் டி.கே சிவக்குமாரிடம் கேட்டபோது, பா.ஜ.கவினர் கொடுத்த தகவல்களின் அடிப்படையில்தான் குற்றச்சாட்டை முன்வைப்பதாக தெரிவித்தார்.

பா.ஜ.கவை சேர்ந்த யத்னால் எம்.எல்.ஏ., கூளிகட்டி சேகர், எம்.எல்.சி.யான விஸ்வநாத் ஆகியோரிடமிருந்துதான் ஆதாரங்களை பெற்றிருக்கிறோம். முதல்வருக்கு எத்தனை கோடி கமிஷன், அமைச்சர் பதவிக்கு எத்தனை கமிஷன் என்பதையெல்லாம் விரிவாக சேகரித்து வைத்திருக்கிறோம். கூடிய விரைவில் அனைத்தையும் மக்களுக்கு தெரியப்படுத்துவோம் என்றார்.

40 சதவீத கமிஷனை முன்வைத்து பா.ஜ.கவுக்கு எதிராக கர்நாடகா முழுவதும் தொலைக்காட்சி சானல்களிலும், அச்சு ஊடகங்களிலும் விளம்பரங்கள் வெளியாகியிருக்கின்றன. இத்தகைய விளம்பரங்கள் மீது நடவடிக்கை எடுத்துள்ள மாநில தேர்தல் ஆணையம் காங்கிரஸ் கட்சிக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. அதைப் பெற்றுக்கொண்ட காங்கிரஸ் நிர்வாகிகள், 40 சதவீத கமிஷன் நடைமுறையில் இருந்ததற்கான ஆதாரங்களை தேர்தல் ஆணையத்திடம் வழங்குவோம் என்று தெரிவித்திருக்கிறார்கள்.

40 சதவீத கமிஷன் சர்ச்சையை தன்னுடைய பிரம்மாஸ்திரமாக காங்கிரஸ் கட்சி முன்வைத்து வருகிறது. வாக்களர்களின் கவனத்தையும் ஈர்த்திருக்கிறது. ஆனால், அவையெல்லாம் பா.ஜ.கவுக்கு எதிராக இருக்குமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com