500 டாஸ்மாக் கடைகள் மூடப்படும் - செந்தில் பாலாஜியின் அறிவிப்பு, மதுபான சர்ச்சையை திசை திருப்பவா?
திருமண மண்டபங்களிலும், விளையாட்டுத் திடல்களிலும், மதுபானம் அருந்தலாம் என தமிழக அரசு அனுமதி தந்த விஷயம் எதிர்க்கட்சிகள் மத்தியில் கடும் கண்டனத்தை ஏற்படுத்தியிருந்த நிலையில், டாஸ்மாக் கடைகளை குறைப்பதாக அமைச்சர் செந்தில் பாலாஜி சட்டமன்றத்தில் அறிவித்திருக்கிறார்.
சமீபத்தில் பொதுவிடங்களில் ஆட்சியரின் அனுமதி பெற்று மதுபானங்களை பரிமாறலாம் என்று தமிழக அரசு அதிரடி உத்தரவு ஒன்றை பிறப்பித்தது. சர்ச்சைகள் எழுந்த நிலையில், இது விளையாட்டு மைதானங்களுக்கு மட்டுமே பொருந்தும். திருமண மண்டபங்களுக்கு பொருந்தாது என்று அமைச்சர் செந்தில் பாலாஜியும் விளக்கமளித்தார்.
மதுபானத்தை பொதுவெளியில் பரிமாற அனுமதிப்பது மதுவுக்கு அடிமையாக்கி இளைஞர்களின் எதிர்காலத்தை சீர்குலைத்துவிடும். சமூக அமைதியை சீர்குலைத்து குற்றச் செயல்களை அதிகரித்துவிடும் என்று எதிர்க்கட்சிகள் கண்டித்தன. இது டாஸ்மாக் மட்டுமல்ல பொதுவிடங்களிலும் மதுபானங்களை பரப்பி, மது விற்பனையை பெருக்கும் முயற்சி என்றும் கடுமையாக விமர்சித்து வருகின்றன.
இந்நிலையில் 500 டாஸ்மாக் கடைகளை மூடுவதற்கான கணக்கெடுப்பு பணி தொடங்கப்பட்டுள்ளதாக அமைச்சர் செந்தில் பாலாஜி சட்டமன்றத்தில் அறிவித்ததார். ஏற்கனவே மதுபானம் குறித்த சர்ச்சை தொடரும் நிலையில் டேமேஜ் கண்ட்ரோலாக அமைச்சர் இதை கையிலெடுத்திருக்கிறாரோ என்று எண்ணத் தோன்றுகிறது.
தமிழகத்தில் 500 டாஸ்மாக் கடைகளை மூடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என சட்டசபை மானியக் கோரிக்கை விவாதத்தின் போது அமைச்சர் செந்தில் பாலாஜி அறிவித்தார். இதன்படி 500 டாஸ்மாக் கடைகளை மூடுவதற்கான கணக்கெடுப்பு பணி தொடங்கப்பட்டுள்ளது. வழிபாட்டுத் தளங்கள், பள்ளிகள், கல்லூரிகள் உள்ளிட்ட இடங்களுக்கு அருகேயுள்ள டாஸ்மாக் கடைகள், குறைந்த வருமானம் ஈட்டக்கூடிய டாஸ்மாக் கடைகள் உள்ளிட்டவற்றை கண்டறிந்து, அவற்றை மூட நடவடிக்கை எடுக்கும் பணிகள் ஆரம்பமாகியுள்ளன.
டாஸ்மாக் கடைகளுக்கு எதிராக மக்கள் ஒன்று திரண்டு போராட்டம் நடத்துவதும், கடைகளை அகற்றுக்கோரி கோரிக்கை விடுப்பதும் பத்தாண்டுகளாக தொடர்ந்து செய்திகளில் இடம் பெற்று வருகிறது. அ.தி.மு.கவோ தி.மு.கவோ எந்தக்கட்சி ஆட்சிக்கு வந்தாலும் டாஸ்மாக் கடைகளை அகற்றக்கோரும் கோரிக்கைளை கண்டு கொள்வதில்லை.
சமீபத்தில் சேலம் பழைய பஸ் நிலையம் சாந்தி தியேட்டர் அருகே உள்ள தமிழக அரசுக்கு சொந்தமான டாஸ்மாக் கடையில் அனுமதிக்கப்பட்ட நேரத்தை தாண்டியும் விற்பனை நடந்து வந்தது. காலை, மாலை, இரவு என எந்நேரமும் திறந்திருக்கும் டாஸ்மாக் கடையை மூடவேண்டும் என்றும் பொதுமக்கள் போராட்டத்தில் இறங்கினார்கள்.
டாஸ்மாக் செயல்படும் இடத்திற்கு அருகே காவல் நிலையம் இருந்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்பட்டதில்லை. இதனால் அதிருப்தியடைந்த பொதுமக்கள், டாஸ்மாக் கடைக்கு பூட்டு போட்டு போராட்டத்தில் ஈடுபட்டார்கள். இது போன்ற நிகழ்வுகள் தினமும் தமிழகத்தில் தொடர்ந்து கொண்டுதான் இருக்கின்றன.
500 கடைகளை மூடப்போவதாக அமைச்சர் அறிவித்திருக்கும் நிலையில் அதை 5 நாட்களில் செய்து முடிப்பதுதான் விவேகமாக இருக்கும். நடக்குமா?