நாகாலாந்தில் 84%, மேகாலயாவில் 76% வாக்குப்பதிவு! - கருத்துக் கணிப்பின்படி யாருக்கு வெற்றி?

நாகாலாந்தில் 84%, மேகாலயாவில் 76% வாக்குப்பதிவு! - கருத்துக் கணிப்பின்படி யாருக்கு வெற்றி?

வடகிழக்கு மாநிலங்களான நாகாலாந்து மற்றும் மேகாலயாவில் நேற்று (திங்கள்கிழமை) சட்டப்பேரவைத் தேர்தல்கள் நடைபெற்றன. இவற்றில் நாகாலாந்தில் 84.66%, மேகாலயாவில் 76.66% வாக்குகள் பதிவாகின.

திரிபுரா, நாகாலாந்து, மேகாலயா சட்டப் பேரவைகளின் பதவிக்காலம் மார்ச் மாதத்துடன் நிறைவடைகிறது. இதையடுத்து இந்த 3 மாநிலங்களுக்கான தேர்தல் தேதியை தலைமைத் தேர்தல் ஆணையம் கடந்த ஜனவரியில் அறிவித்தது. இதன்படி திரிபுராவில் கடந்த 16-ம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது. நாகாலாந்து, மேகாலயா மாநிலங்களில் நேற்று பேரவைத் தேர்தல் நடைபெற்றது.

நாகாலாந்தில் 60 சட்டப்பேரவைத் தொகுதிகள் உள்ளன. இதில் அகுலுடோ தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் கெகாசி சுமி தனது வேட்புமனுவை வாபஸ் பெற்றார். இதைத் தொடர்ந்து அந்த தொகுதியில் பாஜகவின் கினிமி போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார். இதர 59 தொகுதிகளில் நேற்றுவாக்குப்பதிவு நடைபெற்றது.

இதுகுறித்து மாநில தலைமை தேர்தல் அதிகாரி சுஷாங்க் சேகர் கூறும்போது, “நாகாலாந்தில்

ஒட்டுமொத்தமாக 84.66 சதவீத வாக்குகள் பதிவாகின" என்று கூறினார்.

நாகாலாந்தில் தேசிய ஜனநாயக முற்போக்கு கட்சி (என்டிபிபி), பாஜக கூட்டணி ஆட்சி நடத்தி வருகிறது. இதில் என்டிபிபி கட்சி 40 தொகுதிகளிலும் பாஜக 19 தொகுதிகளிலும் போட்டியிடுகின்றன. காங்கிரஸ் 23, நாகா மக்கள் முன்னணி 22, ஜன்சக்தி கட்சி (ராம் விலாஸ் பாஸ்வான்) 15 தொகுதிகளிலும் போட்டியிட்டன.

மேகாலயாவின் சோகியோங் தொகுதியில் போட்டியிட்ட ஐக்கியஜனநாயக கட்சியின் வேட்பாளர் லிங்டாக் உயிரிழந்ததால் தேர்தல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இதர 59 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடைபெற்றது.

மேகாலயாவில் தேசிய மக்கள் கட்சி (என்பிபி), பாஜக இணைந்து கூட்டணி ஆட்சி நடத்தின. ஆனால், இந்த தேர்தலில் இரு கட்சிகளும் தனித்தனியாக போட்டியிடுகின்றன. பெரும்பாலான பகுதிகளில் அமைதியாக வாக்குப்பதிவு நடைபெற்றது. முதல்வர் கான்ராடு சங்மா மற்றும் திரிணமூல் காங்கிரஸ் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான முகுல் சங்மா இருவரும் வரிசையில் நின்று வாக்களித்தனர். இறுதி நிலவரப்படி மேகாலயாவில் 76.66% வாக்குகள் பதிவாயின.

மற்றொரு வடகிழக்கு மாநிலமான திரிபுராவில் முதல்வர் மாணிக் சஹா தலைமையிலான பா.ஜ.க. ஆட்சி நடக்கிறது. இங்குள்ள 60 சட்டப்பேரவைத்

தொகுதிகளுக்கு கடந்த பிப். 16 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது.

இடைத்தேர்தல்: மேற்குவங்கத்தின் சாகர்திகி தொகுதி, அருணாச்சல பிரதேசத் தின் லும்லா தொகுதி, ஜார்க்கண்டின் ராம்கர் தொகுதிகளில் நேற்று இடைத்தேர்தல் நடைபெற்றது. வாக்குகள் மார்ச் 2-ம் தேதி எண்ணப்பட உள்ளன.

திரிபுரா, நாகாலாந்தில் பாஜக ஆட்சி:

தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்பு

திரிபுரா மற்றும் நாகாலாந்தில் மீண்டும் பாஜக கூட்டணி ஆட்சி அமையும் என்றும், மேகாலயாவில் தொங்கு சட்டசப்பேரவை நிலவ வாய்ப்புள்ளது என்றும் தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்பு முடிவுகள் தெரிவித்துள்ளன.

திரிபுராவில் மொத்தமுள்ள 60 தொகுதிகளில் பாஜக கூட்டணி 36 தொகுதிகள் முதல் 45 தொகுதிகள் வரை கைப்பற்றி மீண்டும் ஆட்சி அமைக்கும். சிபிஎம் - காங்கிரஸ் கூட்டணி 6 முதல் 11 இடங்கள் கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாஜக கூட்டணி 29 - 40 தொகுதிகளிலும், காங்கிரஸ் - இடதுசாரி கூட்டணி 9 - 16 தொகுதிகளிலும் வெற்றி பெறும் என ஜன் கி பாத் தெரிவித்துள்ளது.

டைம்ஸ் நவ் - இடிஜி கருத்துக் கணிப்பில் பாஜக கூட்டணி 21-27 தொகுதிகளிலும், காங்கிரஸ்- இடதுசாரி கூட்டணி 18 - 24 தொகுதிகளிலும் வெற்றி பெறும் என கணிக்கப்பட்டுள்ளது.

ஜீ நியூஸ்-மேட்ரிஸ் நடத்திய கருத்துக் கணிப்பில் பாஜக கூட்டணி 29 - 36 தொகுதிகளிலும், காங்கிரஸ் - இடதுசாரி கூட்டணி 13-21 தொகுதிகளிலும் வெற்றி பெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாகாலாந்து மாநிலத்தில் மொத்தமுள்ள 60 தொகுதிகளில் என்.டி.டி.பி. - பாஜக கூட்டணி 38 முதல் 48 வரையிலான தொகுதிகளில் வெற்றி பெற்று ஆட்சியை தக்கவைத்துக் கொள்ளும் என்று இந்தியா டுடே கருத்துக் கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இங்கு என்.பி.எஃப். கட்சி 3 முதல் 8 தொகுதிகளில் வெற்றி பெறலாம் என்றும், காங்கிரஸ் அதிகபட்சம் 2 தொகுதிகளில் வெற்றி பெறலாம் என்றும் கருத்துக் கணிப்புகள் கூறுகின்றன.

என்.டி.பி.பி. - பாஜக கூட்டணி 35-45 தொகுதிகளில் வெற்றி பெறும் என்றும், என்.பி.எஃப். 6 - 10 தொகுதிகளில் வெற்றி பெறும் என்றும் ஜன் கி பாத் தெரிவித்துள்ளது.

டைம்ஸ் நவ் - இடிஜி கருத்துக் கணிப்பில் என்.டி.பி.பி.- பாஜக கூட்டணி 39 - 49 தொகுதிகளிலும், என்.பி.எஃப். 4 - 8 தொகுதிகளிலும் வெற்றி பெறும் என கணிக்கப்பட்டுள்ளது.

ஜீ நியூஸ் கருத்துக் கணிப்பில் என்.டி.பி.பி. - பாஜக கூட்டணி 35-43 தொகுதிகளில் வெற்றி பெறும் என்றும், என்.பி.எஃப். 2 - 5 தொகுதிகளில் வெற்றி பெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேகாலயா: 60 தொகுதிகள் கொண்ட இந்த மாநிலத்தில் நாகாலாந்து மக்கள் கட்சி 18 - 24 தொகுதிகளில் வெற்றி பெறும் என்று இந்தியா டுடே நடத்திய கருத்துக்கணிப்பில் தெரியவந்துள்ளது. பாஜக 4 - 8 தொகுதிகளிலும், காங்கிரஸ் 6-12 தொகுதிகளிலும் வெற்றி பெறும் என்றும் தெரிவித்துள்ளது.

ஜன் கி பாத் கருத்துக் கணிப்பில் என்.பி.பி. 11 - 16 தொகுதிகளில் வெற்றி பெறும் என்றும், பாஜக 3 - 7 தொகுதிகளிலும், காங்கிரஸ் 6 - 11 தொகுதிகளிலும் வெற்றி பெறும் என கணிக்கப்பட்டுள்ளது.

டைம்ஸ் நவ் - இடிஜி கருத்துக்கணிப்பில் என்.பி.பி. 18 - 26 தொகுதிகளிலும், பாஜக 3 - 6 தொகுதிகளிலும், காங்கிரஸ் 2 - 5 தொகுதிகளிலும் வெற்றி பெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜீ நியூஸ் நடத்திய கருத்துக்கணிப்பில் என்.பி.பி. 21 - 26 தொகுதிகளிலும், பாஜக 6 - 11 தொகுதிகளிலும், காங்கிரஸ் 3 - 6 தொகுதிகளிலும் வெற்றி பெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேகாலயாவை பொறுத்தவரை தொங்கு சட்டப்பேரவை அமையலாம் என கருதப்படுகிறது.

---------

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com