கர்நாடக எம்.எல்.ஏ.க்களில் 95% கோடீஸ்வரர்கள்; 35% கிரிமினல் வழக்குகளில் சிக்கியவர்கள்!
கர்நாடக சட்டப்பேரவை உறுப்பினர்களில் 95 சதவீதம் பேர் கோடீஸ்வரர்கள். இவர்களில் 35 சதவீதம் பேர் கிரிமினல் வழக்குகளில் சிக்கியவர்கள் என்று ஜனநாயக சீர்திருத்தங்களுக்கான அமைப்பு (ADR) வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கர்நாடகத்தில் மொத்தம் 224 எம்.எல்.ஏ.க்கள் உள்ளனர். இவர்களில் 219 எம்.எல்.ஏ.க்களின் பின்னணி குறித்து தகவல் சேகரிக்கப்பட்டது. அப்போது இவர்களின் சொத்து மதிப்பு, கிரிமினல் குற்றங்களில் தொடர்புடையவர்களா என்பதும் ஆராயப்பட்டது.
2018 ஆண்டு நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலுக்குப் பின் 15 சட்டப்பேரவை உறுப்பினர்கள் கட்சி மாறியிருப்பதும் தெரியவந்தது. இவர்களில் 10 பேர் காங்கிரஸ் கட்சி சார்பில் தேர்தலில் போட்டியிட்டு இப்போது பா.ஜ.க.வில் இருப்பது தெரியவந்துள்ளது.
இந்த அறிக்கையின்படி 26 சதவீத எம்.எல்.ஏ.க்கள் கிரிமினல் குற்ற வழக்குகளில் சிக்கியுள்ளதாக தங்களது பிரமாண பத்திரத்தில் குறிப்பிட்டுள்ளனர். பா.ஜ.க.வில்தான் 30 சதவீத குற்ற பின்னணியுள்ள எம்.எல்.ஏ.க்கள் உள்ளனர் என்பது தெரியவந்துள்ளது.
தற்போது பா.ஜ.க.வில் இருக்கும் 118 எம்.எல்.ஏ.க்களில் 112 பேர் கோடீஸ்வரர்கள் என்று அந்த அறிக்கை குறிப்பிடுகிறது. சராசரியாக தற்போது பதவியில் உள்ள எம்.எல்.ஏ.க்களின் சொத்து மதிப்பு ரூ.29.85 கோடியாகும். காங்கிரஸ் உறுப்பினர்களின் சராசரி சொத்து மதிப்பு ரூ.48.58 கோடியாகும்.
பா.ஜ.க.வின் 118 எம்.எல்.ஏ.க்களின் சராசரி சொத்து மதிப்பு ரூ.19.6 கோடி. மதச்சார்பற்ற ஜனதாதளம் கட்சி எம்.எல்.ஏ.க்களின் சராசரி சொத்து மதிப்பு ரூ.4.34 கோடி மற்றும் நான்கு சுயேச்சை எம்.எல்.ஏ.க்களின் சராசரி சொத்து மதிப்பு ரூ.40.92 கோடி.
பா.ஜ.க. எம்.எல்.ஏ.க்கள் 112 பேரில் 49 பேரும், காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் 67 பேரில் 16 பேரும், மதச்சார்பற்ற ஜனதாதளம் கட்சி எம்.எல்.ஏ.க்கள் 30 பேரில் 9 பேரும், 4 சுயேச்சை எம்.எல்.ஏ.க்களில் 2 பேரும் தங்களுக்கு எதிராக கிரிமினல் வழக்குகள் இருப்பதாகத் தெரிவித்துள்ளனர்.
35 பா.ஜ.க. எம்.எல்.ஏ.க்கள், 13 காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் மற்றும் 8 மதச்சார்பற்ற ஜனதாதள எம்.எல்.ஏ.க்கள் சீரியஸ் கிரிமினல் குற்ற வழக்குகளில் சிக்கியுள்ளதாக குறிப்பிட்டுள்ளனர்.
கனகபுரா பேரவைத் தொகுதியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட காங்கிரஸ் உறுப்பினர் டி.கே.சிவகுமார் தமக்கு ரூ.840 கோடி சொத்து இருப்பதாக குறிப்பிட்டுள்ளார். பி.எஸ். சுரேஷ் மற்றும் எம்.கிருஷ்ணப்பா இருவரும் முறையே ரூ.416 கோடி மற்றும் ரூ.236 கோடி சொத்து இருப்பதாகத் தெரிவித்துள்ளனர்.
தற்போதுள்ள 219 எம்.எல்.ஏ.க்களில் 73 (33%) எம்.எல்.ஏ.க்கள் 12 ஆம் வகுப்புவரை படித்துள்ளதாக தெரிவித்துள்ளனர். 140 (64%) எம்.எல்.ஏ.க்கள் பட்டதாரிகள் என குறிப்பிட்டுள்ளனர். 2 எம்.எல்.ஏக்கள் மட்டும் முனைவர் பட்டம் பெற்றுள்ளதாகத் தெரிவித்துள்ளனர் என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.