“இதயபூர்வமாக வரவேற்கிறோம்!'' 
- கே.எஸ்.அழகிரி

“இதயபூர்வமாக வரவேற்கிறோம்!'' - கே.எஸ்.அழகிரி

Published on

``பொருளாதாரத்தில் நலிந்த பொதுப்பிரிவினருக்கான 10 சதவிகித இட ஒதுக்கீடு செல்லும்” என்ற உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி வரவேற்கிறது.

இது குறித்து பல்வேறு அரசியல் கட்சியினரும் கருத்து தெரிவித்துவருகின்றனர். தி.மு.க. கடுமையாக எதிர்த்து அறிக்கை வெளியிட்டிருக்கிறது.

அதே நேரத்தில் அதன் கூட்டணியில் இருக்கும் தமிழ்நாடு காங்கிரஸ் இந்த தீர்ப்புக்கு ஆதரவு தெரிவித்திருக்கிறது.  இது பற்றி தமிழ் நாட்டு காங்கிரஸ் தலைவர்  கே.எஸ். அழகிரியிடம் கேட்டபோது...

``சமூகநீதி என்பது மனிதகுலத்துக்குப் பொதுவானது. எந்த ஒரு தரப்புக்கும் அது உரியதல்ல.

103-வது அரசியலமைப்புச் சட்டத் திருத்தம் சரியா, தவறா என்ற விவாதத்தில் பெரும்பான்மையான நீதிபதிகள் ‘சரி’ என்றே கூறியிருக்கிறார்கள். 50 சதவிகித இட ஒதுக்கீடு வரம்பை மீறவேண்டிய அவசியம் ஏற்பட்டால், அனைத்துப் பிரிவினருக்குமான நீதியை அது வழங்குமென்றால் அதை காங்கிரஸ் கட்சி வரவேற்கிறது.

“இந்தியாவில் 5,000 ஆண்டுகளாக சமூகநீதி என்பது இல்லை. ஒரு சிலரை ஒதுக்கிவைக்க வேண்டும்” என்ற நடைமுறையை அந்தக் காலத்தில் ‘நீதி’ என்று சொல்லி, அதை அங்கீகரித்திருக்கிறார்கள். ஆனால், சுதந்திரம் பெற்றப் பிறகு அந்த நடைமுறையை ஜவாஹர்லால் நேரு அவர்கள் உடைத்தெறிந்து, நாடாளுமன்றத்தில் முதன்முறையாக அரசியல் சட்டத்தைத் திருத்தி இட ஒதுக்கீட்டுக்கு வழிவகுத்தார். தற்போது 75 ஆண்டுகள் ஆகிவிட்டன.

 எனவே, “இன்றைய நடைமுறையைப் பின்பற்றி, இன்றைக்குப் பொருளாதாரத்தில் நலிந்த பொதுப்பிரிவினருக்கு 10 சதவிகித இட ஒதுக்கீடு வழங்க வேண்டும்” என்று காங்கிரஸ் கட்சி முடிவெடுத்தது. 2005-2006-ல் இதற்கான முயற்சி டாக்டர் மன்மோகன் சிங் அரசால் எடுக்கப்பட்டது. 2014-ல் நாடாளுமன்றத்தில் இதற்கான மசோதா தாக்கல் செய்யப்பட்டது. ஆனால், பாரதிய ஜனதா கட்சி நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்ய ஐந்து ஆண்டுகள் எடுத்துக்கொண்டது.

பொருளாதாரத்தில் நலிந்த பொதுப்பிரிவினருக்கு 10 சதவிகித இட ஒதுக்கீட்டை எதிர்ப்பது என்பது  சமூகநீதியாகாது.

எனவே, 10 சதவிகித இட ஒதுக்கீடு சரியான நடவடிக்கை எனக் கருதி தமிழக காங்கிரஸ் அதை இதயபூர்வமாக வரவேற்கிறது"   என்றார்.

logo
Kalki Online
kalkionline.com