கர்நாடகாவில் களமிறங்காத இரட்டை இலை - ஒரு வழியாக ஓய்ந்த கூட்டணி நாடகம்!
கர்நாடக சட்டமன்றத்தேர்தலில் போட்டியிடப்போவதாக ஓ.பன்னீர்செல்வம் சார்பில் புகழேந்தி களமிறங்கி, பா.ஜ.க தலைவர் எடியூரப்பாவை சந்தித்த நாள் தொடங்கி, ஒரு நீண்ட நெடியாக நாடகமாகவே தொடர்ந்து வந்தது. இத்தனை ஆண்டுகாலமாக இல்லாத அக்கறை அ.தி.மு.க தலைவர்களுக்கு ஏன் வந்தது என்றொரு ஆராய்ச்சியை எம்.ஜி.ஆர் தொண்டர்கள் ஆச்சர்யப்பட்டார்கள்.
கர்நாடகா சட்டமன்றத் தேர்தலில் முதலில் எடப்பாடி பழனிச்சாமி ஆர்வம் காட்டவில்லை. ஆனால், ஓ.பன்னீர்செல்வம் தரப்பு பா.ஜ.க தலைவர்களை சந்தித்து, தொகுதிகளை ஒதுக்குமாறு கேட்டவுடன்தான் எடப்பாடி அணி களத்தில் இறங்கியது. இரட்டை இலை சின்னம் யாருக்கு என்று இன்னொரு முறை மோதிப்பார்ப்பதுதான் ஓ.பன்னீர்செல்வம் தரப்பின் திட்டமாக இருந்தது.
ஒருவேளை கர்நாடகாவில் போட்டியிட்டால் பா.ஜ.கவும் தங்களை அரவணைத்துக் கொள்ளும். இரட்டை இலை சின்னம் தங்களுக்கே கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பில் எடப்பாடி பழனிசாமி தரப்பு தேர்தலில் போட்டியிடுவதாக அறிவிப்பதற்கு முன்பே ஓ.பன்னீர்செல்வம் தரப்பு வேட்பாளர்களை அறிவித்துவிட்டது.
பா.ஜ.கவுடன் கூட்டணி அமைத்து கர்நாடக சட்டமன்றத் தேர்தலை எதிர்கொள்வது என்றும், முதல் கட்டமாக 3 தொகுதிகளில் போட்டியிடுவதாகவும் பா.ஜ.கவுக்கு தகவல் அனுப்பியது. தமிழர்கள் அதிகம் வசிக்கும் பகுதிகளான புலிகேசிநகரில் நெடுஞ்செழியனும், காந்திநகரில் குமாரும், கோலார் தங்கவயலில் அனந்தராஜும் போட்டியிடுவதாக ஓ.பன்னீர்செல்வம் அறிவித்திருந்தார்..
அதன்படி, 3 பேரும் வேட்பு மனுக்களை தாக்கல் செய்தனர். இதில் புலிகேசிநகர் தொகுதி வேட்பாளர் நெடுஞ்செழியனின் மனு தள்ளுபடி செய்யப்பட்டது. காந்திநகரில் குமார், கோலார் தங்கவயலில் அனந்தராஜ் ஆகிய இருவரின் மனுக்களும் ஏற்கப்பட்டன. இரட்டை இலை சின்னம் இருவருக்கும் கிடைக்குமா என்கிற கேள்வி எழுந்த நிலையில், எடப்பாடி தரப்பினர் தேர்தல் ஆணையத்தை அணுகினார்கள்.
கர்நாடக மாநில தலைமை தேர்தல் அதிகாரிக்கு அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி எழுதிய கடிதத்தில் எங்களைத் தவிர வேறு யாருக்கும் இரட்டை இலை சின்னத்தை ஒதுக்கக்கூடாது என்று குறிப்பிட்டிருந்தார். இதைத் தொடர்ந்து சம்பந்தப்பட்ட இருவருக்கும் இரட்டை இலை சின்னம் கிடைக்காது என்பது உறுதியானது.
வேறு வழியின்றி, ஓ. பன்னீர் செல்வம் தரப்பு வேட்பாளர்களை வாபஸ் பெற்றுக் கொள்வதாக அறிவித்தது. இதற்கிடையே எடப்பாடி தலைமையிலான அ.தி.மு.க, தேர்தலில் போட்டியிட முடிவு செய்து, புலிகேசி நகர் சட்டமன்றத் தொகுதி வேட்பாளராக அன்பரன் என்பவரை அறிவித்தது. அவரது மனுவும் ஏற்றுக்கொள்ளப்பட்ட நிலையில் வேட்பாளரை வாபஸ் பெற்றிருக்கிறார்கள்.
டெல்லியிலிருந்து எடப்பாடி பழனிச்சாமியை தொடர்பு கொண்ட பா.ஜ.க மேலிடப் பொறுப்பாளர்கள், பா.ஜ.க கூட்டணிக்கு ஆதரவளிக்குமாறு
கேட்டுக்கொண்டதாகவும் அதற்கேற்ப வேட்பாளர் வாபஸ் பெறப்பட்டிருப்பதாகவும் அறிவிக்கப்பட்டது. எது எப்படியோ, கர்நாடக தேர்தலை முன்னிட்டு எடப்பாடி பழனிசாமி தரப்பும், ஓ.பன்னீர்செல்வம் தரப்பும் களத்தில் மோதிக்கொள்வது தவிர்க்கப்பட்டுள்ளது.
இரு தரப்புக்கும் கர்நாடக தேர்தலில் போட்டியிடுவதில் முதலில் ஆர்வமில்லை. ஆனாலும், இரட்டை இலைச் சின்னம் யாருக்கு கிடைக்கும் என்கிற பலப்பரீட்சைக்காக மோதிக்கொள்ள முடிவெடுத்தார்கள். ஆக, தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெறுவதெல்லாம் நோக்கமல்ல!