பா.ஜ.க.வை அலறவிடும் ஆம் ஆத்மி - கெத்துகாட்டும் கெஜ்ரிவால்

 

பா.ஜ.க.வை அலறவிடும் ஆம் ஆத்மி - கெத்துகாட்டும் கெஜ்ரிவால்  

குஜராத் தேர்தல் களம்

 

 டெல்லி முதல்வரும், ஆம் ஆத்மி கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளருமான அர்விந்த் கெஜ்ரிவால், குஜராத் சட்டமன்றத் தேர்தலில் 92 தொகுதிகளில் ஆம் ஆத்மி கட்சி  வெற்றி பெறும் என்று கூறியுள்ளார்.

 “இனி குஜராத் மாநிலம் பா.ஜ.க.வின் கோட்டை அல்ல.., இந்தத் தேர்தலுடன் பா.ஜ.க.வை குஜராத் மக்கள் வீட்டுக்கு அனுப்பிவிடுவார்கள்” எனக் கூறிய கெஜ்ரிவால், “சிறு கூடாரமாக கூட பா.ஜ.க. இருக்காது” எனத் தெரிவித்துள்ளார்.

பா.ஜ.க.வினர் தன் மீது கல் எறிந்தற்குக் காரணம், அவர்கள் குஜராத் தேர்தல் முடிவுகளை இப்போதே தெரிந்துகொண்டார்கள். தோல்வி பயத்தின் காரணமாக விரக்தியின் விளம்பில் பா.ஜ.க.வினர் இருப்பதாகவும் கெஜ்ரிவால் கூறினார். 

குஜராத் சட்டமன்றத் தேர்தல் டிசம்பர் 1 மற்றும் 5 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாக நடைபெறவுள்ளது.  அம்மாநிலத்தில் தேர்தல் பிரசாரங்கள் நேற்றுடன் முடிவடைந்தன.

கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக பா.ஜ.க.வும், காங்கிரஸும் மட்டுமே குஜராத்தில் தேர்தலை சந்தித்து வந்த நிலையில், தற்போது ஆம் ஆத்மியின் வருகையால் குஜராத் தேர்தல் அதகளப்பட்டு வருகிறது. 1990-க்கு பிறகு குஜராத் சட்டமன்றத் தேர்தல் இப்போதுதான் முதன்முறையாக மும்முனைப் போட்டியை சந்திக்கிறது.

ஆம் ஆத்மியை ஒரு பொருட்டாகவே எண்ணாமல் இருந்தன  இவ்விரு தேசிய கட்சிகளும். ஆனால், அர்விந்த் கெஜ்ரிவால் எடுத்த அரசியல் அஸ்திரங்களால் ஆம் ஆத்மிக்கு குஜராத் மக்கள் மத்தியில் ஆதரவு பெருகியுள்ளது. “தற்போது பா.ஜ.க.வை ஆட்சியில் இருந்து அகற்றக்கூடும்” என விவாதிக்கும் அளவுக்கு அங்கு விஸ்வரூபம் எடுத்திருக்கிறது ஆம் ஆத்மி.

 ஆட்சி மாற்றத்துக்கு ஏங்கும் குஜராத்  

சூரத்தில் நேற்று நடந்த இறுதிக்கட்ட பிரசாரத்தில் கலந்துகொண்ட அர்விந்த் கெஜ்ரிவால், அதன்பின் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில்,

குஜராத்தின் அனைத்து தொகுதிகளிலும் ஆம் ஆத்மி வேட்பாளர்களுக்கு மக்கள் பேராதரவை தெரிவித்து வருகின்றனர். எங்கள் கட்சி மீது குஜராத் மக்கள் இந்த அளவுக்கு நம்பிக்கை வைத்திருப்பார்கள் என்று நான் எதிர்பார்க்கவில்லை. ஆட்சி மாற்றத்திற்காக குஜராத் மக்கள் ஏங்கி வருவது அவர்களை பார்க்கும் போதே தெரிகிறது. அந்த ஆட்சி மாற்றத்தை கொடுக்கக்கூடிய கட்சியாக ஆம் ஆத்மி இருக்க வேண்டும் என அவர்கள் விரும்புகின்றனர்.

 ஆம் ஆத்மிக்கு 92 சீட் உறுதி

தேர்தல் இன்னும் நடக்கவில்லை. இந்த நேரத்தில் தேர்தல் முடிவுகளை கூறுவது சரியாக இருக்காது. இருந்தாலும் கூறுகிறேன். குஜராத்தில் மொத்தமுள்ள 182 தொகுதிகளில் ஆம் ஆத்மி வெற்றி பெறும். இதில் எந்த சந்தேகமும் இல்லை. இன்னும் துல்லியமாக சொல்ல வேண்டுமானால், முக்கியத்துவம் வாய்ந்த சூரத் மாவட்டத்தில் உள்ள 12 தொகுதிகளில் 8 தொகுதிகளில் ஆம் ஆத்மி வெற்றி பெறும்.    

 பா.ஜ.க.ஆட்சிக்கு வரமுடியாது

இந்த தேர்தலுடன் பா.ஜ.க.வை குஜராத் மக்கள் வீட்டுக்கு அனுப்பி விடுவார்கள். இது பா.ஜ.க.வினருக்கும் நன்கு தெரியும். அதனால்தான், தோல்வி பயத்தில் என் மீதும், எங்கள் வேட்பாளர்கள் மீதும் பா.ஜ.க.வினர் கல் எறிந்து வருகின்றனர்.

எங்கள் ஆம் ஆத்மி கட்சி குஜராத்தில் இந்த தேர்தலுடன் பா.ஜ.க.வுக்கு முற்றுப்புள்ளி வைக்கும்.  “இனி  பா.ஜ.க ஒருபோதும் ஆட்சிக்கு வரமுடியாது” என அர்விந்த் கேஜ்ரிவால் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறினார்.

Other Articles

No stories found.
Kalki Online
kalkionline.com