தில்லி மேயராக ஆம் ஆத்மி கட்சியின் ஷெல்லி ஓபராய் போட்டியின்றி தேர்வு!

தில்லி மேயராக ஆம் ஆத்மி கட்சியின் ஷெல்லி ஓபராய் போட்டியின்றி தேர்வு!

ஆம் ஆத்மி கட்சியைச் சேர்ந்த ஷெல்லி ஓபராய் புதன்கிழமை தில்லி மேயராக போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டார். அவரை எதிர்த்து போட்டியிட மனு தாக்கல் செய்த ஷிகா ராய், மனுவை கடைசி நேரத்தில் வாபஸ் பெற்றதால் ஓபராய் மீண்டும் மேயராக போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டார்.

தில்லி மாநகராட்சிக்கு நிலைக்குழு உறுப்பினர்களை தேர்வு செய்வதற்கான தேர்தல் நடத்தப்படாததால் இந்த முடிவை மேற்கொண்டதாக ஷிகா ராய் தெரிவித்தார்.

தற்போது துணை மேயராக உள்ள ஆலே முகமது இக்பாலும் போட்டியின்றி மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவரை எதிர்த்து போட்டியிடுவதாக இருந்த பா.ஜ.க. வேட்பாளர் சோனி பால் தமது வேட்பு மனுவை வாபஸ் பெற்றார்.

தில்லி மேயர் பதவிக்கான தேர்தலில் தற்போதைய மேயர் ஓபராய்க்கும் பா.ஜ.க.வின் ஷிகா ராய்க்கும் இடையிலான போட்டியாகத்தான் இருந்தது. ஆனால், கடைசி நேரத்தில் ராய் போட்டியிலிருந்து விலகிவிட்டார்.

தில்லி மாநகராட்சியில் ஆம் ஆத்மி கட்சிதான் ஆளுங்கட்சியாக உள்ளது. கடந்த பிப்ரவரி மாதம் 22 ஆம் தேதி நடந்த தேர்தலில் ஷெல்லி ஓபராய் முதல் முறையாக மேயராகத் தேர்வானார். மேயர் தேர்தல் நடத்த மூன்று முறை முயன்றும் அது நடைபெறாததால் நான்காவது முறை நடந்த தேர்தலில் ஓபராய் வெற்றிபெற்றார். நியமன உறுப்பினர்களுக்கு மேயர் தேர்தலில் வாக்களிக்க பா.ஜ.க. உரிமை கோரியாதால் குழப்பநிலை நீடித்த்தால் மூன்று முறையும் தேர்தல் நடைபெறாமல் கூட்டம் நடந்து முடிந்தது.

முதல் முறை நடைபெற்ற மேயர் தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி சார்பில் போட்டியிட்ட ஷெல்லி ஓபராய், பா.ஜ.க. வேட்பாளரான ரேகா குப்தாவைவிட 34 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றிபெற்றார். மொத்தம் பதிவான 266 வாக்குகளில் ஷெல்லி ஓபராய்க்கு 150 வாக்குகளும், அவரை எதிர்த்து போட்டியிட்ட ரேகா குப்தாவுக்கு 116 வாக்குகளும் கிடைத்தன.

தில்லி மாநகராட்சி மேயர் பதவி என்பது சுழற்சி முறையில் ஒவ்வொரு ஆண்டும் தேர்ந்தெடுக்கப்படும் பதவியாகும். இதில் முதல் ஆண்டு மேயர் பதவி பெண்களுக்கு ஒதுக்கப்படும். இரண்டாவது முறை யார் வேண்டுமானாலும் போட்டியிடலாம். மூன்றாவது முறை இடஒதுக்கீடு அடிப்படையில் மேயர் தேர்ந்தெடுக்கப்படுவார்.

மீதமுள்ள இரண்டு ஆண்டுகளிலும் யார் வேண்டுமானாலும் போட்டியிட்டு மேயர் பதவிக்கு வரலாம். ஒவ்வொரு நிதியாண்டின் முடிவிலும் தில்லி மாநகராட்சிக்கு புதிய மேயர் தேர்ந்தெடுக்கப்படுவார்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com