அ.தி.மு.க 3.0 - மாநாடு, சுற்றுப்பயணம், கூட்டணி... எடப்பாடி தலைமையில் ஏகப்பட்ட சுறுசுறுப்பு காட்டும் அ.தி.மு.க!
திருச்சியில் மாநாடு, பா.ஜ.கவுடன் கூட்டணி, சசிகலா, தினகரனையும் அழைப்போம் என்று ஓ.பன்னீர்செல்வம் அடுத்த அதிரடிக்கு தயாராகிக் கொண்டிருக்கும் நிலையில் எடப்பாடி தலைமையிலான அ.தி.மு.க தடாலடியாக சில முடிவுகளை எடுத்திருக்கிறது. மதுரையில் மாநில மாநாடு, நாடாளுமன்றத் தேர்தலில் அ.தி.மு.க தலைமையில்தான் கூட்டணி என்று சுறுசுறுப்பு காட்டுகிறது.
அ.தி.மு.கவின் பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்ந்தெடுக்கப்பட்டதற்கு ஒப்புதல் வழங்குவதற்காக நேற்று அ.தி.மு.கவின் செயற்குழுக் கூட்டம் கூடியது. இதில் வரும் ஆகஸ்ட் மாதம் 20 ஆம் தேதி மதுரையில் மாநில மாநாடு நடத்துவதற்கு முடிவு செய்யப்பட்டுள்ளது.
நேற்று ராயப்பேட்டையில் உள்ள அதிமுக கட்சி அலுவலகத்தில் நடைபெற்ற கூட்டத்தில் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, அவைத்தலைவர் தமிழ் மகன் உசேன், முன்னாள் அமைச்சர்கள், அதிமுக எம்.எல்.ஏ.க்கள், அதிமுக மாநில நிர்வாகிகள் உள்ளிட்ட 300 செயற்குழு உறுப்பினர்கள் பங்கேற்றார்கள்.
செயற்குழுவில் சில முக்கியமான தீர்மானங்களும் நிறைவேற்றப்பட்டன. அதிமுக பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டதற்கு அதிமுக செயற்குழு ஒப்புதல் அளிப்பதுடன், கூட்டணி, கொள்கை ரீதியான முடிவுகளை மேற்கொள்ளவும் எடப்பாடி பழனிசாமிக்கு முழு அதிகாரம் வழங்கி செயற்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
அடுத்து வரும் ஆறு மாதங்களில் 2 கோடி புதிய உறுப்பினர்களை அதிமுகவில் இணைப்பதும், நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுக தலைமையிலான கூட்டணி வெற்றி பெற உழைக்க வேண்டும் என்றும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. கழகத்தின் சார்பில் பூத் கமிட்டிகளை விரைந்து அமைக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.
திமுக அரசு பதவியேற்ற நாள் முதல் தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு சீர்குலைவு, கொலை, கொள்ளை, திருட்டு, செயின் பறிப்பு, பாலியல் வன்கொடுமை முதலான சட்டவிரோதச் செயல்களை கண்டித்தும், தமிழ் நாட்டின் கடன் சுமையைக் குறைப்போம் என்று வாக்குறுதி அளித்து, கடன் அளவை குறைக்காமல்; மேலும் 2.5 லட்சம் கோடி ரூபாய் கடன் சுமையை அதிகப்படுத்தி உள்ள தி.மு.க அரசுக்கு கண்டனம் தெரிவித்தும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருக்கிறது.
தீய சக்தி தி.மு.கவுடன் ரகசிய உறவு வைத்துக்கொண்டு கழகத்திற்கு துரோகம் இழைத்து வருபவர்களுக்கு, கழகப் பொதுச் செயலாளர் அவர்கள் தலைமையில் ஒன்றிணைந்து, தக்க பாடம் புகட்டிட முடிவெடுக்கப்பட்டுள்ளது. மக்கள் நலன் கருதி செயல்படுத்தப்பட்ட நடந்தாய் வாழி காவேரி திட்டம் மற்றும் காவேரி-கோதாவரி இணைப்புத் திட்டத்தை உடனடியாக நடைமுறைப்படுத்திட, மத்திய அரசுக்கு தி.மு.க அரசு அழுத்தம் தரவேண்டும் என்றும் குறிப்பிட்டப்பட்டுள்ளது.
எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா வரிசையில் எடப்பாடி பழனிசாமி அதிமுகவின் 3-வது அத்தியாயம் எனவும் குறிப்பிட்டு தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இப்போதுதான் பொதுச்செயலாளராக ஆகியிருக்கிறார். அதற்குள் தன்னை எம்.ஜி.ஆர், ஜெயலலிதா ரேஞ்சுக்கு ஒப்பிட்டுக் கொள்கிறாரே.. அண்ணாமலை தலைமையிலான பா.ஜ.கவை ஏன் தொடர்ந்து உதாசீனப்படுத்துகிறார் என்று கமலாலயம் வட்டாரத்தில் குறைபட்டுக் கொள்கிறார்கள்.