திருமாவளவனை நெருங்கும் அ.தி.மு.க + பா.ஜ.க - இணைந்து செயல்பட தயார் என்று அறிவிப்பு!

திருமாவளவனை நெருங்கும் அ.தி.மு.க + பா.ஜ.க - இணைந்து செயல்பட தயார் என்று அறிவிப்பு!

தி.மு.க கூட்டணியில் இருந்தாலும் மக்களை பாதிக்கும் பிரச்னைகளில் கட்சிகளுடன் இணைந்து செயல்பட தயார் என்று சில நாட்களுக்கு முன்னர் விடுதலைச் சிறுத்தைகள் திருமாவளவன் அறிவித்ததைத் தொடர்ந்து, பா.ஜ.க தரப்பிலும் அ.தி.முக தரப்பிலும் திருமாவளவனுக்கு ஆதரவாக குரல்கள் எழுந்துள்ளன.

மதுவிலக்கு கொள்கையில், அ.தி.மு.க.விற்கு உண்மையிலேயே ஈடுபாடு இருந்தால் மதுவிலக்கை நடைமுறைப்படுத்தச் சொல்லி போராட்டத்தை அறிவிக்கட்டும். அப்படி அறிவித்தால் நிச்சயமாக அவர்களோடு சேர்ந்து போராடுவதில் எங்களுக்கு எந்த தயக்கமும் இல்லை. தேர்தல் கூட்டணி என்பது வேறு, மக்கள் நலன் சார்ந்த போராட்டக்களம் என்பது வேறு என்று சென்ற வாரம் திருமாவளவன் பேசியிருந்தார்.

இந்நிலையில் அ.தி.மு.க தலைமையிலான கூட்டணியில் சேர்வதற்கு திருமாவளவன் தயாராகவே இருக்கிறார். ஆனால், பா.ஜ.கவை மீறி அவரை கூட்டணியில் சேர்த்துக்கொள்வார்களா என்கிற கேள்வி எழுந்தது. ஆனால், பா.ஜ.கவினரோ திருமாவளவனுக்கு எதிரான நிலைப்பாட்டில் இல்லையென்பது தெளிவாகியிருக்கிறது.

நேற்று பத்திரிக்கையாளர்களை சந்தித்த தமிழக சட்டமன்ற பா.ஜ.க. தலைவரும், நெல்லை சட்டமன்ற தொகுதி எம்.எல்.ஏ.வுமான நயினார் நாகேந்திரன். பாராளுமன்ற தேர்தலை பொறுத்தமட்டில் தி.மு.க.வை எதிர்க்க கூடிய அனைத்து கட்சிகளும் ஒரே அணியில் சேர வேண்டும். அப்படி ஒன்றுபட்டு தேர்தல் களத்தை சந்தித்தால் தான் தி.மு.க.வை தோற்கடிக்க முடியும். திருமாவளவன் அ.தி.மு.க. கூட்டணியில் சேருவாரா? என்பது பற்றி அவர்தான் கருத்து சொல்ல வேண்டும் என்று பேசியிருந்தார்.

இந்நிலையில் இன்று பத்திரிக்கையாளர்களை சந்தித்த முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர், தமிழகத்தில் சட்டம், ஒழுங்கு திருப்தியாக இல்லை என்று தி.மு.க. கூட்டணிக் கட்சியில் உள்ள திருமாவளவன் கூறி இருப்பது வரவேற்கத்தக்கது என்றும் கள்ளக்குறிச்சி விவகாரத்தில் கூட்டணிக கட்சிகள் மௌனமாக இருப்பதாக எடப்பாடி பழனிச்சாமி குற்றம் சாட்டியிருந்த நிலையில் திருமாவளவன் வாய் திறந்து பேசி இருப்பது பாராட்டுதலுக்கு உரியது என்றார்.

விடுதலைச் சிறுத்தைகள் கட்சி, தி.மு.க கூட்டணியிலிருந்து விலகினால் அவரை ஏற்றுக்கொள்ள பா.ஜ.கவும், அ.தி.மு.கவும் தயாராகவே இருப்பது தெரிகிறது. ஆனால், பா.ஜ.கவுடனும், பா.ம.கவுடனும் எந்நாளும் கூட்டணி சேரப்போவதில்லை என்று திருமாவளவன் ஏற்கனவே அறிவித்திருக்கிறார்.

இந்நிலையில் பா.ஜ.கவினரும் அ.தி.மு.கவினரும் தெரிவித்து வரும் கருத்துக்கள் குறித்து விடுதலைச் சிறுத்தைகள் கட்சி வட்டாரத்தை தொடர்பு கொண்டபோது கூடிய விரைவில் இது குறித்து திருமாவளவன் தெளிவுப்படுத்துவார் என்றார்கள். காத்திருப்போம்!

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com