
தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவியை இன்று சந்தித்த எதிர்க்கட்சித் தலைவரும் அதிமுக இடைக்கால பொதுச் செயலாளருமான எடப்பாடி பழனிசாமி பரபரப்புப் பேட்டி அளித்துள்ளார்.
எடப்பாடி பழனிசாமி, இன்று நண்பகல் 12.45 மணியளவில் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவியை, ஆளுநர் மாளிகை ராஜ்பவனில் இன்று சந்தித்து பேசினார். அப்போது அதிமுக முன்னாள் அமைச்சர்கள் எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம், நத்தம் விஸ்வநாதன், கே.பி.முனுசாமி, ஜெயக்குமார் உள்ளிட்டோரும் எடப்பாடி பழனிசாமியுடன் ஆளுநரை சந்தித்தனர்.
ஆளுநருடனான சந்திப்பிற்குப் பின் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களை சந்தித்தார். “தமிழகத்தில் நடைபெறும் மோசமான சம்பவங்களை ஆளுநரின் கவனத்திற்கு கொண்டு சென்றோம்.
திமுக அரசு அமைந்த 18 மாத காலத்தில் சட்ட ஒழுங்கு அடியோடு சீர் குலைந்துள்ளது. கொலை, கொள்ளை, திருட்டு, வழிப்பறி போன்ற குற்ற சம்பவங்கள்தான் நடைபெற்று வருகிறது. திறமையற்ற முதலமைச்சர் தமிழகத்தை ஆட்சி செய்து வருகிறார்.
கோவை குண்டு வெடிப்பு சம்பவம் தொடர்பாக ஏற்கனவே மத்திய உளவுத்துறை, மாநில அரசுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது. காவல்துறை சரியான நடவடிக்கை எடுக்காத காரணத்தினால் குண்டு வெடிப்பு சம்பவம் நடைபெற்றது.
கள்ளக்குறிச்சியில் மாணவி மர்மமான முறையில் உயிரிழந்தார். அதுகுறித்து காவல்துறையும், மாவட்ட நிர்வாகமும் உரிய விசாரணை மேற்கொள்ளவில்லை.
தமிழகத்தில் போதைப் பொருள் தங்கு தடையின்றி கிடைக்கிறது. மாணவர்களிடையே போதைப்பொருள் பழக்கம் அதிகரித்துள்ளது. அரசின் அனைத்து துறைகளிலும் லஞ்சம் தலைவிரித்தாடுகிறது என்று எடப்பாடி பழனிசாமி குற்றம் சாட்டினார்.
திமுக ஆட்சியில் அரசு மருத்துவமனைகளில் மருந்து தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. அதிமுக ஆட்சியில் தடையின்றி மருந்துகள் விநியோகிக்கப்பட்டன. மருந்து தட்டுப்பாடு வருவதற்கு திறமையற்ற இந்த அரசாங்கம் தான் காரணம். உள்ளாட்சி அமைப்புகளின் நிதியை திமுக அரசு தவறாக பயன்படுத்தி வருகிறது. டெண்டர்களில் முறைகேடு நடைபெறுகிறது. வேலை நடைபெறவில்லை. ஆனால் பணத்தை வழங்குகின்றனர்.
டாஸ்மாக்கிலும் முறைகேடு நடைபெறுகிறது. 24 மணி நேரமும் பார்கள் இயங்கி கொண்டிருக்கின்றன. சட்டவிரோதமாகவும் பார்கள் நடத்தப்பட்டு வருகின்றன.
ஆன்லைன் ரம்மி தடை சட்டத்திற்கு ஒப்புதல் அளிக்க ஆளுநரிடம் வலியுறுத்தினோம்.
திமுக, ஆளுநரை விமர்சிப்பது வாடிக்கை. ஆளுநரின் செயல்பாடு நன்றாக உள்ளது. ஆளுநர் தான் திமுகவை தட்டி கேட்க வேண்டும்” என்று எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.