காங்கிரஸ் அல்லாத மூன்றாவது அணி அமைக்க அகிலேஷ் யாதவ் முயற்சி; கரை சேருமா?
காங்கிரஸ் அல்லாத எதிர்க்கட்சிகளின் கூட்டணியை அமைக்க சமாஜ்வாடி, திரிணாமுல், பிஜு ஜனதா தளம் உள்ளிட்ட கட்சிகள் ஒப்புக் கொண்டிருப்பதாக முதல் கட்ட தகவல்கள் வெளியாகின்றன. அகிலேஷ் யாதவ், மம்தா பானர்ஜியை சந்தித்த நிகழ்வும், அடுதது நவீன் பட்நாயக்கை சந்திக்கவுள்ளதாகவும் டெல்லி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
காங்கிரஸ் அல்லாத மாநிலக் கட்சிகள் ஒன்றிணைய வேண்டும் என்கிற முன்னெடுப்புகள் பல மாதங்களாக தொடர்ந்து கொண்டிருக்கிறது. ஆனால், அதில் பெரிய அளவில் முன்னேற்றம் இல்லை. மேற்கு வங்கத்திலும் உத்திரப் பிரதேசத்திலும் காங்கிரஸ் கட்சியோட நெருங்கி செயல்படுவதற்கு சமாஜ்வாடி, திரிணமுல் உள்ளிட்ட கட்சிகளுக்கு தயக்கமிருக்கிறது.
இந்நிலையில் மூன்றாவது அணி அமைப்பது தொடர்பாக கொல்கத்தாவில் சமாஜ்வாடி கட்சியின் தலைவர் அகிலேஷ் யாதவ், திரிணாமுல் காங்கிரஸ் கட்சித் தலைவரும் மேற்கு வங்காள முதலமைச்சருமான மம்தா பானர்ஜியை சந்தித்து பேசினார். மூன்றாவது அணியில் யாரையெல்லாம் இணைப்பது குறித்து முதலில் பேசப்பட்டிருக்கிறது.
முதல் கட்டமாக அகிலேஷ் யாதவ், ஒடிசா முதலமைச்சரும் பிஜு ஜனதா தளம் தலைவருமான நவீன் பட்நாயக்கை அடுத்த வாரம் சந்திக்க உள்ளார். அதற்கு பின்னர் தெலுங்கானா முதல்வரும் பாரதிய ராஷ்ரிய கட்சியின் தலைவருமான சந்திரசேகர் ராவை சந்திக்க உள்ளார்கள். சந்திரசேகர் ராவ், காங்கிரஸ் கட்சியோடு விலகி நின்றாலும் கம்யூனிஸ் கட்சிளோடு கூட்டணி சேருவதற்கு ஆர்வம் காட்டுகிறார். மம்தா பானர்ஜியோடு இணைந்து செயல்படுவதற்கான வாய்ப்புகள் குறைவு என்கிறார்கள்.
மத்தியில் பாஜகவுக்கு எதிராக வலுவான கூட்டணியை அமைத்து தேர்தலை எதிர்கொள்ள வியூகங்கள் வகுக்கப்படுகின்றன. தேர்தல் முடிவுகளுக்கு ஏற்ப, கூட்டணியில் மாற்றம் ஏற்படவும் வாய்ப்புண்டு. பா.ஜ.கவை, காங்கிரஸ் கட்சியை விட வலுவாக எதிர்க்கக்கூடியவர்களாக இடதுசாரிகள் மட்டுமே இருந்து வருகிறார்கள். காங்கிரஸ் அல்லாத கட்சிகளுடன் கூட்டணி சேர்வது லட்சியம் என்றாலும், கம்யூனிஸ் கட்சிகள் அல்லாத கூட்டணிக்கு முயற்சி செய்வது சாத்தியமேயில்லை என்கிறார்கள், மூத்த பத்திரிக்கையாளர்கள்.
இரண்டு வாரங்களுக்கு முன்னர் நடைபெற்ற தமிழக முதல்வர் ஸ்டாலினின் 70வது பிறந்தநாளில் சமாஜ்வாடி கட்சியின் தலைவர் அகிலேஷ் யாதவ் கலந்து
கொண்டார். தேசிய அளவில் தி.மு.க முன்னெடுக்கும் கூட்டணியில் அகிலேஷ் யாதவ் பங்கு வகிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது. இந்நிலையில் ஸ்டாலினை தவிர்த்துவிட்டு, மம்தா பானர்ஜியிடம் மூன்றாவது அணி குறித்த பேச்சுகளை அகிலேஷ் யாதவர் ஆரம்பித்தது ஏன் என்கிற கேள்வி எழுகிறது.
தன்னுடைய பிறந்த நாள் கூட்டத்தில் தமிழக முதல்வரும் தி.மு.க தலைவருமான ஸ்டாலின், பா.ஜ.கவை எதிர்க்கும் கட்சிகள் அனைத்தும் தேர்தல் கணக்குகளை புரிந்துகொண்டு ஒன்றிணைய வேண்டும். காங்கிரஸ் இல்லாத கூட்டணி கரை சேராது என்று பேசியிருந்தார். அதே மேடையில்தான் அகிலேஷ் யாதவ் இருந்திருந்தார். காங்கிரஸ் அல்லாத மூன்றாவது அணி கரை சேருமா, சேராது என்பது வெகுவிரைவில் தெரிந்துவிடும்.