அ.தி.மு.கவுடனான கூட்டணி முறிந்ததா? அண்ணாமலையின் அதிரடி பேச்சு, குழப்பத்தில் கமலாலயம்!

அ.தி.மு.கவுடனான கூட்டணி முறிந்ததா? அண்ணாமலையின் அதிரடி பேச்சு, குழப்பத்தில் கமலாலயம்!

தமிழ்நாட்டில் தனித்து போட்டியிட்டால் மட்டுமே கட்சியை வளர்க்க முடியும். அ.தி.மு.கவுடன் கூட்டணி சேர்வது என்றொரு நிலைப்பாட்டை டெல்லி தலைமை எடுக்கும் பட்சத்தில் தலைவர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு சாதாரண தொண்டனாக இருப்பேன் என்று அண்ணாமலை அதிரடியாக அறிவித்திருக்கிறார்.

அண்ணாமலையின் அதிரடி பேச்சு, பா.ஜ.க தலைவர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியிருக்கிறது. அண்ணாமலையின் பேச்சுக்கு வரவேற்பு இருந்தாலும் இன்னொரு பக்கம் கடுமையான எதிர்ப்பும் கிளம்பியிருக்கிறது. பா.ஜ.கவின் சீனியர் நிர்வாகிகள், அண்ணாமலை இது குறித்து தெளிவாக விளக்கமளிக்கும்படி கேட்டுக்கொண்டிருக்கிறார்கள்.

தமிழக பா.ஜ.க. மாநில நிர்வாகிகள் மற்றும் அணி தலைவர்கள் கூட்டம் நடைப்றறது. இதில் மாநில தலைவர் அண்ணாமலை கலந்து கொண்டார். அமைப்பு பொதுச்செயலாளர் கேசவ விநாயகம், பூத் கமிட்டி அமைப்பது பற்றியும், கட்சிக்கு நிதி வசூலிப்பது குறித்தும் பேசினார். மாநில நிர்வாகிகள் மற்றும் கட்சியின் பல்வேறு முக்கிய நிர்வாகிகள் பங்கேற்ற கூட்டத்தில், யாரும் எதிர்பாராத வகையில் கூட்டணி பற்றி அண்ணாமலை பேசியிருக்கிறார்.

தமிழகத்தில் நாம் தனியாக இருந்தால் மட்டுமே கட்சியை வளர்க்க முடியும். கூட்டணி நிலைப்பாட்டை எடுத்தால், தலைவர் பதவியை விட்டு விலகிவிட்டு, சாதாரண தொண்டனாக தொடர்வேன். பிரதமர் நரேந்திர மோடியை சந்திப்பதற்கு நேரம் கேட்டு இருக்கிறேன். கர்நாடக சட்டமன்ற தேர்தல் நடைபெற இருப்பதால் அது சம்பந்தப்பட்ட பணிகளில் பிஸியாக இருக்க வேண்டியிருக்கிறது என்று குறிப்பிட்டிருக்கிறார்.

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் அ.தி.மு.கவுக்கு மட்டுமல்ல, பா.ஜ.க உள்ளிட்ட கட்சிகளுக்கும் திருப்புமுனையாகவே இருந்திருக்கிறது. இடைத்தேர்தல் அறிவிப்பு வந்ததும் அ.தி.மு.க - பா.ஜ.க மோதல்கள் ஆரம்பித்துவிட்டன. இரட்டை இலை சின்னம் முடக்கப்பட்டுவிடுமோ என்கிற அ.தி.மு.கவின் அச்சத்தை பா.ஜ.க உள்ளிட்ட கட்சிகள் பயன்படுத்திக்கொண்டதாக நடுநிலையான அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்திருந்தார்கள்.

ஓ.பி.எஸ் தரப்பு, தானும் போட்டியிட தயாராக இருப்பதாக அறிவித்ததும், அதை உற்சாகப்படுத்தும்படியாக பா.ஜ.கவினர் நடந்து கொண்டதும் எடப்பாடி தரப்பை மிகவும் காயப்படுத்தியது. தேர்தல் முடிவுகளுக்கு பின்னர் அ.தி.மு.க - பா.ஜ.க கூட்டணியில் இருந்த உரசல்கள் வெட்ட வெளிச்சமாகின. ஓ.பி.எஸ்ஸை பா.ஜ.க தரப்பு அ.தி.மு.கவில் திணிப்பதாக எடப்பாடி ஆதரவாளர்கள் வெளிப்படையாகவே பேச ஆரம்பித்தார்கள்.

இந்நிலையில் கட்சி விழாவுக்காக கிருஷ்ணகிரி வந்திருந்த ஜெ.பி நட்டா, கூட்டணிக் கட்சியினரோடு பா.ஜ.க தொண்டர்கள் இணைந்து செயல்பட வேண்டும் என்று பேசியிருந்தார். வரும் நாடாளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் பா.ஜ.க. கூட்டணி அமோக வெற்றி பெறும் என்று குறிப்பிட்டிருந்தார். அதே மேடையில் தமிழக தலைவர் அண்ணாமலையும் பங்கேற்றிருந்தார்.

இதன் காரணமாக கமலாலய வட்டாரங்களில் குழப்பம் ஏற்பட்டிருக்கிறது. அ.தி.மு.க உடனான கூட்டணி தொடர்பாக தேசிய தலைமைதான் முடிவு எடுக்கும் என்று பா.ஜ.கவின் சட்டமன்ற உறுப்பினரான வானதி சீனிவாசன் பேசியிருககிறார். பா.ஜ.கவின் உயர்மட்ட குழுவில்தான் இது குறித்து பேசவேண்டுமே தவிர மாநில அளவில் முடிவு செய்ய வேண்டிய விஷயமல்ல. நாடாளுமன்றத் தேர்தல் கூட்டணி பற்றியெல்லாம் பேசுவதற்கு இது சரியான நேரமும் அல்ல என்று தெரிவித்திருக்கிறார்.

அட, நல்லாத்தான் போயிட்டிருந்தது... திடீர்னு என்னாச்சு என்று அறிவாலய வட்டாரங்களே ஆச்சர்யப்படுமளவுக்கு கமலாயத்தில் கூட்டணி குழப்பங்கள் உச்சத்தில் இருக்கின்றன.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com