ஓ.பி.எஸ் உடன் கூட்டணியா? டி.டி.வி தினகரன் சூசகம்!

ஓ.பி.எஸ் உடன் கூட்டணியா? டி.டி.வி தினகரன் சூசகம்!

சிறையிலிருந்து சசிகலா வெளியானபோது பரபரப்பு காட்டிய டி.டி.வி தினகரனின் அம்மா ம.மு.க, ஸ்டாலின் ஆட்சிக்கு வந்த பின்னர் சைலண்ட் மோடுக்கு போய்விட்டது. அ.தி.மு.கவில் ஒற்றைத் தலைமை பிரச்சனை கொடி கட்டிப் பறந்த காலத்தில் கூட அமைதியாக இருந்து வேடிக்கை பார்த்தார்கள்.

இந்நிலையில் எம்.ஜி.ஆர் மற்றும் ஜெயலலிதாவின் உண்மையான தொண்டர்கள் ஓரணியில் திரள்வோம் என்று பேசியிருப்பதோடு, ஜெயலலிதா பாணியில் தி.மு.கவை தீய சக்தி என்று குறிப்பிட்டிருக்கிறார். கடந்த ஓராண்டாகவே தி.மு.க ஆட்சியை விமர்சிப்பதை தவிர்த்து வந்த தினகரனின் நிலைப்பாட்டில் மாற்றம் தெரிகிறது.

'எம்.ஜி.ஆர் பிறந்தநாள் விழாவையொட்டி செய்தியாளர்களை சந்தித்த தினகரன், அ.தி.மு.க யாருக்கு என்னும் வழக்கு, நீதிமன்ற விசாரணையில் இருக்கிறது. எம்.ஜி.ஆர், அம்மாவின் உண்மையான தொண்டர்கள் அனைவரும் ஒருங்கிணைந்து தேர்தலைச் சந்திப்போம். சட்டமன்றம், நாடாளுமன்றம் என எந்த தேர்தல் ஆனாலும் சரி. 'தீய சக்தி' என எம்.ஜி.ஆரால் அடையாளம் காட்டப்பட்ட தி.மு.க-வின் ஆட்சியை முடிவுக்குக் கொண்டு வருவோம்' என்றார்.

'நாடாளுமன்ற தேர்தல் வருவதால் கட்சியைப் பலப்படுத்தவும், பூத் கமிட்டிகளை அமைக்கவும் தமிழ்நாடு முழுவதும் பணிகளை ஆரம்பித்திருக்கிறோம். ஆண்டு இறுதிக்குள் கூட்டணி பற்றிய முடிவை எடுப்போம். அம்மாவின் தொண்டர்கள் அனைவரும் ஓரணியில் திரள வேண்டும் என ஓ.பி.எஸ் சொல்லி இருக்கிறார்' அது தான் எங்களின் கருத்து என்றார்.

ஆளுநர் பேச்சு பற்றிய சர்ச்சையில் கருத்து தெரிவித்த தினகரன், 'தமிழ்நாடு என்பதை தமிழகம் என சொல்ல வேண்டும் என ஒரு ஆளுநரே தேவையில்லாமல் அரசியல் பேசுகிறார். மத்திய அரசுக்கு தமிழ்நாட்டில் கெட்ட பெயர் வரும் வகையில் செயல்படுகிறார்' என்றார்.

மத்திய அரசுக்கு கெட்ட பெயரா? அப்போ, ஆளுநர் பேசாவிட்டால் நல்ல பெயர் கிடைக்கும் என்று தினகரன் சொல்ல வர்றாரா? நோட் பண்ணுங்கப்பா!

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com