கர்நாடக சட்டமன்றத் தேர்தல் பிரச்சாரம், கோடை வெயிலை விட சூடாகியிருக்கிறது. முன்பு போல் தெருவெங்கும் போஸ்டர், விளம்பரங்கள், பொதுக்கூட்டங்கள் என்னும் நிலையிலிருந்து முற்றிலும் மாறி, இம்முறை முழுவதும் ஊடகம், இணையம் என்று தேர்தல் பிரச்சாரம் வேறு கட்டத்தை எட்டியிருக்கிறது.
பா.ஜ.க அரசுக்கு எதிராக மக்கள் மத்தியில் பெரிய அளவு கோபம் இல்லையென்றாலும், அதிருப்தி இருப்பது உண்மைதான். முதல் கட்ட கருத்துக் கணிப்புகள் அனைத்தும் காங்கிரஸ் கட்சி மீண்டும் ஆட்சிக்குப் பிடிக்கும் என்பதையே வெவ்வேறு வார்த்தைகளில் வெளிக்காட்டியுள்ளன.
சித்தாராமையா, டி.கே. சிவகுமார் என இரட்டைக் குழல் துப்பாக்கியாக வெடித்து பிரச்சாரத்தை பரபரப்பாக வைத்திருக்கிறார்கள். கர்நாடக காங்கிரஸ் கட்சியில் சேருவதற்கு பா.ஜ.கவிலிருந்தும் ஜனதா தளம் கட்சியிலிருந்தும் ஆட்கள் வருகிறார்கள். தேர்தலில் சீட் கிடைக்கும் என்னும் நம்பிக்கையில் வருபவர்கள், ஒருவேளை கிடைக்காவிட்டால் மனம் தளராமல் தொடர்ந்து காங்கிரஸ் கட்சிக்கு பிரச்சாரம் செய்து வருகிறார்கள்.
சரிவை நோக்கிச் செல்லும் பா.ஜ.கவை தூக்கிப் பிடிப்பது முதல்வர் பசவராஜ் பொம்மையின் அதிரடி பேச்சுகளும், அறிவிப்புகளும்தான் என்பதில் சந்தேகமில்லை. தினமும் ஒரு அதிரடி பேச்சு, அறிவிப்பு என காங்கிரஸ் கூடாரத்தை ஒற்றை ஆளாக எதிர்கொள்கிறார். சித்தாராமையா, டி.கே சிவகுமார் என இரு தரப்பையும் முதல்வரே நேரடியாக எதிர்கொள்கிறார். அவரது பேச்சில் அதிரடி, கிண்டல் அத்தனையும் தெறிக்கிறது.
‘பா.ஜ.கவின் அணை உடைந்து, தண்ணீர் காலியாகி இருப்பதாக டி.கே.சிவக்குமார் கூறி இருக்கிறார். காங்கிரஸ் என்றுது சிறு குளம்தான். அதில் தண்ணீர் கூட இல்லை. குளத்தை கூட சரியாக பராமரிக்கத் தெரியாத காங்கிரஸ் கட்சி, அணையை பற்றி பேசுகிறது… முதலில் காங்கிரஸ் நிலைமை என்னவென்று டி.கே.சிவக்குமார் தெரிந்து கொள்ள வேண்டும்’ என்று விமர்சித்தவர், பா.ஜ.கவின் உள்கட்சி பிரச்னை குறித்தும் பேசியிருந்தார்.
‘எங்கள் கட்சியின் மேலிடம் மிகவும் பலமுள்ளது. கட்சிக்குள் எந்த பிரச்சினை வந்தாலும், அதனை சரிசெய்யும் சாமர்த்தியம் எங்களிடம் உண்டு. எடியூரப்பாவையும், இன்னும் சிலரையும் ஒழிக்க சதி நடப்பதாக டி.கே.சிவக்குமார் கூறி இருப்பது வேடிக்கையாக உள்ளது. சித்தராமையாவை காங்கிரஸ் கட்சியினர் எப்படி முடக்கினார்கள் என்பது தெரிந்த விஷயம்தான்.
சட்டமன்றத் தேர்தலில் சாமுண்டீஸ்வரி தொகுதியில் சித்தராமையா தோல்வியடைய காரணமே காங்கிரஸ் கட்சியின் கோஷ்டி பூசல்தான். வருணா தொகுதியில் போட்டியிடும் சித்தராமையாவை தோற்கடிக்க டி.கே.சிவக்குமார் முயற்சி செய்து வருகிறார் என்பது நாட்டுக்கே தெரிந்த விஷயம்.
2013ல் லிங்காயத் சமூகத்தை அழிப்பதற்காக, தனி மத அங்கீகாரம் கொடுப்பதாக கூறினார்கள். தேர்தல் முடிவுகள் என்ன ஆனது என்பது காங்கிரஸ் தலைவர்களுக்கு
நன்கு தெரியும். டி.கே.சிவக்குமாரின் பேச்சு இனி எடுபடாது. லிங்காயத் சமூகத்தினர் விழிப்புணர்வுடன் இருக்கின்றனர் என்று கடுமையாக விமர்சனம் செய்திருக்கிறார்.
தேர்தலுக்கு முன்பும், தேர்தலுக்கு பின்பும் காங்கிரஸ் கட்சியின் டி.கே சிவக்குமார் தனக்கு பெரும் சவாலாக இருப்பார் என்பதை பசவராஜ் தெரிந்து வைத்திருக்கிறார். ஒரு வேளை தொங்கு சட்டமன்றம் அமைந்தால், வரப்போகும் ஆட்சியை தீர்மானிக்கும் இடத்தில் டி.கே. சிவக்குமார் என்பதால் அனைவரது கவனமும் அவர் மீதுதான் இருக்கின்றன.