முற்போக்கு ஜனநாயக சக்திகள் மீதான தாக்குதல் ... மு.க.ஸ்டாலின் கண்டனம் !

முற்போக்கு ஜனநாயக சக்திகள் மீதான தாக்குதல் ...  மு.க.ஸ்டாலின் கண்டனம் !

ராகுல் காந்தியை எம்பி பதவியிலிருந்து தகுதி நீக்கம் செய்திருப்பது என்பது முற்போக்கு ஜனநாயக சக்திகள் மீதான தாக்குதல் என முதலமைச்சர் முக ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

பிரதமர் மோடியை அவதூறாக பேசியதற்கு எதிராக சூரத் நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கில் அவருக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து ராகுல் காந்தியை எம்பி பதவியிலிருந்து தகுதிநீக்கம் செய்து மக்களவை செயலகம் அறிவித்தது. இதற்கு திமுக தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளார்.

அதில், இந்தியாவின் இளம் தலைவர் ராகுல் காந்தியை நாடாளுமன்ற உறுப்பினர் பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்த நடவடிக்கைக்கு எனது கடுமையான கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன். அகில இந்திய அரசியல் கட்சியின் தலைவர், நாடாளுமன்ற உறுப்பினருக்குக் கூட கருத்துச் சொல்லும் ஜனநாயக உரிமை என்பது கிடையாது என்று மிரட்டும் தொனியில் இருக்கிறது இந்த நடவடிக்கை.

முதல்வர் மு.க.ஸ்டாலின்
முதல்வர் மு.க.ஸ்டாலின்

ராகுல் காந்தி பேசிய கருத்து அவதூறானது என்ற அடிப்படையில் சூரத் மாவட்ட நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கில் அவருக்கு இரண்டு ஆண்டுகள் தண்டனை தரப்பட்டுள்ளது. இந்தத் தண்டனையை விதித்த நீதிபதி ஹெச்.ஹெச்.வர்மா, இந்த வழக்கில் மேல் முறையீடு செய்வதற்காகக் கால அவகாசத்தை ராகுல் காந்திக்கு வழங்கி இருக்கிறார். ‘வழக்கை மேல் முறையீடு செய்வதற்கு வசதியாக தீர்ப்பை அமல்படுத்துவதற்கு 30 நாட்கள் தடை விதிக்கிறேன்’ என்றும் சொல்லி இருக்கிறார்.

மேல்முறையீடு செய்வது என்பது தண்டனை பெற்ற எவருக்கும் உள்ள அடிப்படை உரிமை ஆகும். அதனைத் தனது தீர்ப்பிலேயே நீதிபதி சுட்டிக்காட்டி 30 நாட்கள் வழங்கி இருக்கிறார். அதற்குள் ராகுல் காந்தியை தகுதி நீக்கம் செய்வது ஒரு நாடாளுமன்ற உறுப்பினரின் ஜனநாயக உரிமையைப் பறிப்பது ஆகும். 2 ஆண்டு சிறைத் தண்டனையை உச்சநீதிமன்றம் உறுதிப்படுத்திவிடவில்லை. மாவட்ட நீதிமன்றம் தான் தீர்ப்பு தந்துள்ளது.

உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு இருக்கிறது. இறுதித் தீர்ப்பை வழங்க வேண்டியது உச்சநீதிமன்றம் ஆகும். இதற்காகவே காத்திருந்ததைப் போல 23ம் தேதி தீர்ப்பு, 24ம் தேதி பதவிப் பறிப்பு என்று நடவடிக்கை எடுத்துள்ளது பா.ஜ.க. அரசு. இந்தத் தகுதிநீக்க நடவடிக்கைகளின் மூலமாக ஜனநாயகம் என்ற சொல்லை உச்சரிக்கும் தகுதியை பா.ஜ.க. இழந்துவிட்டது என ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com