minister Nazzar
minister Nazzar

அமைச்சரவையிலிருந்து ஆவடி நாசர் விடுவிப்பு : ஆவின் நிறுவனத்தில் தொடர்ந்த புகார்கள் தான் காரணமா?

திமுக அரசு அமைந்த பிறகு இரண்டாம் முறையாக அமைச்சரவை மாற்றம் செய்யப்பட்ட நிலையில் அமைச்சரவையிலிருந்து ஆவடி நாசர் அதிரடியாக விடுவிக்கப் பட்டுள்ளார்.

பால் வளத்துறை அமைச்சராக இருந்த நாசர் , அமைச்சராக பதவியேற்ற உடன், தீபாவளி நேரத்தில் ஒன்றரை டன் ஆவின் இனிப்புகளை முன்னாள் அதிமுக அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தனது வீட்டுக்கு எடுத்து சென்று விட்டதாக கூறி பரபரப்பை ஏற்படுத்தியவர். ஆவின் நிறுவனத்தில் கடந்த சில மாதங்களாக தினம் ஒரு புகார் வீதம் தொடர்ந்து எழுந்து வருகிறது .

ஆவின் நிறுவனத்தில் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு 40 லட்சம் லிட்டர் பால் கொள்முதல் செய்யப்பட்டு வந்த நிலையில், தற்போது சுமார் 28 லட்சம் லிட்டர் வரை மட்டுமே கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது.

பால் உற்பத்தியாளர்கள் தனியார் நிறுவனங்களுக்கு பால் ஊற்றுவதால் ஆவின் நிறுவனத்துக்கு பால் தட்டுப்பாடு ஏற்பட்டு உள்ளது. இதை சமாளிக்க மகாராஷ்டிரா, குஜராத் உள்ளிட்ட வெளி மாநிலங்களில் இருந்து பால் பவுடரை வாங்கி ஆவின் நிறுவனம் பால் தயாரித்து வருகிறது.

ஆவின் நிறுவனம்
ஆவின் நிறுவனம்

பால் பவுடர் மூலமாக உற்பத்தி செய்யப்படும் ஒரு லிட்டர் பாலுக்கு 60 ரூபாய் வரை செலவாகும் நிலையில், அது 42 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதனால் ஒரு லிட்டர் பாலுக்கு அரசுக்கு 18 ரூபாய் வரை இழப்பு ஏற்பட்டுகிறது. இதனால் ஏற்படும் நிதி நெருக்கடியை சமாளிக்க, பால், ஐஸ்கிரீம், வெண்ணை போன்ற பொருட்களின் விலை நான்கு முறை அதிகரிக்கப்பட்டன. வரலாற்றில் இதுவரை இல்லாத வகையில் ஆரஞ்சு பால் விலையும் லிட்டருக்கு 12 ரூபாய் வரை உயர்த்தப்பட்டது.

இந்த பாதிப்புகள் பொதுமக்கள் மத்தியில் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியது. எனினும் நெருக்கடியில் இருந்து துறையை மீட்பதற்கான எந்த முயற்சியும் எடுக்காமல் இருந்ததால், அமைச்சர் மாற்றப்படுவதாக துறை சார்ந்த அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

ஆவடி மாநகர செயலாளராக திமுகவில் கட்சி பொறுப்பை வகித்து வந்த ஆவடி நாசரின் மகன் ஆஷிம் ராஜா கடந்த பிப்ரவரி மாதம் அப்பொறுப்பில் இருந்து நீக்கப்பட்டார். அப்போதே நாசரும் அமைச்சரவையில் இருந்து நீக்கப்படலாம் என செய்திகள் கசிந்து வந்தன. இவை தவிர துறை ரீதியாகவும் ஆவடி நாசர் மீது பல்வேறு குற்றச்சாட்டுகள் கூறப்படுகின்றன.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com