வெறுப்புப் பேச்சு வழக்கில் அசம் கான் விடுவிப்பு!

வெறுப்புப் பேச்சு வழக்கில் அசம் கான் விடுவிப்பு!

வெறுப்புப் பேச்சு தொடர்பான வழக்கிலிருந்து சமாஜவாதி கட்சியின் தலைவர்களில் ஒருவரான அசம்கானை உத்தரப்பிரதேச மாநிலம், ராம்பூரில் உள்ள செஷன்ஸ் நீதிமன்றம் விடுவித்துள்ளது.

2019 ஆம் ஆண்டில் வெறுப்புணர்வை தூண்டும் வகையில் பேசியதாக அசம்கான் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கில் அவருக்கு கீழமை நீதிமன்றம் 3 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பளித்திருந்தது.

இந்த வழக்கிலிருந்து அசம்கான் விடுவிக்கப்பட்டாலும் சட்டப்பேரவை உறுப்பினர் பதவியிலிருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்ட அவர் மீண்டும் எம்.ஏல்.ஏ. ஆகமுடியாது. ஏனெனில் 2008 ஆம் ஆண்டு அரசு அதிகாரியை தாக்கியதான வழக்கில் அவருக்கு 2 ஆண்டு சிறைத்தண்டனை வழங்கப்பட்டுள்ளது.

ராம்பூர் சதார் தொகுதியிலிருந்து சமாஜவாதி கட்சி சட்டப்பேரவை உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டிருந்த அசம்கான் மீது 2019 ஆம் ஆண்டில் வெறுப்பை தூண்டும் வகையில் பேசியதாக எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் மீதான வழக்கை விசாரிக்கும் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டது. இந்த வழக்கில் அவருக்கு கடந்தஆண்டு அக்டோபர் மாதம் 3 ஆண்டு சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பு வழங்கப்பட்டது.

2019 ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலையொட்டி அந்த ஆண்டு ஏப்ரல் 7 ஆம் தேதி நடந்த பேரணியின்போது அசம்கான், பிரதமர் நரேந்திர மோடி, முதல்வர் யோகி ஆதித்யநாத் மற்றும் காங்கிரஸ் வேட்பாளர் சஞ்சய் கபூர் ஆகியோர் மீது வெறுப்பை தூண்டும் வகையில் அவதூறு பேசியதாக கூறப்படுகிறது. இந்த வழக்கில் 3 ஆண்டு சிறைத்தண்டனை வழங்கி தீர்ப்பளிக்கப்பட்டதை அடுத்து அவரிடமிருந்து எம்.எல்.ஏ. பதவி பறிக்கப்பட்டது. மேலும் 6 ஆண்டுகளுக்கு அவர் தேர்தலில் போட்டியிட முடியாது என்றும் அறிவிக்கப்பட்டது.

இந்த தீர்ப்பை எதிர்த்து அசம்கான் ராம்பூரில் உள்ள செஷன்ஸ் நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தார். இரு தரப்பினரின் வாதங்களையும் கேட்டறிந்த நீதிமன்றம் அசம்கானை குற்றச்சாட்டுகளிலிருந்து விடுவித்தது. இத்தகவலை அவரது வழக்குரைஞர் ஜூபைர் அகமது கான் தெரிவித்தார்.

அசம் கான் வெறுப்பூட்டும் வகையில் பேசியிருந்தாலும், அதற்கான வலுவான சாட்சியங்கள் இல்லை என்றுகூறி நீதிமன்றம் அவரை விடுவித்தது.

நீதிமன்றம் அவரை விடுவித்தாலும் அவரால் சட்டப்பேரவை உறுப்பினராக தொடரமுடியாது. ஏனெனில் மொராதாபாதில் நடந்த வேறு வழக்கில் அவருக்கு கடந்த பிப்ரவரி மாதம் 14 ஆம் தேதி இரண்டு ஆண்டு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. அரசு அதிகாரியை தாக்கியதான வழக்காகும் இது.

2008 ஆம் ஆண்டு மொராபாத் அருகே அசம் கான் சென்ற காரை போலீஸார் வழக்கமான சோதனைக்காக தடுத்து நிறுத்தினர். இதனால் ஏற்பட வாக்குவாத்தின்போது அசம்கான், அவரது மகன் அப்துல்லா இருவரும் அதிகாரியை தாக்கியதாக கூறப்படுகிறது. இந்த வழக்கில் ஆஸாம் கான் மற்றும் மகன் அப்துல்லா இருவருக்கும் இரண்டு ஆண்டு சிறைத்தண்டனை வழங்கப்பட்டுள்ளது.

சமீபத்தில் ராம்பூர் சதார் தொகுதிக்கு நடைபெற்ற இடைத் தேர்தலில் பா.ஜ.க. வேட்பாளர் ஆகாஷ் சக்ஸேனா, அசம்கானின் நெருங்கிய கூட்டாளியும், சமாஜவாதி கட்சி உறுப்பினருமான அஸிம் ராஜாவை தோற்கடித்தது குறிப்பிடத்தக்கது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com