ரயில்வே பணிக்கு நிலம் லஞ்சமாக பெற்ற வழக்கில் லாலு, ராப்ரிக்கு ஜாமீன்!
கடந்த 2004 ஆம் ஆண்டு முதல் 2009 ஆம் ஆண்டு வரை காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசில் ரயில்வே அமைச்சராக பதவி வகித்தவர் லாலு பிரசாத்.
லாலு ரயில்வே அமைச்சராக இருந்தபோது மத்திய ரயில்வே பதவியில் இருந்த பொது மேலாளர் மற்றும் தலைமைப் பணியாளர் அதிகாரி ஆகியோருடன் கூட்டுச் சதி செய்து, ரயில்வே வேலையில் பணியமர்த்த, சம்பந்தப்பட்ட நபர்களிடமிருந்து தமது குடும்பத்தினர் பெயரில் நிலத்தை எழுதி வாங்கியதாகவும், குறைந்த விலைக்கு நிலத்தை பதிவு செய்ததாகவும் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.
குரூப்-டி வேலைவாய்ப்பு தொடர்பாக எந்த விளம்பரமும் தரப்படவில்லை என்றும், லாலுவின் கட்டுப்பாட்டில் உள்ள ஒரு தனியார் நிறுவனம் மூலம் பாட்னாவில் வேலைக்கு நிலம் பரிவர்த்தனை நடைபெற்றதாகவும் கூறப்படுகிறது. இதன் மூலம் வேலை நியமனம் பெற்றவர்கள் மும்பை, ஜபல்பூர், கொல்கத்தா, ஜெய்ப்பூர் மற்றும் ஹாஜிபூர் ரயில்வே மண்டலங்களில் பணியமர்த்தப்பட்டதாகவும் தெரியவந்துள்ளதாக சிபிஐ குறிப்பிட்டுள்ளது.
இந்த வகையில் பாட்னாவில் 1,05,292 சதுர அடி நிலத்தை லாலு மற்றும் குடும்பத்தினர் பெற்றுக்கொண்டதாகவும் இவற்றில் சிலவற்றை நன்கொடையாகவும், சிலவற்றை சந்தை விலையைவிட குறைந்த தொகைக்கும் லாலு வாங்கியதாகவும் இதற்கான தொகையை ரொக்கமாக செலுத்தியதாகவும் சிபிஐ கூறியுள்ளது.
இந்த ஊழல் விவகாரம் தொடர்பாக மூத்த அரசியல்வாதி லாலு, அவரது மனைவி மற்றும் மகள்கள் மற்றும் 12 பேர் மீது சிபிஐ கடந்த 2022 ஆம் ஆண்டு மே மாதம் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்தது. இதைத் தொடர்ந்து அந்த ஆண்டு ஜூலை மாதம் லாலு கைது செய்யப்பட்டார். இது தொடர்பாக லாலுவிடம் பணியாற்றிய முன்னாள் சிறப்பு அதிகாரி போலோ யாதவும் கைது செய்யப்பட்டார்.
இந்த வழக்கு தொடர்பாக லாலு பிரசாத், அவரின் மனைவி ராப்ரி தேவி ஆகியோரிடம் அண்மையில் சிபிஐ விசாரணை மேற்கொண்டது. மேலும் லாலுவின் மகன் தேஜஸ்வி யாதவ், மகள்கள் ராகினி யாதவ், சந்தா யாதவ், ஹேமா யாதவ் மற்றும் முன்னாள் எம்.எல்.ஏ. அபுடோஜானா உள்ளிட்டோருக்கு சொந்தமான இடங்களில் அமலாக்கத்துறை சோதனை நடத்தியது.
இந்த நிலையில் இந்த வழக்கு தொடர்பாக லாலு உள்ளிட்டோரை மார்ச் 15 ஆம் தேதி விசாரணைக்கு ஆஜராகுமாறு சிறப்பு நீதிபதி கீதாஞ்சலி கோயல் கடந்த பிப்ரவரி 27 ஆம் தேதி உத்தரவிட்டிருந்தார்.
இதனிடையே இந்த வழக்கு விசாரணைக்காக ராஷ்ட்ரீய ஜனதாதளம் கட்சித் தலைவர் லாலு பிரசாத், அவரது மனைவி ராப்ரி தேவி, மகளும் எம்.பி.யுமான மிஸ்ஸா பாரதி ஆகியோர் தில்லியில் உள்ள ரோஸ் அவென்யூ நீதிமன்றத்தில் புதன்கிழமை ஆஜரானார்கள்.
விசாரணை முடிவில் முன்னாள் ரயில்வே அமைச்சர் லாலு பிரசாத், பிகார் முன்னாள் முதல்வர் ராப்ரி தேவி, ராஷ்ட்ரீய ஜனதாதளம் கட்சி எம்.பி. மிஸா பாரதி ஆகியோருக்கு ஜாமீன் வழங்கப்பட்டது. அடுத்த விசாரணை மார்ச் 29 ஆம் தேதி நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டது.