“அமைதியாக இருங்கள் இல்லையெனில் அமலாக்கத்துறை உங்கள் வீடு தேடிவரும்”:அமைச்சர் பேச்சால் சர்ச்சை!

அமைச்சர் மீனாட்சி லேகி
அமைச்சர் மீனாட்சி லேகி

மத்திய அமைச்சர் மீனாட்சி லேகி, நாடாளுமன்றத்தில் வியாழக்கிழமை எதிர்க்கட்சி எம்.பி. ஒருவரிடம், ‘அமைதியாக இருங்கள். இல்லாவிட்டால் அமலாக்கத்துறை உங்கள் வீடு தேடி வரும்’ என்று பேசியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. அமைச்சரின் பேச்சு மிரட்டும் வகையில் உள்ளதாக எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கூறினர்.

தில்லி நிர்வாக சேவைகள் தொடர்பான மசோதா தொடர்பான விவாத்தின்போது அமைச்சர் மீனாட்சி லோகி அவையில் பேசினார். அப்போது எதிர்க்கட்சி உறுப்பினர் ஒருவர் குறுக்கிட்டார். இதையடுத்து மீனாட்சி லேகி அவரிடம், “ஒரு நிமிடம்… ஒரு நிமிடம்… அமைதியாக இருங்கள் அல்லது அமலாக்கத்துறை உங்கள் வீடு தேடி வரும்”  என்று கூறினார். இதையடுத்து அவையில் சிரிப்பலை எழுந்தது.

எனினும் அமைச்சரின் இந்த கருத்துக்கு எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்தன.இது தொடர்பாக தேசியவாத காங்கிரஸ் கட்சி செய்தித் தொடர்பாளர் கிளைடீ கிராஸ்டோ கூறுகையில், மீனாட்சி லேகியின் கருத்து, மத்திய புலனாய்வு அமைப்புகளை மத்திய அரசு தவறாகப் பயன்படுத்தி வருகிறது என்ற எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டை நிரூபணமாகிவிட்டது என்றார்.

மக்களவையில் கடும் வாக்குவாதத்துக்கு நடுவே மீனாட்சி லேகி விடுத்த மிரட்டலானது புலனாய்வு அமைப்புகளை அரசு தவறாக பயன்படுத்துகிறது என்ற குற்றச்சாட்டை வலுப்படுத்துகிறது என்றும் அவர் எக்ஸ் தளத்தின் (டுவிட்டர்) மூலம் குறிப்பிட்டுள்ளார்.

இந்திய இளைஞர் காங்கிரஸ் தலைவர் பி.வி. ஸ்ரீனிவாஸ், மக்களவையில் மீனாட்சி லேகி கூறியது மிரட்டலா அல்லது எச்சரிக்கையா? என்று எக்ஸ் தளத்தின் மூலம் அவர் கேள்வி  எழுப்பியுள்ளார்.

திரிணமூல் காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் சாகேத் கோகலே, நாடாளுமன்றத்தில் மீனாட்சி லேகி எதிர்க்கட்சி உறுப்பினர்களிடம் அமலாக்கத்துறை வீடு தேடி வரும் என்று பேசியுள்ளது அதிர்ச்சி அளிக்கிறது. எதிர்க்கட்சியினரை நோக்கி அமலாக்கத்துறையை பயன்படுத்துவோம் என்று அமைச்சர்கள் வெளிப்படையாகவே அச்சுறுத்துகின்றனர் என்றார்.

அமைதியாக இருங்கள். இல்லாவிட்டால் அமலாக்கத்துறை உங்கள் வீடு தேடி வரும் என்று மத்திய அமைச்சர் மீனாட்சி லேகி பேசியுள்ளது அதிர்ச்சியாக உள்ளது. எதிர்க்கட்சியினரை பழிவாங்கும் போக்கை மறைமுகமாக பின்பற்றி வந்த ஆளுங்கட்சியினர் இப்போது நாடாளுமன்றம் மூலம் வெளிப்படையாகவே எச்சரித்துள்ளனர் என்றார் கோகலே.

தெலங்கானா முதல்வர் சந்திரசேர ராவின் பாரத் ராஷ்டிர சமிதியைச் சேர்ந்த தலைவர் எனுகு பரத் ரெட்டி கருத்து தெரிவிக்கையில், மத்திய அமைச்சர் மீனாட்சி லேகியின் கருத்து வெட்கக்கேடானது என்று குறிப்பிட்டார். பா.ஜ.க.வினர் இப்போது வெளிப்படையாகவே எதிர்க்கட்சியினரை மிரட்ட ஆரம்பித்துவிட்டனர் என்று அவர் எக்ஸ் தளத்தில் குறிப்பிட்டுள்ளார்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com