ஆந்திரத்தில் தெலுங்குதேசம் கட்சி ஆட்சிக்கு வந்தால், பெண்களுக்கு மாதம் ரூ.1,500 உதவித்தொகை வழங்கப்படும். பேருந்தில் இலவச பயண வசதி அளிக்கப்படும் உள்ளிட்ட அறிவிப்புகளை அக்கட்சித் தலைவரும் முன்னாள் முதல்வருமான என்.சந்திரபாபு நாயுடு அறிவிதுள்ளார்.
முதல்வர் ஒய்.எஸ்.ஜெகன்மோகன் ரெட்டி தலைமையிலான ஓய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சி ஆட்சியில் உள்ள ஆந்திர மாநிலத்தில் அடுத்த ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கா தெலுங்குதேசம் கட்சி இப்போதே தயாராகி வருகிறது.
தமிழகம், கர்நாடகம் உள்ளிட்ட மாநிலங்களில் பெண்களைக் கவரும் வகையிலான வாக்குறுதிகளை அளித்த அரசியல்கட்சிகள் வெற்றிபெற்ற நிலையிலில் ஆந்திரத்திலும் அதே பாணியை சந்திரபாபு நாயுடு கையிலெடுத்துள்ளார்.
தேர்தலை கருத்தில் கருத்தில் கொண்டு தெலுங்தேசம் கட்சி நடத்திய இரண்டு நாள் மாநாடு ராஜமகேந்திர புரத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. நிறைவுநாளான ஞாயிற்றுக்கிழமை அவர் பேசுகையில் கூறியதாவது:
ஆந்திரமாநிலத்துக்கு விரைவில் தேர்தல் வரவிருப்பதையொட்டி மக்களுக்கு இரண்டு கட்டமாக தேர்தல் வாக்குறுதிகளை அளிக்க விரும்புகிறேன். இரண்டாவது கட்ட வாக்குறுதி தசரா பண்டிகையின்போது அறிவிக்கப்படும்.
முதல் கட்டமாக 18 முதல் 59 வயது வரையிலான பெண்களுக்கு மாதம் ரூ.1,500 உதவித் தொகையாக வழங்கப்படும். இது தவிர தாய்மார்களுக்கு ஆண்டுக்கு ரூ.15,000 வருடாந்திர நிதியுதவியாக வழங்கப்படும். மேலும் பெண்கள் பேருந்துகளில் இலவசமாக பயணம் செல்ல அனுமதிக்கப்படுவார்கள்.
மேலும் குடும்பத்தலைவிகளுக்கு ஆண்டுக்கு 3 சமையல் எரிவாயு சிலிண்டர்கள் (எல்.பி.ஜி.) இலவமாக வழங்கவும் திட்டமிட்டுள்ளோம்.
இப்போதுள்ள விதிமுறைகளின்படி இரண்டு குழந்தைகளுக்கு மேல் உள்ளவர்கள் உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட முடியாது. இந்த சட்டமும் மாற்றியமைக்கப்படும்.
தெலுங்குதேசம் கட்சி ஆட்சிக்கு வந்தால் சர்வதேச பொருளாதாரத்தை தொடர்புபடுத்தி 25 லட்சம் வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும்.
வேலையில்லா பட்டதாரிகளுக்கு மாதம் ரூ.3,000 உதவித்தொகை வழங்கப்படும்.
கொரோனா தொற்றின்போது விவசாயிகள் வெகுவாக பாதிக்கப்பட்டனர். விவசாயிகள் தங்கள் செலவினங்களை சமாளிக்க அவர்களுக்கு ஆண்டுக்கு ரூ.20,000 நிதி உதவி வழங்கப்படும். விவசாயிகளுக்கு குறைந்தபட்ச ஆதரவு கிடைப்பதை உறுதிசெய்யும் கொள்கை உருவாக்கப்படும். இதன் மூலம் விவசாயிகள் தற்கொலை செய்துகொள்வது தடுத்து நிறுத்தப்படும்.
மக்களுக்கு பாதுகாப்பான குடிநீர் வழங்கப்படும். பிற்பட்ட வகுப்பினரின் பாதுகாப்பை உறுதிசெய்ய சட்டம் கொண்டுவரப்படும்.
2047 ஆம் ஆண்டுக்குள் இந்தியா சர்வதேச அளவில் வல்லரசாக உருவாகும். அப்போது உலகம் முழுவதும் கார்ப்பொரேட் நிர்வாகத்தில் தெலுங்கு பேசும் மக்கள் 35 சதவீதம் பேர் இடம்பெற்றிருப்பார்கள் என்று சந்திரபாபு நாயுடு தெரிவித்துள்ளார்.