
ஆஸ்கர் விருதுக்கு பிரதமர் நரேந்திர மோடியை அனுப்பியிருந்தால் இந்தியாவுக்கு மேலும் ஒரு ஆஸ்கர் விருது கிடைத்திருக்கும் என்று தெலங்கானா அமைச்சரும் பாரத் ராஷ்ட்டிர சமிதி (பி.ஆர்.எஸ்.) தலைவருமான கே.டி.ராமராவ் தெரிவித்தார்.
ராஜமெளலியின் ஆர்ஆர்ஆர் படத்தில் வரும் “நாட்டு நாட்டு” பாடலுக்கு சிறந்த பாடலுக்கான ஆஸ்கர் விருது கிடைத்துள்ளது. அந்த வகையில் மகிழ்ச்சிதான். ஆனால், பிரதமர் நரேந்திர மோடியை அங்கு அனுப்பியிருந்தால் அவருக்கு சிறந்த நடிகருக்கான ஆஸ்கர் விருது கிடைத்திருக்கும். இந்தியாவுக்கு மேலும் ஒரு விருது கிடைத்திருக்கும் என்று கிண்டலாக குறிப்பிட்டார்.
ஆட்சிக்கு வந்தால் ஒவ்வொருவர் கணக்கிலும் ரூ.15 லட்சம் போடப்படும் என்று மோடி தெரிவித்தார். யாருக்காவது அந்த பணம் கிடைத்ததா? உங்களுக்கு கிடைத்ததா? இல்லையென்றால் அந்தப் பணம் எங்கே போனது? என்று காமாரெட்டி மாவட்டம், ஜுக்கால் தொகுதியில் ஒரு பொதுக் கூட்டத்தில் பேசுகையில் கேள்வி எழுப்பினார்.
அதானி பெயரில் பிரதமர் நாட்டின் பணத்தை கொள்ளையடிக்கிறார். அதானிக்கு பிரதமர்தான் கடவுள். நாட்டின் பணம் கொள்ளையடிக்கப்பட்டு அந்தப் பணம் அவரின் நண்பரின் (அதானியின்) கணக்கில் சேர்க்கப்படுகிறது.
இப்படி கொள்ளையடிக்கப்பட்ட பணத்தில்தான் எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்களை பேரம் பேசி விலைக்கு வாங்குகிறார். எதிர்கட்சிகளை பலவீனப்படுத்துகிறார். இந்த வகையில் அவர் ஒரு சிறந்த நடிகர்தான் என்றார் கே.டி.ராமராவ்.
கடந்த 55 ஆண்டுகளில் காங்கிரஸ் கட்சி மாநிலத்துக்கு செய்த நன்மை என்ன? தங்களுக்கு வாய்ப்புகிடைத்தும் மக்களுக்கு எந்த நன்மையும் செய்யாத ஒரு கட்சிக்கு மீண்டும் ஆட்சி செய்ய ஏன் வாய்ப்பு தர வேண்டும் என்றும் அவர் கேட்டார்.
மோடி தலைமையிலான ஆட்சியில் பெட்ரோல் விலை ரூ.70- லிருந்து ரூ.115 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. இதேபோல சமையல் எரிவாயு சிலிண்டர் (எல்.பி.ஜி.) விலை ரூ.400 ஆக இருந்த்து மோடி ஆட்சியில் ரூ.1200 ஆக உயர்ந்துள்ளது.
சிறந்த பாடலுக்கான ஆஸ்கர் விருதை எஸ்.எஸ்.ராஜமெளலியின் ஆர்ஆர்ஆர் படம் வென்றுள்ளது. முன்பு இந்த படம் திரையிடப்பட்டால் படத்தின் ரீல்களையும், திரையரங்குகளையும் தீயிட்டு கொளுத்துவோம் என்று சொன்னவர்கள் (பா.ஜ.க. மாநிலத் தலைவர் பண்டி சஞ்சயை அவர் மறைமுகமாக குறிப்பிட்டார்.) இப்போது ஆஸ்கர் விருது பெற்றதற்கு வாழ்த்து தெரிவிக்கிறார்கள். இன்னும் ஒருபடி மேலே சென்று பிரதமர் மோடியினால்தான் இந்த ஆஸ்கர் விருது கிடைத்தது என்றும் கூறுவார்கள் என்றார் கே.டி.ராமராவ்.