லாலுவுடன் பீகார் முதல்வர் நிதிஷ் குமார் சந்திப்பு!

லாலுவுடன் பீகார் முதல்வர் நிதிஷ் குமார் சந்திப்பு!

பீகார் முதல்வர் நிதிஷ்குமார், ராஷ்டிரீய ஜனதாதளம் கட்சித் தலைவர் லாலு பிரசாத் யாதவை பீகாரில் உள்ள அவரது வீட்டில் சந்தித்துப் பேசினார். ஒரு காலத்தில் நிதிஷ்குமாரும், லாலுவும் அரசியலில் எதிர் எதிர் துருவங்களாக இருந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

சிறுநீரக அறுவைச்சிகிச்சைக்காக சிங்கப்பூர் சென்றிருந்த லாலு பிரசாத் யாதவ், அதன் பின் சில மாதங்களாக தில்லியில் தனது மூத்த மகள் மிசா பாரதியின் வீட்டில் தங்கியிருந்தார். இந்த நிலையில் லாலு பிரசாத் வெள்ளிக்கிழமை பாட்னா திரும்பினார்.

இது பற்றி தகவல் அறிந்ததும் முதல்வரும் ஐக்கிய ஜனதாதளம் கட்சித் தலைவருமான நிதிஷ்குமார், வெள்ளிக்கிழமை மாலை, நேராக முன்னாள் முதல்வரும் லாலுவின் மனைவியுமான ராப்ரி தேவியின் இல்லத்துக்குச் சென்று லாலு பிரசாத்தை சந்தித்தார்.

நீண்டகாலத்துக்குப் பின் சொந்த ஊர் திரும்பிய லாலுவிடம் நிதிஷ்குமார் என்ன பேசினார் என்பது தெரியவில்லை. ஆனால், இருவரும் சுமார் அரை மணி நேரம் பேசிக் கொண்டிருந்ததாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

எனினும் அடுத்த ஆண்டு மக்களவைக்கு பொதுத் தேர்தல் வரவிருக்கும் நிலையில் இரு தலைவர்களும் பா.ஜ.க.வுக்கு எதிராக எதிர்க்கட்சிகளை ஒன்றிணைப்பது குறித்து பேசியிருக்கலாம் என்று கூறப்படுகிறது.

பா.ஜ.க.வுக்கு எதிராக எதிர்க்கட்சிகளை ஓரணியில் திரட்டும் சவாலான பணியை நிதிஷ்குமார் மேற்கொண்டுள்ளார். இதற்கு லாலுவும் ஆதரவு தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது. இதன் ஒரு பகுதியாக முதல்வர் நிதிஷ்குமார் மற்றும் துணை முதல்வர் தேஜஸ்வி யாதவ் இருவரும் கடந்த வாரம் கொல்கத்தாவில் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியையும், லக்னெளவில் சமாஜவாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவை சந்தித்துப் பேசினர்.

மேலும் முன்னதாக காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, ஆம் ஆத்மி கட்சித் தலைவரும் தில்லி முதல்வருமான அரவிந்த் கெஜ்ரிவாலையும் நிதிஷ்குமார் சந்தித்து பேசியுள்ளார்.

நிதிஷ்குமாரின் முயற்சியை வரவேற்றுள்ள மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, எதிர்க்கட்சிகளின் முதல் கூட்டத்தை பீகாரில் நடத்துமாறு வலியுறுத்தி கேட்டுக்கொண்டுள்ளார். அநேகமாக கர்நாடக மாநிலத் தேர்தல் நடந்து முடிந்த உடன் இந்த கூட்டம் நடைபெறும் என்று சொல்லப்படுகிறது.

பீகார் அரசியல் மொழியில் லாலு, நிதிஷ்குமார் இருவரும் “படா பாய்-சோட்டா பாய்” (பெரியண்ணன்- சின்னண்ணன்) என அறியப்படுவார்கள். இருவருமே 1970-களில் மாணவராக இருந்த காலத்திலிருந்தே ஜெயப்பிரகாஷ் நாராயணனின் கொள்கைகளால் ஈர்க்கப்பட்டு பணியாற்றியவர்கள்.

கடந்த ஆகஸ்டு மாதம் பா.ஜ.க.வுடன் உறவை துண்டித்துக் கொண்ட நிதிஷ்குமார் பின்னர் லாலுவின் ராஷ்டிரீய ஜனதாதளம் கட்சியுடன் உறவை புதுப்பித்துக் கொண்டு ஆட்சியைத் தக்கவைத்துக் கொண்டார். பிகாரில் லாலு கட்சிக்கு கணிசமான எம்.எல்.ஏ.க்கள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com