ராஜஸ்தான் உள்ளிட்ட நான்கு மாநில தேர்தலில் புதிய உத்திகளை கையாள பா.ஜ.க. முடிவு!

ராஜஸ்தான் உள்ளிட்ட நான்கு மாநில தேர்தலில் புதிய உத்திகளை கையாள பா.ஜ.க. முடிவு!

கர்நாடக மாநில சட்டப்பேரவைத் தேர்தலில் படுதோல்வியை சந்தித்த நிலையில் இனிவரும் தேர்தல்களில் புதிய தேர்தல் உத்திகளை பின்பற்ற பா.ஜ.க. முடிவு செய்துள்ளதாகத் தெரியவந்துள்ளது.

இந்த ஆண்டு இறுதியில் மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், தெலங்கானா மற்றும் சத்தீஸ்கர் மாநிலங்களுக்கு சட்டப்பேரவைத் தேர்தல்கள் நடைபெற உள்ளன. இவற்றில் மத்தியப் பிரதேசத்தில் மட்டுமே பா.ஜ.க. ஆளும் கட்சியாக உள்ளது.

ராஜஸ்தான், மத்தியப்பிரதேசம், சத்தீஸ்கர், தெலங்கானா ஆகிய நான்கு மாநிலங்களில் நடைபெற உள்ள தேர்தல்களும் பா.ஜ.க.வுக்கு மிக முக்கியமானவை. மத்தியப் பிரதேசத்தில் ஆட்சியை தக்கவைத்துக் கொள்ளவும், ராஜஸ்தானில் காங்கிரஸ் கட்சிக்குள் நிலவிவரும் உட்பூசலை தனக்கு சாதமாக பயன்படுத்திக் கொள்ளவும் பா.ஜ.க. விரும்புகிறது. மேலும் சத்தீஸ்கர் மற்றும் தெலங்கானாவில் ஆளுங்கட்சிக்கு எதிரான அலை வீசுவதால் அதையும் சரிவர பயன்படுத்திக் கொள்ள பா.ஜ.க. திட்டமிட்டு வருகிறது.

கர்நாடகத் தேர்தலில் கிடைத்த படுதோல்வியை அடுத்து கட்சித் தலைமை, வேட்பாளர் தேர்வு மற்றும் பிராந்திய கட்சியை அரவணைத்து செல்லுதல் என்னும் புதிய தேர்தல் உத்திகளை பின்பற்றி தேர்தலை எதிர்கொள்ள பா.ஜ.க. முடிவு செய்துள்ளதாகத் தெரியவந்துள்ளது.

இது தொடர்பாக பெயர் குறிப்பிட விரும்பாத பா.ஜ.க. மூத்த தலைவர் ஒருவர் கூறுகையில், வரும் நான்கு மாநில

தேர்தல்களில் பா.ஜ.க. புதிய உத்திகளை கையாள முடிவு செய்துள்ளது. கட்சித் தலைமையை தீர்மானிப்பதிலும், வேட்பாளர்களை தேர்வு செய்வதிலும் சாதி கணக்கீடுகளை கருத்தில் கொள்ள தீர்மானிக்கப்பட்டுள்ளது. இந்த பாடத்தை நாங்கள் கர்நாடக தேர்தலின்போது கற்றுக்கொண்டோம்.

பி.எஸ்.எடியூரப்பாவை முதல்வர் பதவியிலிருந்து நீக்கியது தவறான நடவடிக்கையாகும், மேலும் ஜெகதீஷ் ஷெட்டர், லட்சுமண் சவேதி ஆகியோருக்கு தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வழங்காததால் லிங்காயத்து வோட்டுகள் காங்கிரஸ் பக்கம் சென்றுவிட்டன.

தேவைப்பட்டால் பிராந்திய கட்சிகளுடன் கூட்டணி வைத்துக்கொள்வது என்று தீர்மானிக்கப்பட்டுள்ளது. கர்நாடக தேர்தலில் குமாரசாமி கட்சியுடன் தேர்தல் கூட்டு வைத்திருந்தால் பா.ஜ.க.வுக்கு கணிசமான இடங்கள் கிடைத்திருக்கும் என்று பலரும் இப்போது கருதுகிறார்கள்.

இதில் குறிப்பிடத்தக்க அம்சம் என்னவென்றால் தேர்தல் பிரசாரத்தில் தேசிய தலைவர்களை பிரதானப்படுத்துவதைவிட உள்ளூர் தலைவர்களுக்கும் முக்கியத்துவம் தரவேண்டும் என்பதை உணர்ந்து கொண்டோம். உள்ளூர் தலைவர்களுக்கு முக்கியத்துவம் கொடுத்ததுதான் காங்கிரஸ் கட்சிக்கு வெற்றியைத் தேடித்தந்த்து.

கட்சிக்குள் அதிருப்தி கோஷ்டியை வளரவிடக்கூடாது என்பதையும் புரிந்து கொண்டோம். கர்நாடகத்தில் அதுதான் பெரும் பிரச்னையாக உருவெடுத்தது. ஜெகதீஷ் ஷட்டருக்கு தேர்தல் டிக்கெட் மறுக்கப்பட்டிருக்கக்கூடாது. மத்தியப் பிரதேசம், ராஜஸ்தானில் இந்த உத்தியை கடைப்பிடிப்பது முக்கியமாகும் என்றார்.

மத்தியப் பிரதேசத்தில் வரும் தேர்தலில் முதல்வர் சிவராஜ் சிங் செளஹான்தான் பிரதான முகமாக இருந்தாலும், ஜோதிராதித்ய சிந்தியா, நரேந்திரசிங் தோமர், பி.டி.சர்மா ஆகிய தலைவர்களையும் அரவணைத்து தேர்தல் பிரசாரம் செய்ய வேண்டும். 2020 ஆம் ஆண்டில் பா,ஜ.க.வில் சேர்ந்து

கமல்நாத் அரசு காரணமாக இருந்த சிந்தியா மற்றும் அவரது ஆதரவாளர்களை வெளியாட்களாக கருதாமல் அரவணைத்துச் செல்லவேண்டும் என்று தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

ராஜஸ்தான் மாநிலத்தில் முன்னாள் முதல்வர் வசுந்தரா ராஜே மத்திய தலைமையுடன் தொடர்பில் இல்லாவிட்டாலும் அவருக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும். மேலும் மாநிலத்தில் உள்ள பல்வேறு சாதீய தலைவர்களான கிரோரிலால் மீனா, கஜேந்திர சிங் ஷெகாவத், சதீஷ் பூனியா உள்ளிட்ட தலைவர்களுக்கும் முக்கியத்துவம் அளிக்க வேண்டும்.

சத்தீஸ்கரில் முன்னாள் முதல்வர் ரமன் சிங், மூத்த தலைவர்கள் பிரிஜ்மோகன் அகர்வால், அருண் சாவ் உள்ளிட்ட மூத்த தலைவர்களுக்கும் தெலங்கானாவில் பண்டி சஞ்சய், இ.ராஜேந்திரன், கிஷண்ரெட்டி ஆகிய முக்கிய தலைவர்களுக்கு முக்கியத்துவம் தர வேண்டும். மேலும் தலைவர்களுக்கு இடையேயுள்ள கருத்துவேறுபாடுகளை தீர்த்துவைத்து ஒற்றுமையுடன் செயலாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பா.ஜ.க. வட்டாரங்கள் தெரிவித்தன.

தேர்தல் பிரசார உத்திகளை வகுக்கும்போது மூத்த தலைவர்களின் கருத்தை கேட்டறிய வேண்டும். மாநிலத்தில் மக்களின் மனோநிலை என்ன என்பதை அடிமட்ட தொண்டர்கள் மூலம் கேட்டறிந்து அதற்கேற்ப செயல்பட வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டதாக தெரியவந்துள்ளது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com