சாதி வாரி கணக்கெடுப்பை கண்டு பாஜக அஞ்சுகிறது- லாலு பிரசாத்!

சாதி வாரி கணக்கெடுப்பை கண்டு பாஜக அஞ்சுகிறது- லாலு பிரசாத்!

பிகாரில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த முதல்வர் நிதிஷ் குமார் தலைமையிலான அரசு முடிவு செய்தது. முதல்கட்டமாக இந்த ஆண்டு ஜனவரி 7 முதல் 21 வரை இக்கணக்கெடுப்பு நடந்தது. இரண்டாவது கட்டமாக ஏப்ரல் 15 முதல் மே 15 வரை இப்பணிகள் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. இந்த கணக்கெடுப்பின்போது சம்பந்தப்பட்ட நபரின் சாதி, குடும்ப உறுப்பினர்களின் எண்ணிக்கை, ஆண்டு வருமானம் குறித்த தகவல்கள் சேகரிக்கப்பட்டு வந்தன. இதற்கிடையில் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்த மத்திய அரசுக்கே அதிகாரம் உள்ளது என எதிர்ப்பு கிளம்பியது.

இது தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. ஆனால் இதில் தலையிட மறுத்தஉச்ச நீதிமன்றம், மனுக்களை விரைவில் விசாரிக்க வேண்டும் என்ற உத்தரவுடன் உயர் நீதிமன்றத்துக்கு திருப்பி அனுப்பியது.

இந்நிலையில் இந்த வழக்கு பாட்னா உயர் நீதிமன்றத்தில் வியாழக்கிழமை (மே 4) விசாரணைக்கு வந்தது. அப்போது சாதிவாரி கணக்கெடுப்பை உடனே நிறுத்தி வைக்கவும் திரட்டப்பட்ட புள்ளி விவரத்தை பாதுகாப்புடன் வைத்திருக்கவும் நீதிமன்றம் உத்தரவிட்டது. வழக்கை ஜூலை 3-ம் தேதிக்கு ஒத்திவைத்துள்ளது.

இதனிடையே ராஷ்ட்ரீய ஜனதாதளம் கட்சித் தலைவர் லாலு பிரசாத், சாதி வாரி கணக்கெடுப்புக்கு இடைக்கால தடைவிதித்த பாட்னா உயர்நீதிமன்றத்தின் உத்தரவை குறிப்பிடாமல், சாதி வாரி கணக்கெடுப்பு நடத்தினால்

பிற்பட்ட வகுப்பினர் பெரும்பான்மையாக இருப்பார்கள் என்று பா.ஜ.க. பயப்படுவதாகவும் கூறியுள்ளார்.

சாதி வாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என்பது நாட்டு மக்கள் பெரும்பாலானவர்களின் கோரிக்கையாகும். இதை தவிர்க்க முடியாது. இதைக்கண்டு பா.ஜ.க. ஏன் பயப்படுகிறது. இதை எதிர்ப்பவர்கள் சமூக நீதிக்கு எதிரானவர்கள் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

பிகாரில் பா.ஜ.க. ஆட்சியிலிருந்த போதுதான் சாதி வாரி கணக்கெடுப்பு நடத்த சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. ஆனால், பா.ஜ.க.வுடன் உறவை முறித்துக் கொண்ட ஐக்கிய ஜனதாதளம் கட்சித்தலைவர் நிதிஷ்குமார், இப்போது லாலு கட்சி ஆதரவுடன் நடந்துவரும் ஆட்சியில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த உத்தரவிட்டார். ஆனால், இப்போது எதிர்க்கட்சியாக இருக்கும் பா.ஜ.க. அதை எதிர்க்கிறது. பா.ஜ.க.வின் இரட்டை வேடத்தை மக்கள் புரிந்துகொண்டுள்ளனர். மேட்டுக்குடியினரின் ஆதரவை பெற்றுள்ளதால் பா.ஜ.க. இதை விரும்பவில்லை. கடைசியாக 1931 ஆம் ஆண்டு சாதி வாரி கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. இப்போது கணக்கெடுப்பு நடத்தி பிற்பட்ட வகுப்பினர் அதிகம் இருப்பதாக தெரியவந்தால், அதற்கு ஏற்பட இடஒதுக்கீட்டை அதிகரிக்க கோருவார்கள் என்பதால் பா.ஜ.க. எதிர்க்கிறது என்கிறார் லாலு.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com