பா.ஜ.கதான் எனது குரு - ராகுல் அதிரடி ஸ்டேட்மெண்ட்!

பா.ஜ.கதான் எனது குரு - ராகுல் அதிரடி ஸ்டேட்மெண்ட்!

பா.ஜ.க.தான் எனது குரு. இப்படிச் சொல்லியிருப்பவர் யார் தெரியுமா? காங்கிரஸ் எம்.பி.ராகுல் காந்திதான்!

காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும் எம்.பி.யுமான ராகுல் காந்தி, மத்தியில் ஆளும் பா.ஜ.க. அரசுக்கு எதிராக மக்களை ஒன்று திரட்டும் முயற்சியில் கன்னியாகுமரியிலிருந்து காஷ்மீர் வரை ஒற்றுமை யாத்திரை நடத்தி வருகிறார்.

அவரின் இந்த யாத்திரை கடந்த செப்டம்பர் மாதம் 7 ஆம் தேதி கன்னியாகுமரியில் தொடங்கி, தமிழகம், ஆந்திரம், தெலங்கானா, கர்நாடகம், கேரளம், மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான் மாநிலங்களைக் கடந்து, கடந்த டிசம்பர் 24 ஆம் தேதி தில்லிக்குள் நுழைந்தது.

9 நாள் இடைவெளிக்குப் பிறகு சனிக்கிழமை அவர் செய்தியாளர்களிடம் பேசினார். பா.ஜ.க.தான் எனது குரு (ஆசான்). நான் எப்படிச் செல்லவேண்டும் என்று எனக்கு வழிகாட்டுபவர்கள் அவர்கள்தான். எதைச் செய்யக்கூடாது என்பதையும் அவர்கள்தான் எனக்கு கற்றுக் கொடுக்கின்றனர்.

பா.ஜ.க.வினர் எங்களை ஆக்ரோஷமாக தாக்கிப் பேசுவதை நான் வரவேற்கிறேன். இது எங்களுக்கு புரிதலை ஏற்படுத்தும்.

கன்னியாகுமரியிலிருந்து காஷ்மீர் வரையிலான “பாரத் ஒற்றுமை யாத்திரை”யை நாங்கள் சாதரணமாகத்தான் தொடங்கினோம். ஆனால், இந்த யாத்திரை மூலம் மக்களின் ஆதங்கத்தையும் உணர்வுகளையும் புரிந்து கொண்டோம்.

நாட்டின் வெறுப்புணவுர்க்கு எதிராக அன்பை வலியுறுத்தி நடத்தப்படும் யாத்திரையில் சமாஜவாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ், சமாஜவாதி கட்சித் தலைவர் மாயாவதி உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் கலந்துகொள்ள வேண்டும். அவர்களின் நோக்கமும் காங்கிரஸின் நோக்கமும் ஒன்றுதான். இதில் கலந்து கொள்வதிலிருந்து யாரும் அவர்களைத் தடுக்கவில்லை.

வெறுப்புணர்வுக்கு எதிராக தேசத்தை ஒன்றிணைப்பதே நடைபயணத்தின் நோக்கமாகும். இது எங்களுக்கு ஒரு வெற்றிப் பயணம். பலசாதனைகளை படைத்துள்ளது. வேலையில்லா திண்டாட்டம், விலைவாசி உயர்வு ஆகியவை மக்கள் மனதில் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளன.

தில்லி குளிரில் நான் டீ ஷர்ட் அணிந்து செல்வதை பலரும் பலவிதமாக விமர்சித்து வருகின்றனர். இது தேவையில்லாதது. நான் குளிரைக் கண்டு பயப்படாததால் ஸ்வெட்டர் அணியவில்லை. தேவைப்பட்டால் நான் நிச்சயம் ஸ்வெட்டர் அணிந்து கொள்வேன்.

யாத்திரையின்போது நடந்துதான் செல்லமுடியும். நடைப்பயணத்தின்போது நான் பாதுகாப்பு விதிகளை மீறுவதாக பாதுகாப்பு படையினரை சொல்ல வைத்ததன் மூலமும், கொரோனா அச்சுறுத்தல் என்று காரணம் காட்டி கடிதம் அனுப்புவதன் மூலமும் பா.ஜ.க. தலைமையிலான அரசு என் மீது வழக்கு பதிவு செய்ய முயற்சிக்கிறது.

நீங்கள் குண்டு துளைக்காத வாகனத்தில் செல்லுங்கள் என்று உள்துறை அமைச்சகம் கூறுகிறது. நான் மக்களிடம் நேரிடையாக பேச விரும்புவதால் குண்டுதுளைக்காத காரில் செல்ல முடியாது. யாத்திரை என்றால் நடைபயணம்தானே செல்ல வேண்டும். பாதுகாப்புக்கு என்ன செய்யவேண்டும் என்பது அவர்களுக்குத் தெரியும். இருந்தாலும் இதை பிரச்னையாக்குகிறார்கள்.

2024 நாடாளுமன்றத் தேர்தலில் எதிர்க்கட்சிகள் ஓரணியில் திரண்டால் பா.ஜ.க.வை வீழ்த்த முடியும். நான் களத்தில் நேரடியாகப் பார்ப்பதால் சொல்கிறேன். வருகிற நாடாளுமன்றத் தேர்தலில் பாரதீய ஜனதா கட்சிக்கு போட்டி மிகவும் கடுமையாக இருக்கும்.

எதிர்க்கட்சிகள் அனைத்தும் களத்தை சரியாகப் புரிந்துகொண்டால், பா.ஜ.க.வை தோற்கடிப்பது சுலபம். எந்த ஒரு குறிக்கோளும் இல்லாமல் பா.ஜ.க.வை எதிர்ப்பதைவிட நாட்டின் எதிர்காலத்துக்கான திட்டத்துடன் பா.ஜ.க.வை எதிர்கொண்டால் நிச்சயம் வீழ்த்த முடியும். பா.ஜ.க.வுக்கு எதிரான மனநிலையை மக்களிடம் காண முடிகிறது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
logo
Kalki Online
kalkionline.com