மணிப்பூரில் முதல்வருக்கு எதிராக பா.ஜ.க. எம்.எல்.ஏ.க்கள் போர்க்கொடி!
மணிப்பூர் மாநிலத்தில் முதல்வர் என்.பீரேன் சிங்குக்கு எதிர்ப்பு வலுத்து வருகிறது. பா.ஜ.க. எம்.எல்.ஏ.க்கள் சிலர் அவருக்கு எதிராக போர்க்கொடி உயர்த்தியுள்ளனர்.
கடந்த திங்கள்கிழமை பா.ஜ.க. எம்.எல்.ஏ.வான ரகுமணி சிங், மணிப்பூர் புதுப்பிக்கவல்ல எரிசக்தித்துறை தலைவர் பதவியிலிருந்து விலகியுள்ளார். இவர் அரசு அதிகாரியாக இருந்து அரசியல்வாதியானவர். கடந்த இரண்டு வாரங்களில் அரசு பதவியிலிருந்து விலகியுள்ள நான்காவது எம்.எல்.ஏ. ஆவார் ரகுமணி சிங்.
தங்களை செயல்பட முதல்வர் அனுமதிப்பதில்லை என்றும், தங்கள் துறைக்கு போதுமான நிதி ஒதுக்கவில்லை என்றும் அவர்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.
கடந்த ஆண்டு நடைபெற்ற தேர்தலில் உரிபோக் சட்டப்பேரவைத் தொகுதியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டவர் சிங். தமது ராஜிநாமா கடிதத்தில், “தனிப்பட்ட காரணங்களுக்காகவும் மற்றும் பொது நலன் கருதியும் பதவி விலகுகிறேன். தற்போதைய சூழலில் நான் மணிப்பூர் புதுப்பிக்கவல்ல எரிசக்தித் துறையின்
தலைவராக நீடிப்பதில் எந்த பயனும் இல்லை என்பதால் பதவியிலிருந்து விலகுகிறேன். எனது ராஜிநாமாவை ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறேன்” என்று சிங் குறிப்பிட்டுள்ளார்.
முன்னதாக பா.ஜ.க. எம்.எல்.ஏ.க்களான தோக்சோம் ராதேஷியாம் மற்றும் கரம் ஷியாம் இருவரும் முறையே முதல்வரின் ஆலோசகர் மற்றும் மணிப்பூர் மாநில சுற்றுலா வளர்ச்சிக் கழகத் தலைவர் பதவியிலிருந்து கடந்த ஏப்ரல் 17 ஆம் தேதி விலகுவதாக அறிவித்தனர். இவர்கள் இருவரும் 2017 ஆம் ஆண்டு முதல் 2022 வரை பீரேன் சிங் தலைமையிலான முந்தைய அமைச்சரவையில் அமைச்சராக பணியாற்றியவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
ஒரு தலைவர் என்பவர் தொண்டர்களை அச்சுறுத்துபவராக இல்லாமல் சிறந்த செயல்வீர்ராக இருக்க வேண்டும். அச்சுறுத்தல் தொடருமானால், கட்சிக்குள் கோஷ்டி மோதல் உருவாவதை தவிர்க்க முடியாது. மணிப்பூர் ஊழல் இல்லாத மாநிலமாக இருந்து வருகிறது. ஆனால், ஊழல் இருப்பது கொடுப்பவருக்கும் வாங்குபவர்களுக்கும் மட்டுமே தெரியும்” என்று ஷியாம் விடியோ மூலம் தெரிவித்துள்ளார்.
கடந்த ஏப்ரல் 20 ஆம் தேதி சமூக வளர்ச்சித்துறை தலைவர் பதவியை பனம் புரோஜென்சிங் ராஜிநாமா செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.
மேலும் சில பா.ஜ.க. எம்.எல்.ஏ.க்கள் தங்கள் அரசு பதவியை ராஜிநாமா செய்யக்கூடும் என்றும் தங்கள் பிரச்னையில் தலையிட்டு தீர்த்து வைக்குமாறு கட்சியின் மத்திய தலைமையை கேட்டுக் கொள்ளக்கூடும் என்று தகவல் அறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
குக்கி சமூகத்தினரை குறிவைத்து ஆக்கிரமிப்பு என்ற பெயரில் நடவடிக்கை எடுக்கப்படுவது குறித்து அந்த சமூகத்தைச் சேர்ந்த எம்.எல்.ஏ.க்கள் சிலர் அதிருப்தியில் உள்ளதாக கூறப்படுகிறது.
இதனிடையே முதல்வர் பீரேன் சிங், கட்சி எம்.எல்.ஏ.க்கள் இடையே கருத்து வேறுபாடுகள் ஏதும் இல்லை என்றும் கட்சியில் யாரும் போர்க்கொடி உயர்த்தவில்லை என்று கூறிவருகிறார்.
கடந்த ஆண்டு நடந்த தேர்தலில் 60 தொகுதிகள் கொண்ட மணிப்பூர் மாநிலத்தில் 32 இடங்களில் வென்று பா.ஜ.க. மீண்டும் ஆட்சியை கைப்பற்றியுள்ளது. இதர சில கட்சிகளும் பா.ஜ.க.
அரசை ஆதரித்து வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.