நாடாளுமன்றம் செயல்பாடமல் தடுப்பது பா.ஜ.க. தான்: திரிணமூல் எம்.பி. குற்றச்சாட்டு

டெரிக் ஓ பிரையன்
டெரிக் ஓ பிரையன் hp

நாடாளுமன்றம் செயல்படாமல் தடுப்பது பா.ஜ.க.தான் என்று திரிணமூல் காங்கிரஸ் எம்.பி. டெரிக் ஓ பிரையன் குற்றஞ்சாட்டினார். பிரதமர் மோடி, மாநிலங்களவையிலோ அல்லது மக்களவையிலோ மணிப்பூர் விவகாரம் குறித்த விவாதததை தொடங்கிவைக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

நாடாளுமன்றத்தின் மழைக்கால கூட்டத் தொடர் ஜூலை 20 ஆம் தேதி தொடங்கினாலும், மணிப்பூரில் மே 4 ஆம் தேதி இரண்டு பெண்கள் நிர்வாண ஊர்வலமாக அழைத்துச் செல்லப்பட்ட சம்பவம் தொடர்பான விடியோ வெளியானதால் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில் இது குறித்து நாடாளுமன்றத்தில் விவாதிக்க வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் கோரி வருகின்றன. எதிர்க்கட்சிகள் அமளியை அடுத்து நாடாளுமன்றம் திங்கள்கிழமை வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் நாடாளுமன்றம் செயல்பாடததற்கு முக்கிய காரணம் பா.ஜ.க.தான். திங்கள்கிழமை நாடாளுமன்றம் கூடும்போதாவது மணிப்பூர் விவகாரத்தை விவாதத்துக்கு எடுத்துக் கொள்ள வேண்டும். மக்களவை அல்லது மாநிலங்களவை இவற்றில் எதில் வேண்டுமானால் விவாத்த்தை பிரதமர் மோடி தொடங்கி வைக்கலாம். அதற்கு உறுதியளிக்கும்பட்சத்தில் எதிர்க்கட்சிகளாகிய நாங்கள் விவாதத்தில் பங்கேற்க தயாராக இருக்கிறோம் என்று மாநிலங்களவையில் திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் தலைவராக இருக்கும் டெரிக் ஓ பிரையன் டுவிட்டர் மூலம் தெரிவித்துள்ளார்.

மணிப்பூர் விவகாரம் குறித்து விவாதிக்க அரசு முன்வந்தாலும் எதிக்கட்சிகள் பிரதமர் நாடாளுமன்றத்தில் பங்கேற்று இந்த விவகாரம் குறித்து பேச வேண்டும் என்று வலியுறுத்தி வருகின்றன.

கடந்த வெள்ளிக்கிழமை பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் மக்களவையில் பேசுகையில், மணிப்பூர் விவகாரம் குறித்து விவாதிக்க அரசு தயார் என்று தெரிவித்தார். ஆனால், எதிர்க்கட்சிகள் இந்த விவகாரம் குறித்து பிரதமர் நாடாளுமன்றத்தில் விவாதிக்க வேண்டும் மற்றும் அறிக்கை வெளியிட வேண்டும் என்று கோரி வருகின்றனர்.

மணிப்பூர் விவகாரம் குறித்து விவாதிக்க அரசு தயாராக இருந்த போதிலும் எதிர்க்கட்சிகள் நாடாளுமன்றத்தை நடத்தவிடாமல் செய்வதாக பா.ஜ.க.வினர் குற்றஞ்சாட்டியிருந்தனர்.

கடந்த புதன்கிழமை குக்கி இன பெண்கள் இருவர் நிர்வாணமாக ஊர்வலமாக அழைத்துச் செல்லப்பட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதான விடியோ வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதற்கு மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி மற்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கடும் கண்டனம் தெரிவித்திருந்தனர்.

கடந்த மே 4 ஆம் தேதியே இந்த சம்பவம் நடந்த போதிலும் இதுவரை இதுவிஷயத்தில் மாநில அரசு நடவடிக்கை எடுக்காதது ஏன் என்று கேட்டு எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்பின. சம்பவம் நடந்து 70 நாட்களுக்கு மேலாகியும் முதல்வர் இதை கண்டு கொள்ளாதது ஏன் என்று கேட்டனர்.

இந்த நிலையில் பிரதமர் மோடி, இந்த விடியோ விவகாரம் நாட்டுக்கே ஏற்பட்ட அவமானம் என்று குறிப்பிட்டதுடன் குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும் என்று கூறினார். மேலும் அனைத்து மாநில முதல்வர்களும் பெண்களின் பாதுகாப்பை உறுதிசெய்ய வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்.

இதன் பின்னர் இந்த சம்பவம் தொடர்பாக ஹீராதாஸ் என்பவர் உள்பட நான்கு பேரை கைது செய்துள்ளதாக மணிப்பூர் போலீஸார் தெரிவித்தனர்.

-----------

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com