நாடாளுமன்றத்தில் அதானி விவகாரத்தை ராகுல் எழுப்புவார் என பா.ஜ.க. பயப்படுகிறது! பா.ஜ.க. விமர்சனத்துக்கு காங்கிரஸ் பதிலடி!
அதானி விவகாரத்தை ராகுல் மீண்டும் எழுப்பிவிடுவாரோ என்ற பயத்தால்தான் பா.ஜ.க. ராகுல் காந்தியின் லண்டன் பேச்சு விவகாரத்தை கிளப்பி மன்னிப்பு கோர வேண்டும் என்ற நாடகத்தை நடத்தி வருகிறது என்று காங்கிரஸ் பதிலடி கொடுத்துள்ளது.
ராகுல் காந்தி மீதான தாக்குதலை பா.ஜ.க. தொடர்கிறது. அவரை இந்திய அரசியலின் தற்போதைய கால மிர் ஜாஃபர் என்றும் விமர்சித்து வருகிறது.
இது தொடர்பாக காங்கிரஸ் செய்தித் தொடர்பாளரான பவன் கேரா கூறுகையில், ராகுல் காந்தியை நாடாளுமன்றத்தில் பேச அனுமதித்தால் மீண்டும் அதானி விவகாரத்தை எழுப்புவார். பிரதமருக்கும் அதானிக்கும் என்ன தொடர்பு என்று கேட்பார். இந்த கேள்விகளுக்கெல்லாம் பதில்சொல்வதை தவிர்க்கும் பொருட்டே, லண்டன் பேச்சுக்காக ராகுல் மன்னிப்பு கேட்க வேண்டும் என்ற நாடகத்தை பா.ஜ.க. அரங்கேற்றி வருகிறது.
ராகுல் காந்திக்கு ஆதரவாக அவர் பேசுகையில், மத்திய அரசை விமர்சிப்பது என்பது தேசத்தை விமர்சிப்பதாகாது. விவாதத்தால் ஜனநாயகத்தை பலவீனப்படுத்த முடியாது. இன்னும் சொல்லப்போனால் இதன் மூலம் ஜனநாயகம் வலுப்பெறும். எதிர்க்கட்சிகளின் கேள்விகளுக்கு
பதில் சொல்லாமல் தப்பிக்கவே அரசு இந்த நாடகத்தை நடத்தி வருகிறது என்று பவன் கேரா, அதானி விவகாரத்தில் நாடாளுமன்ற கூட்டுக்குழு விசாரணை வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் ஆர்ப்பாட்டம் நடத்திவரும் நிலையில் கூறினார்.
இன்றைய இந்திய அரசியலின் மிர் ஜாஃபர் என ராகுல் காந்தியை பா.ஜ.க. செய்தித் தொடர்பாளர் சம்பித் பாத்ரா விமர்சித்துள்ளார். அவருக்கு தக்க பதில் கொடுப்போம். (இந்தியாவில் நவாப்பாக இருக்க வெளிநாட்டு சக்திகளின் உதவியை நாடியவர் மிர் ஜாஃபர்.) விரைவில் அவரின் அறிக்கை மீது நடவடிக்கை எடுப்போம் என்றார் பவன் கேரா.
இந்தியாவில் ஜனநாயகத்துக்கு அச்சுறுத்தல் இருப்பதாக ராகுல் காந்தி லண்டனில் பேசியதாக கூறி அவர் மீது பா.ஜ.க. தொடர் தாக்குதல் நடத்தி வருகிறது. ராகுல் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று பா.ஜ.க. தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது.
ராகுல்காந்தியை இன்றைய அரசியலின் மிர் ஜாஃபர் என்று கூறுவதில் எந்த தவறும் இல்லை. ராகுல் லண்டனில் செய்தைத்தான் மிர் ஜாஃபரும் செய்துள்ளார் என்று பா.ஜ.க. செய்தித் தொடர்பாளர் சம்பத் பாத்ரா செய்தியாளர்களிடம் பேசுகையில் கூறியிருந்தார்.
லண்டனில் பேசிய ராகுல்காந்தி இந்தியாவில் ஜனநாயகம் இல்லை. ஜனநாயகத்தை நிலைநிறுத்த வெளிநாட்டினர் உதவிட வேண்டும் என்று
பேசியுள்ளார். ராகுல் காந்தியும் நவாப் ஆக விரும்புகிறார். அதனால்தான் அவர் கிழக்கிந்திய கம்பெனியின் உதவியை நாடியுள்ளார் என்று சம்பித் பாத்ரா குற்றஞ்சாட்டியிருந்தார்.
சிராஜ் உத்-தெளலாவின் கீழ் பெங்கால் ராணுவத்தின் கமாண்டராக பணியாற்றி வந்த மிர் ஜாஃபர், பின்னர் கிழக்கிந்திய கம்பெனியின் தயவில் பெங்கால் நவாப்பாக நியமிக்கப்பட்டார். கிழக்கிந்திய கம்பெனிக்கும் சிராஜ் உத்-தெளலாவுக்கும் இடையே நடந்த போரில் கிழக்கிந்திய கம்பெனி வெற்றிபெற்றதுதான் இந்தியாவில் பிரிட்டிஷ் ஆட்சிக்கு வழிவகுத்தது. சிராஜ்ஜை காட்டிக் கொடுத்து கிழக்கிந்திய கம்பெனியின் வெற்றிக்கு காரணமாக இருந்தவர் மிர் ஜாஃபர் என்பது குறிப்பிடத்தக்கது.