
தமிழ்நாட்டில் கட்சியை வளர்ப்பதற்காக பாஜக தரம் தாழ்ந்த அரசியலில் ஈடுபடக் கூடாது. மக்கள் நலத்திட்டங்களை மேற்கொள்வதன் மூலம்தான் கட்சியை வளர்க்க முடியும் என அமைச்சர் செந்தில் பாலாஜி கருத்து தெரிவித்துள்ளார்.
கோவை கார் சிலிண்டர் வெடிப்பு சம்பவத்தை அரசியல் உள்நோக்கத்துடன் சிலர் பூதாகரமாக பார்க்கின்றனர், அதற்கு ஊடகங்கள் இடம் தரக்கூடாது.
கோவையில் தீபாவளியை எந்த ஒரு இடையூறும் இல்லாமல் மக்கள் கொண்டாடியதாகவும் தெரிவித்தார். ஒரு சில தொலைகாட்சிகள் மற்றும் பத்திரிக்கைகளில் இன்னும் இயல்பு நிலைக்கு திரும்பவில்லை என செய்தி வெளியிடப்படுகின்றன என கூறினார். நாளிதழில் மோசமான தலைப்புகளுடன் செய்தி வெளியாகி பதற்றத்தை ஏற்படுத்துவதாக தெரிவித்தார்.
பந்த் என்ற பெயரில் மக்களை அச்சுறுத்தினால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என பாஜகவுக்கு அமைச்சர் செந்தில் பாலாஜி எச்சரிக்கை. அரசியல் உள்நோக்கத்துக்கு ஊடகங்கள் இடம் தரக்கூடாது என கேட்டுக்கொண்டார்.
கோவை மக்கள் யாரும் அச்சப்படவில்லை, பதற்றப்படவில்லை; கோவை இயல்பு நிலையில் உள்ளது; ஆனால், கோவை கார் வெடிப்பு சம்பவம் குறித்து தமிழ்நாடு முழுவதும் பதற்றத்தை தரும் வகையில் குறிப்பிட்ட சில ஊடகங்களில் செய்தி வெளியிடப்படுகின்றன என கூறினார் அமைச்சர் செந்தில் பாலாஜி.