வேட்புமனுவை வாபஸ் பெற பா.ஜ.க. வேட்பாளர் நடத்திய பேரம்!

வேட்புமனுவை வாபஸ் பெற பா.ஜ.க. வேட்பாளர் நடத்திய பேரம்!

கர்நாடக மாநிலத்தில் உள்ள 224 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கும் வருகிற மே 10 ஆம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. ஆட்சியை தக்கவைத்துக் கொள்ள பா.ஜ.க.வும், இழந்தை ஆட்சியைப் பெற காங்கிரஸ் கட்சியும் தீவிர பிரசாரம் மேற்கொண்டுள்ளன.

இந்த தேர்தலில் பா.ஜ.க. அமைச்சரான சோமண்ணா, வருணா மற்றும் சாம்ராஜ் நகர் ஆகிய தொகுதிகளிலும் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்துள்ளார். வருணா தொகுதியில் முன்னாள் முதல்வரும் காங்கிரஸ் பிரமுகருமான சித்தராமையா போட்டியிடுகிறார். அவருக்கு அங்கு நல்ல செல்வாக்கு உள்ளதாக கூறப்படுகிறது. இந்த தொகுதியில் பா.ஜ.க. சார்பில் போட்டியிடும் சோமண்ணாவும் தீவிர பிரசாரம் செய்து வருகிறார்.

இதனிடையே சாம்ராஜ் நகர் தொகுதியில் மதச்சார்பற்ற ஜனதாதளம் கட்சி மல்லிகார்ஜுன சாமி என்பவரை வேட்பாளராக நிறுத்தியுள்ளது. இதனால், அந்த தொகுதியிலும் வேட்பு மனு தாக்கல் செய்துள்ள சோமண்ணா அதிர்ச்சி அடைந்துள்ளார். மல்லிகார்ஜுன சாமியும் லிங்காயத்து சமுதாயத்தைச் சேர்ந்தவர் என்பதால் தேர்தலில் வாக்குகள் சிதறும் என்பதால் சோமண்ணா கவலை அடைந்துள்ளார்.

இந்த நிலையில் மஜத வேட்பாளர் மல்லிகார்ஜுன சாமியுடன் சோமண்ணா செல்லிடப்பேசியில் பேசும் ஆடியோ ஒன்று வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அந்த ஆடியோவில், “நீங்கள் என்னுடைய நண்பர்தான். யாரோ உங்களைத் தூண்டிவிட்டதால் எனக்கு எதிராக போட்டியிடுகிறீர்கள். உங்களது வேட்புமனுவை வாபஸ் பெற்றுக்கொள்ளுங்கள். உங்களுக்கு வேண்டியதை செய்கிறேன். அடுத்து பா.ஜ.க. ஆட்சிதான் அமையும். எனவே நீங்கள் கேட்டதை வாங்கித் தருவேன். பணம் வேண்டுமானாலும் தருகிறேன்” என்று சோமண்ணா கூறியதாகத் தெரியவந்துள்ளது.

அதற்கு மல்லிகார்ஜுன சாமி, “யாரும் என்னைத் தூண்டிவிடவில்லை. வேட்புமனுவை நான் திரும்ப்ப் பெறும் வாய்ப்பு இல்லை. நான் உங்களின் நண்பர் என்பதால் உங்கள் விருப்பப்படியே நடப்பேன். அடுத்த முதல்வர் நீங்கள்தான்” என பதிலளித்துள்ளார்.

சர்ச்சைக்குரிய இந்த ஆடியோ விவகாரம் தொடர்பாக மதசார்பற்ற ஜனதாதளத்தினரும், காங்கிரஸாரும் தேர்தல் ஆணையத்தில் புகார் அளித்துள்ளனர்.

இதுதொடர்பாக கர்நாடக மாநில தலைமைத் தேர்தல் அதிகாரி மனோஜ்குமார் மீனா கூறுகையில், “அமைச்சர் சோமண்ணா பேசியதாக வெளியான ஆடியோ தொடர்பாக புகார் வந்துள்ளது. ஆனால், மதச்சார்பற்ற ஜனதாதள வேட்பாளர் இது தொடர்பாக எந்த புகாரும் அளிக்கவில்லை. எனவே புகாரின் உண்மைத்தன்மை பற்றி ஆராய்ந்து ஆதாரங்கள் இருந்தால் நடவடிக்கை எடுப்போம்” என்று தெரிவித்துள்ளார்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com