பா.ஜ.க. தொண்டர்கள் 'கேரோ'; பிரசாரத்தை ரத்து செய்த எடியூரப்பா! கர்நாடகத்தில் கோஷ்டி மோதலால் பின்னடைவு!

பா.ஜ.க. தொண்டர்கள் 'கேரோ'; பிரசாரத்தை ரத்து செய்த எடியூரப்பா! கர்நாடகத்தில் கோஷ்டி மோதலால் பின்னடைவு!

கர்நாடக மாநிலத்தில் சிக்கமகளூர் மாவட்டத்தில் பா.ஜ.க. தேர்தல் பிரசாரத்துக்குச் சென்ற முன்னாள் முதல்வர் எடியூரப்பாவை கட்சித் தொண்டர்களே சுற்றிவளைத்து கேரோ செய்ததால், தேர்தல் பிரசாரத்தை ரத்துச் செய்துவிட்டு திரும்பவேண்டியிருந்தது. பா.ஜ.க.வின் தேசிய பொதுச் செயலாளர் சி.டி.ரவியின் ஆதரவாளர்தான் எடியூரப்பாவை கேரோ செய்திருப்பது தெரியவந்தது.

இந்தச் சம்பவம் மூலம் கர்நாடகத்தில் பா.ஜ.க.வுக்குள் கோஷ்டி மோதல் இருப்பது வெட்டவெளிச்சமாகியுள்ளது.

விரைவில் நடைபெற உள்ள சட்டப்பேரவைத் தேர்தலில் ஷிமோகா மாவட்டத்தில் செல்வாக்குமிக்க ஷிகாரிபுரா தொகுதியில் தமது மகன் விஜயேந்திரா போட்டியிடுவார் என்று எடியூரப்பா சமீபத்தில் அறிவித்தார். ஆனால், இதற்கு சி.டி.ரவி கடும் எதிர்ப்பு தெரிவித்ததுடன், எடியூரப்பாவின் முடிவை ஏற்கமுடியாது என்றும் கூறினார். இதுதான் இரு தரப்பினருக்கும் மோதல் உருவாக காரணம். அதன் தொடர்விளைவுதான் எடியூரப்பாவை கேரோ செய்தது என்கின்றனர் அரசியல் பார்வையாளர்கள்.

பா.ஜ.க.வின் விஜய சங்கல்ப யாத்திரைக்கு தலைமை தாங்குவதற்காக மூத்த தலைவரான எடியூரப்பா மடிகரே தொகுதிக்கு வந்தார். அப்போது சி.டி.ரவியின் ஆதரவாளர்கள் அவரது காரை வழிமறித்து மடிகரே தொகுதியில் தற்போதைய எம்.எல்.ஏ. குமாரசுவாமிக்கு மீண்டும் தேர்தல் டிக்கெட் வழங்கக்கூடாது என்று வலியுறுத்தி அவரை கேரோ செய்தனர்.

பா.ஜ.க. தொண்டர்களில் ஒரு பிரிவினரே கேரோ செய்ததால் அதிருப்தி அடைந்த எடியூரப்பா, சங்கல்ப யாத்திரையில் பங்கேற்கும் நிகழ்ச்சியை ரத்து செய்துவிட்டு திரும்பினார்.

இதுதொடர்பான விடியோவில் எடியூரப்பா அதிருப்தியில் வெளியேறுவதையும், சி.டி.ரவி தனது ஆதரவாளர்களுடன் நடந்து செல்வதையும் காணமுடிந்தது.

எடியூரப்பாவுக்கும் சி.டி.ரவிக்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது பா.ஜ.க.வுக்கு பின்னடைவு ஏற்பட்டுள்ளதையே காட்டுகிறது.

கடந்த தேர்தலில் காங்கிரஸ் கட்சியும், மதச்சார்பற்ற ஜனதாதளம் கட்சியும் கூட்டணி அமைத்து ஆட்சிக்கு வந்தன. மதச்சார்பற்ற ஜனதாதளத் தலைவர் ஹெச்.டி.குமாரசாமி முதல்வரானார். ஆனால், ஓராண்டுக்குள் இரண்டு கட்சிகளுக்கும் இடையே கருத்துவேறுபாடு ஏற்படவே கூட்டணி ஆட்சி கவிழந்தது. இந்த வாய்ப்பை பயன்படுத்தி 2019 இல் பா.ஜ.க. ஆட்சிக்கு வந்தது. இப்போது மீண்டும் ஆட்சியை பிடித்துவிடலாம் என்று பா.ஜ.க. முனைப்பு காட்டி வரும் நிலையில் கட்சிக்குள் உட்பூசல் வெடித்துள்ளது.

தென்னிந்தியாவில் பா.ஜ.க.வின் முக்கிய தலைவராக இருந்துவந்த எடியூரப்பா, வயதை காரணம் காட்டி ஓரங்கட்டப்பட்டார். ஆனால், தற்போதைய முதல்வர் பசவராஜ் பொம்மைக்கு மக்களிடையே செல்வாக்கு இல்லாததால் எடியூரப்பாவை தேர்தல் பிரசார களத்தில் இறக்கி வெற்றிபெற பா.ஜ.க. முடிவு செய்தது.

சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிடும் எண்ணம் இல்லை. ஆனால், கட்சியின் வெற்றிக்காக பாடுபடுவேன் என்று எடியூரப்பா கூறிவந்தார். தாம் போட்டியிடாவிட்டாலும், மகன் விஜேந்திராவை எப்படியாவது ஷிகாரிபுரா தொகுதியில் போட்டியிட செய்ய வேண்டும் என்று முனைப்பு காட்டி வருகிறார். ஆனால், குடும்ப அரசியல் என்ற புகார் எழுந்துவிடும் என்பதால் விஜயேந்திராவுக்கு தேர்தல் டிக்கெட் வழங்க பா.ஜ.க. தலைமை விரும்பவில்லை.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com