மற்ற கட்சிகளில் இருக்கும் வாரிசு அரசியல், பண பலம், படை பலம் எதுவும் பா.ஜ,க தொண்டர்களுக்குத் தேவையில்லை - பாசக்கார பா.ஜ.கவின் அதிரடிகள்!
தமிழக பா.ஜ.கவில் சேர்ந்தால் பதவி நிச்சயம் என்கிற பேச்சு, உச்சத்தில் இருக்கிறது. தமிழ்நாட்டில் வேறெந்த கட்சியும் தன்னுடைய நிர்வாகிகளுக்கு அடுத்தடுத்து பிரமோஷன் தந்ததில்லை. அடுத்தடுத்து தேர்தல் தோல்வி, ஊடகங்களில் கடும் விமர்சனங்கள் என்று பா.ஜ.கவினர் தடுமாறினாலும் டெல்லி மேலிடம் யாரையும் கைவிடுவதில்லை.
சமீபத்தில் பா.ஜ.கவின் மூத்த நிர்வாகியான சி.பி ராதாகிருஷ்ணன், ஜார்கண்ட் மாநில ஆளுநராக நியமிக்கப்பட்டிருக்கிறார். தமிழக பா.ஜ.க தலைவரான அண்ணாமலை, கர்நாடகா தேர்தல் பணிக்கு அனுப்பிவைக்கப்படுகிறார். கூடவே, இலங்கைக்கும் சென்று அங்குள்ள தமிழர்களின் தலைவர்களை சந்தித்துப் பேசுகிறார். குறுகிய காலத்தில் கட்சியில் சேர்ந்தது, அடுத்தடுத்து பதவிகளை பெற்று உச்சத்திற்கு வந்தவர்களாக ஏகப்பட்டவர்களை பட்டியிலிட முடியும்.
தமிழக பா.ஜ.க ஜனதா கட்சியை மக்கள் மத்தியில் பரவலாக எடுத்துச் சென்ற தமிழிசை சௌந்தரராஜனுக்கு ஆளுநர் பதவி கிடைத்தது, கொரனா தொற்று பரவல் உச்சத்தில் இருந்த நேரத்தில் எல்.முருகனை தமிழக பா.ஜ.க தலைவராக்கினார்கள். தலைவராவதற்கு முன்னர் கட்சியில் இருப்பவர்களுக்கே அவரை யாரென்று தெரியாது. சில மாதங்களிலேயே எல். முருகனுக்கும் மத்திய இணையமைச்சராக பிரமோஷன் கிடைத்தது.
சி.பி ராதாகிருஷ்ணன் ஆளுநரானதைத் தொடர்ந்து, கடந்த பத்தாண்டுகளில் தமிழ்நாட்டிலிருந்து ஆளுநராக நியமிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை ஐந்தாக உயர்ந்திருக்கிறது. இல கணேசன், தமிழிசை சௌந்தரராஜன், ராதாகிருஷ்ணன் என ஆளுநராக நியமிக்கப்பட்ட அனைவரும் பா.ஜ.க கட்சியைத் சேர்ந்தவர்கள் .
இது தவிர ஆர்.எஸ்.எஸ் இயக்கத்தில் இருந்த வி. சண்முகநாதன், முன்னாள் தலைமை நீதிபதியாக இருந்த பி. சதாசிவம் ஆகியோரும் தமிழ்நாட்டிலிருந்து ஆளுநராக தேர்வாகியிருந்தார்கள்.
மாநில அளவிலான தேர்தல்களில் தமிழக பாஜ.க எப்படி செயல்படுகிறது என்பதைப் பற்றியெல்லாம் பா.ஜ.கவின் தேசியத்தலைவர்கள் கவலைப்பட்டதாக தெரியவில்லை. தமிழகத்தில் உள்ள நிர்வாகிகளை அரவணைத்து, ஆளுநராக்குவதில் ஆர்வத்துடன் இருப்பது தெரிகிறது.
மற்ற கட்சிகளில் இருக்கும் வாரிசு அரசியல், பண பலம், படை பலம் எதுவும் பா.ஜ,க தொண்டர்களுக்குத் தேவையில்லை என்பது நிரூபணமாகிவருகிறது. டெல்லியின் கடைக்கண் பார்வை பட்டாலே போதும், பதவி கிடைத்துவிடும்.
டெல்லியில் உள்ள பா.ஜ.க மேலிடம், அரசியல் காரணங்களுக்காகவே பிரமோஷன் தந்து வருவதாக சொல்பவர்களும் உண்டு. நீண்ட நாட்கள் கட்சிக்காக பணியாற்றியவர்கள், இளைய தலைமுறைக்கு வழிவிட்டு ஒதுங்கும்படியாக ஆளுநர் பிரேமோஷன் தந்து வருகிறது.
குறிப்பாக கொங்கு மண்டலத்தைச் சேர்ந்தவர்களுக்கு பா.ஜ.க பதவி கொடுத்து ஊக்கப்படுத்துவதற்கு காரணம், அ.தி.மு.கவை வலுவாக எதிர்கொள்வதற்குத்தான் என்கிறார்கள்.
அதெல்லாம் சரி, அ.தி.மு.க, பா.ஜ.க இரண்டுமே கொங்கு மண்டலத்தை மட்டும் குறி வைத்தால் போதுமா? மற்ற மண்டலங்களை யார் கவனிப்பார்கள்?