பள்ளிகளில் காலைச் சிற்றுண்டி; மதுரையில் இன்று தொடக்கம்!

பள்ளிகளில் காலைச் சிற்றுண்டி; மதுரையில் இன்று தொடக்கம்!

தமிழகத்தில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு காலை சிற்றுண்டி வழங்கும் திட்டத்தை, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று காலையில்  மதுரையில் துவக்கி வைக்கிறார்.

-இத்திட்டம் குறித்து முன்னர் தமிழக அரசு வெளியிட்ட அரசாணையில் குறிப்பிட்டதாவது:

தமிழக அரசுப் பள்ளிகளில் 1-ம் வகுப்பு முதல் 5-ம் வகுப்பு வரை படிக்கும் தொடக்க கல்வி மாணவர்களுக்கு  சத்தான காலை சிற்றுண்டி வழங்கப்படும்.

அதன் முதற்கட்டமாக 15 மாவட்ட அரசு பள்ளிகளில், 292 கிராம பஞ்சாயத்துகளில்  இத்திட்டம் செயல்படுத்தப்பட்டு, பின்னர் அனைத்து மாவட்டங்களிலும் விரிவுபடுத்தப்படும். இந்த காலை உணவுத் திட்டத்தின் திட்ட ஒருங்கிணைப்பு அலுவலராக இளம்பகவத் ஐஏஎஸ் நியமிக்கப்பட்டுள்ளார்.

அதன்படி அரசுப் பள்ளிகளில் காலை 8:45 மணிக்குள் காலை சிற்றுண்டியை மாணவர்களுக்கு வழங்கவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இத்திட்டம் முன்னாள் தமிழக முதல்வர் பேரறிஞர் அண்ணா பிறந்த நாளான செப்டம்பர் 15-ம் தேதி மதுரையில் முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைக்கவிருக்கிறார்.

முதற்கட்டமாக 1545 அரசு தொடக்கப் பள்ளிகளில் 1.14 லட்சம் மாணவர்களுக்கு காலை சிற்றுண்டி வழங்கப்படும்.

-இவ்வாறு  அறிவிக்கப் பட்டிருந்தது.

இந்நிலையில், இன்று பேரறிஞர் அண்ணா பிறந்தநாளையொட்டி பள்ளிக் குழந்தைகளுக்கு காலை உணவு வழங்கும் திட்டத்தை மதுரையில் தொடங்கி வைத்தார்.

முதலில் மதுரை நெல்பேட்டை பகுதியில் அண்ணா திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய முதல்வர்,மு.க. ஸ்டாலின் பின்னர் அங்குள்ள ஆதிமூலம் அரசுப் பள்ளிக்கு சென்று காலை சிற்றுண்டி வழங்கும் திட்டத்தை தொடங்கி வைத்தார்.

அப்போது, குழந்தைகளுடன் அமர்ந்து முதல்வர மு.க. ஸ்டாலின் உணவருந்தியதுடன் அருகில் அமர்ந்திருந்த பள்ளிக் குழந்தைகளுக்கு உணவு ஊட்டி மகிழ்ந்தார். பின்னர் முதலவர் ஸ்டாலின் பேசியதாவது.

பள்ளிக்கு பசியோடு வரும் பிள்ளைகளுக்கு முதலில் உணவு வழங்கிய பிறகு வகுப்பறைக்கு செல்லும் வகையில் இத்திட்டம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. பசித்த வயிறுக்கு உணவு, தவித்த வாய்க்கு தண்ணீராக இருக்கும் திட்டம் தான் இந்த காலை சிற்றுண்டி திட்டம்.

எத்தகைய நிதிச்சுமை இருந்தாலும் பசி சுமையை போக்குவதே இந்த அரசின் முதல் இலக்கு. காலை உணவு எடுத்துக் கொள்ளும்போதுதான் மாணவர்களின் படிக்கும் திறன் மேம்படுகிறது என பல ஆய்வுகள் கூறுகின்றன.

-இவ்வாறு முதல்வர் ஸ்டாலின் தெரிவித்தார்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com