2022ல் 80 சதவீத பணிகள் முடிந்துவிட்டன; 2023ல் 85 சதவீத பணிகள் முடிந்துவிட்டன... தி.மு.க அரசின் குழப்பமான கணக்குகள்!
கடந்த ஆண்டு ஜீன் மாதம் நடந்த சென்னை அறிவாலயத்தில் திமுக முன்னோடிகளுக்கு பொற்கிழி வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. கட்சியின் முன்னோடிகளை உற்சாகப்படுத்தி, ஊக்கப்படுத்த இருப்பதாகவும், தமிழ்நாட்டின் ஒவ்வொரு மாவட்டத்திலும் நடைபெற இருப்பதாகவும் பேசியிருந்தார்.
ஆட்சிக்கு வந்து ஓராண்டு நிறைவுபெற்ற நிலையில் நடைபெற்ற விழா அது. விழாவில் பேசும்போது, அதுவரையிலான திட்டப்பணிகள் குறித்தும், தி.மு.கவின் தேர்தல் அறிக்கையில் தரப்பட்டிருந்த வாக்குறுதிகள் பற்றியும் குறிப்பிட்டிருந்தார்.
திமுக ஆட்சிக்கு வந்தபோது, ஒருபக்கம் கொரோனா என்ற ஒரு கொடிய நோய், இன்னொரு பக்கம் கடுமையான நிதிப்பற்றாக்குறை இருந்தது. கஜானா காலியாக இருந்தாலும் அதையெல்லாம் சமாளித்து 80 சதவீதத்திற்கு மேல் தேர்தல் நேரத்தில் தந்த வாக்குறுதிகளை காப்பாற்றியிருக்கிறோம். மீதமுள்ள அந்த 20 சதவீதத்தையும் கூடிய விரைவில் நிறைவேற்றுவேன் என்று உறுதியளித்திருந்தார்.
இந்நிலையில் நேற்று மன்னார்குடியில் நடந்த நிகழ்ச்சியொன்றில் பேசிய முதல்வர், கடந்த இரண்டு ஆண்டுகளில் நடைபெற்று வரும் பணிகள் பற்றி விரிவாக பேசியிருக்கிறார் விவசாயிகள் நலனுக்காக தமிழக அரசு நிறைவேற்றிய திட்டங்களையும் பட்டியலிட்டிருக்கிறார்.
வேளாண் நிதி நிலை அறிக்கை தொடர்பாக சம்பந்தப்பட்ட துறை அமைச்சர், விவசாயிகள் மற்றும் அது தொடர்புள்ள அனைத்து தரப்பினருடன் தொடர்ந்து ஆலோசனை நடத்தி வருவதாக முதல்வர் தெரிவித்திருக்கிறார்.
தொடர்ந்து பேசிய முதல்வர், தேர்தல் நேரத்தில் அளித்த வாக்குறுதிகளில் 85 சதவீதம் நிறைவேற்றப்பட்டிருப்பதாக குறிப்பிட்டிருக்கிறார். மீதமுள்ள 15 சதவீத வாக்குறுதிகளும் விரைவில் நிறைவேற்றப்படும் என்றும் உறுதியளித்திருக்கிறார்.
குடும்பப் பெண்களுக்கு மாதம் ஆயிரம் ரூபாய், இலவச சிலிண்டர் என ஏராளமான வாக்குறுதிகளை தி.மு.க தன்னுடைய தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டிருந்தது. அவையெல்லாம் 15 சதவீத பணிகளில் வருமென்று தெரிகிறது. கடந்த ஆண்டு 80 சதவீத பணிகளை முடித்துவிட்டதாக குறிப்பிட்ட முதல்வர், இந்த ஆண்டு 85 சதவீத பணிகளை முடித்துவிட்டதாக குறிப்பிடுகிறார்.
கடந்த ஓராண்டில் 5 சதவீத பணிகளை மட்டுமே செய்ய முடிந்ததா? ஓராண்டில் 80 சதவீத பணிகளை செய்து முடித்த தி.மு.க அரசில் ஏன் அடுத்து வந்த ஓராண்டில் 5 சதவீத பணிகளை மட்டுமே செய்ய முடிந்திருக்கிறது? தினமும் காலையில் கவலையோடு கண்விழிக்க வேண்டியிருக்கிறது என்று முதல்வர் பேசியதன் பின்னணி இதுதானா என்று அ.தி.முகவினர் கேள்வி எழுப்புகிறார்கள்.