அமைச்சரவை மாற்றத்தின் எதிரொலி: மாறுதலுக்கு காத்திருக்கும் அதிகாரிகள் யார்?

அமைச்சரவை மாற்றத்தின் எதிரொலி: மாறுதலுக்கு காத்திருக்கும் அதிகாரிகள் யார்?

முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையிலான தி.மு.க அரசு பொறுப்பேற்று இரண்டாவது ஆண்டு நிறைவடைந்து மூன்றாவது ஆண்டில் அடியெடுத்து வைத்திருக்கிறது. தேர்தல் அறிக்கையில் தரப்பட்டுள்ளவற்றில் 85 சதவீதத்தை நிறைவேற்றிவிட்டதாக முதல்வர் குறிப்பிட்டாலும் எஞ்சியுள்ளவற்றை நிறைவேற்றுவதில் ஏராளமான சிக்கல்கள் இருந்த நிலையில் நிர்வாக வசதிக்காக அமைச்சரவை மாற்றம் செய்யப்பட்டிருக்கிறது.

கடந்த இரண்டாண்டுகளில் மூன்றாவது முறையாக செய்யப்பட்டுள்ள அமைச்சரவை மாற்றம் என்றாலும், இம்முறை ஏராளமான வதந்திகளும், சர்ச்சைகளுக்கும் காரணமாக இருந்தது. ஒருவழியாக அனைத்தையும் எதிர்கொண்டு, அமைச்சரவை சகாக்கள் ஒருமித்த உணர்வோடு ஏற்றுக்கொள்ளும்படியான மாற்றங்களை செய்து முடித்திருக்கிறார், முதல்வர் ஸ்டாலின்.

ஆட்சிக்கு வந்து மூன்றாவது ஆண்டை தொடங்கும் நிலையில் மகளிருக்கான உரிமைத் தொகை வழங்குவதை செப்டம்பர் மாதம் முதல் தொடங்கவிருக்கும் நிலையில் அதற்கான நிதி ஆதாரங்களை திரட்டுவது குறித்து ஆலோசனைகள் நடைபெற்று வந்தன. சமீபத்தில் நடந்த அமைச்சரவை கூட்டத்தில் அமைச்சரவை மாற்றங்கள் செய்வதும், முதல்வரின் வெளிநாடு பயணம் குறித்தும் பேசப்பட்டது.

முன்னதாக நிதியமைச்சர் பி..டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் பேசியதாக வெளியான வாட்ஸ்அப் ஆடியோ, தமிழக அரசியலை பரபரப்பாக்கியது. அதை போலி ஆடியோ என்று மறுத்த பி.டி.ஆர், அது குறித்து முதல்வரை நேரில் சந்தித்து விளக்கமும் அளித்ததாக சொல்லப்பட்டது. இந்நிலையில் அமைச்சரின் பதவி பறிபோகும் என்று வதந்திகள் வந்ததையெடுத்து, அமைச்சரவை மாற்றம் குறித்த செய்திகள் பரபரப்பாக பேசப்பட்டன.

இந்நிலையில் இன்று நடந்த அமைச்சரவை மாற்றங்களில் நிதியமைச்சராக இருந்து வந்த பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன், பொறுப்பிலிருந்து விடுவிக்கப்பட்டு தகவல் தொழில்நுட்ப அமைச்சராக பொறுப்பேற்றுக்கொண்டார். இது குறித்து டிவிட்டரில் விளக்கம் அளித்த பி.டி.ஆர், நிதியமைச்சராக நான் பணிபுரிந்து இரண்டு ஆண்டுகள் மன நிறைவை தந்திருக்கின்றன. பொதுவாழ்விலும் தனிப்பட்ட வாழ்க்கையிலும் முக்கியமான காலமாக நினைக்கிறேன் என்று குறிப்பிட்டிருக்கிறார்.

ஒரு நிதியமைச்சராக இரண்டு முக்கியமான பட்ஜெட் அறிக்கைகளை சமர்ப்பித்திருப்பதாகவும், முந்தைய ஆட்சியின் விளைவாக கடன் பற்றாக்குறை இருந்தும் வரலாறு காணாத வகையில் சமூக நலத் திட்டங்களிலும், மூலதனச் செலவினங்களிலும் முதலீடு செய்திருப்பதாகவும் தெரிவித்திருக்கிறார். தகவல் தொழில்நுட்பத் துறையில் தமிழகத்தை மீண்டும் ஒரு முன்னணி மாநிலமாக நிலைநிறுத்தும் வளர்ச்சிக்கான செயல்பாடுகளை மேற்கொள்ளப்போவதாகவும் தெரிவித்திருக்கிறார்.

புதிய நிதியமைச்சராக தங்கம் தென்னரசு பொறுப்பேற்றுக் கொண்டார். அவரிடமிருந்த வர்த்தகம் மற்றும் தமிழ் வளர்ச்சித்துறையானது மற்றவர்களுக்கு பிரித்து வழங்கப்பட்டுள்ளது. தமிழ் வளர்ச்சித் துறை அமைச்சராக சாமிநாதன் பொறுப்பேற்கிறார். இதுவரை தகவல் தொழில்நுட்ப அமைச்சராக இருந்த மனோ தங்கராஜ், பால்வளத்துறை அமைச்சராகிறார்.

நாசரிடமிருந்து பறிக்கப்பட்ட பால்வளத்துறை மனோ தங்கராஜ் வசம் வந்துள்ளது. நிர்வாக வசதிக்காக அமைச்சர்களின் துறைகள் மாற்றப்பட்டிருப்பதாகவும், அமைச்சர்களின் துறைகள் மாற்றப்பட்டாலும் அவர்களது ஒத்துழைப்பு தொடரும் என்று முதல்வர் நம்பிக்கை தெரிவித்திருக்கிறார்.

புதிய தொழில் மற்றும் வர்த்தக அமைச்சராக டி.ஆர்.பி ராஜா பதவியேற்றதும் முதல் நிகழ்ச்சியாக ஹூண்டாய் நிறுவனம் உடனான புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாகும் நிகழ்ச்சியில் பங்கேற்க வேண்டியிருந்தது. நிகழ்ச்சியில் பங்கேற்ற புதிய அமைச்சரை முதல்வரும் பாராட்டி பேசியிருக்கிறார்.

அமைச்சரவை மாற்றத்தை எவ்வித சர்ச்சையுமில்லாமல் முடிந்தது குறித்து கோட்டை வட்டாரங்கள் நிம்மதி பெருமூச்சில் இருக்கின்றன. அமைச்சரவைக் கூட்டத்திற்கு பின்னர் அதிகாரிகள் மாற்றம் நிச்சயம் இருக்கும் என்று செய்திகள் வெளியாகின. அதற்கேற்ப சில காவல்துறை அதிகாரிகளும், பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகளும் இடமாற்றம் செய்யப்பட்டனர்.

இந்நிலையில் வருவாய்த்துறை, நிதித்துறை, வர்த்தகத்துறை, தமிழ் வளர்ச்சித் துறை உள்ளிட்ட துறைகளில் அதிகாரிகள் வட்டாரத்தில் மாற்றம் வரப்போகிறது. மூத்த செயலாளர்கள், காவல்துறை அதிகாரிகளில் முதல்வருக்கு நெருக்கமானவர்கள் ஓய்வுபெறப்போகும் நிலையில் புதிதாக வரப்போகிறவர்கள் குறித்த சஸ்பென்ஸ் நீடிக்கிறது. அடுத்து வரும் இரண்டு வாரங்களில் அதிகாரிகள் மாற்றம் குறித்து ஏராளமான செய்திகள் வரும் என்று எதிர்பார்க்கலாம்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com