ஆளுநர் முன்னாள் கோஷமிட்ட சட்டமன்ற உறுப்பினர்கள் மீது நடவடிக்கையா? தொடரும் போராட்டங்கள் - ஆளுநர் மாளிகை முற்றுகை?

ஆளுநர்  முன்னாள் கோஷமிட்ட சட்டமன்ற உறுப்பினர்கள் மீது நடவடிக்கையா? தொடரும் போராட்டங்கள் - ஆளுநர் மாளிகை முற்றுகை?

தமிழகம் முழுவதும் ஆளுநருக்கு எதிரான கண்டனக் கூட்டங்கள், போராட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. ஆளுங்கட்சியினரை விட அதன் கூட்டணிக் கட்சியினர் கூடுதல் ஆர்வத்தோடு இருப்பது தெரிய வந்துள்ளது. இதையெடுத்து கிண்டி ஆளுநர் மாளிகையில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

ஆளுநர் ஆர்.என்.ரவி பதவி விலகக்கோரி ஜனவரி 13-ம் தேதி ஆளுநர் மாளிகை முற்றுகை போராட்டம் நடத்தப்படும் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் எம்.பி அறிவித்துள்ளார். இடதுசாரிகள், காங்கிரஸ் உள்ளிட்ட தி.மு.கவின் பிற கூட்டணிக்கட்சிகள் இனி என்ன செய்யப்போகின்றன என்று அரசியல் விமர்சகர்கள் கூர்ந்து கவனித்து வருகிறார்கள்.

தமிழ்நாடு அரசு தயாரித்து வழங்கிய ஆளுநர் உரையில் திராவிட மாடல், பெரியார், அண்ணா, கருணாநிதி, அம்பேத்கர் உள்ளிட்ட பெயர்களை ஆளுநர் தவிர்த்துவிட்டு பேசியதால் தி.மு.க கூட்டணியினர் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள்.

நேற்று திருப்பூர் மாநகராட்சி அலுவலகம் அருகே தந்தை பெரியார் திராவிடர் கழகத்தைச் சேர்ந்தவர்கள் ஆளுநருக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் அவரது உருவ பொம்மையை கொளுத்த முயற்சி செய்திருக்கிறார்கள். இதில் காவல்துறையினருக்கும் போராட்டத்தில் ஈடுபட்டவர்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

ஆளுநருக்கு எதிர்ப்பு தெரிவித்தும், கோஷங்கள் எழுப்பியும் உருவ பொம்மையை செருப்பால் அடித்தும், கிழித்தும் எதிர்ப்பை வெளிப்படுத்திய பெரியார் திராவிடர் கழகத்தினரை காவல்துறையினர் கைது செய்தார்கள்.

முதல்வர் கொண்டு வந்த தீர்மானத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து, சட்டசபையில் இருந்து ஆளுநர் வெளிநடப்பு செய்தமைக்கு தி.மு.கவின் கூட்டணிக் கட்சிகள் கடும் கண்டத்தை தெரிவித்திருக்கின்றன. முன்னதாக ஆளுநரை எதிர்த்து கோஷமிட்டு, தி.மு.கவின் கூட்டணிக் கட்சிகள் வெளிநடப்பு செய்தன. அது குறித்து நடவடிக்கை எடுக்க முடியுமா என்று ஆளுநர் மாளிகை விவாதித்து வருவதாக தெரிகிறது.

சட்டமன்றம் குறிப்பில் தன்னுடைய திருத்தப்பட்ட உரை இடம்பெறாததால் அடுத்த கட்டமாக என்ன செய்யலாம் என்றும் சட்ட வல்லுநர்களுடன் ஆலோசனை நடத்தப்படுகிறது. அரசமைப்புச் சட்டத்தின் 175 மற்றும் 176-வது பிரிவின்படி சட்டமன்றத்தில் ஆளுநர் உரை நிகழ்த்தும்போது, அல்லது உரை நிகழ்த்துவதற்கு முன்னதாக உறுப்பினர்கள் குறுக்கீடு செய்யக்கூடாது என்பது சட்டமன்ற விதி. விதியை மீறுபவர்கள் மீது பேரவை விதி 17 கீழ் நடவடிக்கை எடுக்க முடியும் என்கிறார்கள். .

கோஷமிட்ட சட்டமன்ற உறுப்பினர்கள் மீது நடவடிக்கை எடுக்குமாறு சபாநாயகருக்கு ஆளுநர் உத்தரவிடமுடியுமா? ஆளுநருக்கு அதிகாரமுண்டா? இன்னும் இரண்டு நாட்களில் தெரிந்துவிடும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com