ஊழல் வழக்கில் டெல்லி துணை முதல்வரை கைது செய்த சி.பி.ஐ - அடி மேல் அடி வாங்கும் ஆம் ஆத்மியின் இமேஜ்

ஊழல் வழக்கில் டெல்லி துணை முதல்வரை கைது செய்த சி.பி.ஐ - அடி மேல் அடி வாங்கும் ஆம் ஆத்மியின் இமேஜ்

ஊழலுக்கு எதிராக உருவாக்கப்பட்ட ஒரு கட்சி, பத்தாண்டுகளுக்கு மேலாக ஆட்சியில் இருக்கும் அதிசயத்தை தொடர்ந்து நிகழ்த்திக் கொண்டிருக்கிறது, ஆம் ஆத்மி கட்சி. 2012ல் சாமானியர்களால் ஆரம்பிக்கப்பட்ட கட்சி, குறுகிய காலத்திலேயே டெல்லி மக்களின் அன்பை பெற்றது. மக்கள் நலனுக்காக முன்னெடுத்த போராட்டங்களால் கவரப்பட்ட மக்கள், ஆட்சி பீடத்தில் அக்கட்சியை அமர வைத்தார்கள்.

ஆட்சிக்கு வந்த பின்னரும் எந்தவொரு சர்ச்சைகளிலும் சிக்காமல் ஐந்தாண்டுகளை நிறைவு செய்ததுடன், அண்டை மாநிலமான பஞ்சாபிலும் ஆட்சியைப் பிடித்தது. டெல்லியை சுற்றியுள்ள மாநிலங்களில் கணிசமான வாக்குகளை பெற்று, மூன்றாமிடத்தில் தொடர்ந்து இருந்து வருகிறது. இந்நிலையில் மதுபானக் கொள்கையை அமல்படுத்தியதாக ஊழல் குற்றச்சாட்டு எழுந்து, டெல்லியின் துணை முதல்வரை சி.பி.ஐ கைது செய்திருக்கிறது.

2021-22-ம் ஆண்டு புதிய மதுபானக் கொள்கையை அமல்படுத்தியதில் ஊழல் நடந்ததாகக் கூறப்படும் குற்றச்சாட்டில் டெல்லியின் துணை முதல்வர் மணீஷ் சிசோடியா எந்நேரமும் கைது செய்யப்படலாம் என்று செய்திகள் வந்து கொண்டிருந்தன. சி.பி.ஐ. அதிகாரிகளின் விசாரணை முடிவில் 9 பேர் கைது செய்யப்பட்டார்கள். அவர்களிடம் நடந்த விசாரணையின் அடிப்படையில் 2 குற்றப்பத்திரிகைகள் தாக்கல் செய்யப்பட்டன. அதில் ஆம் ஆத்மி முக்கிய தலைவர்கள் உள்ளிட்ட 36 பேருக்கு தொடர்பு இருப்பது தெரிய வந்தது.

கெஜ்ரிவாலின் உதவியாளர் பிபவ் குமாரிடம் சி.பி.ஐ. அதிகாரிகள் விசாரணை நடத்தினார்கள். பின்னர் துணை முதல்வர் மணீஷ் சிசோடியாவிடம் சிபிஐ விசாரணை நடத்தியது. கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் முதல் கட்ட விசாரணை நடந்தது. இந்நிலையில் நேற்று எட்டு மணி நேரம் தொடர்ந்த விசாரணைக்குப் பின்னர் டெல்லி துணை முதல்வரை சி.பி.ஐ அதிகாரிகள் கைது செய்திருக்கிறார்கள்.

மணீஷ் அப்பாவி. அவர் கைது செய்யப்பட்டிருப்பது ஒரு கேவலமான அரசியல். இது மக்கள் மத்தியில் கோபத்தை ஏற்படுத்தும். இது போன்ற அரசியல் நடவடிக்கைகளால் எங்களை தடுத்து விட முடியாது. எங்கள் போராட்டம் தொடரும். ஒவ்வொரு ஏழை வீட்டில் இருந்தும் குழந்தைகள் பள்ளிக்குச் செல்வதை உறுதி செய்ய மணீஷ் சிசோடியா உழைத்து வருகிறார். அவர் ஒரு நேர்மையான, ஒழுக்கமான மனிதர். நல்ல மனிதர்களையும் தேசபக்தர்களையும் கைது செய்கிறார்கள் என்கிறார், டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்.

குஜராத், இமாச்சலப் பிரதேசத்தில் ஆம் ஆத்மிக்கு கிடைத்த தோல்விக்குப் பின்னர் பா.ஜ.க, காங்கிரஸ் கட்சிகளுக்கு தாங்கள்தான் ஒரே மாற்று என்று பேசி வந்தததை ஆம் ஆத்மி குறைத்துக்கொண்டிருக்கும் நிலையில் டெல்லியின் துணை முதல்வர் ஊழல் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டிருப்பது அரசியல் ரீதியாக பல்வேறு விமர்சனங்களை எழுப்பியிருக்கிறது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com