இன்சூரன்ஸ் ஊழல் வழக்கில் ஜம்மு காஷ்மீர் முன்னாள் ஆளுநர் மாலிக்குக்கு சிபிஐ சம்மன்!

இன்சூரன்ஸ் ஊழல் வழக்கில் ஜம்மு காஷ்மீர் முன்னாள் ஆளுநர் மாலிக்குக்கு சிபிஐ சம்மன்!

தமது பதவிக்காலத்தின் போது நடந்ததாக கூறப்படும் இன்சூரன்ஸ் ஊழல் தொடர்பாக சாட்சியம் அளிக்க வருமாறு ஜம்மு காஷ்மீர் முன்னாள் ஆளுநர் சத்யபால் மாலிக்குக்கு சிபிஐ சம்மன் அனுப்பியுள்ளது.

ஜம்மு காஷ்மீரில் அரசு ஊழியர்கள் மற்றும் சிவில் பணியாளர்களுக்கு ரூ.2,200 கோடிக்கு குழு மருத்துவக் காப்பீட்டுக்கு ஒப்பந்தங்கள் வழங்கியதில் முறைகேடுகள் நடைபெற்றதாக மாலிக் கூறிய புகார்கள் தொடர்பாக சிபிஐ இரண்டு வழக்குகளை பதிவு செய்துள்ளது. தாம் கூறிய புகார்கள் தொடர்பாக தமக்கு சம்மன் அனுப்பப்படவில்லை என்று கூறிய மாலிக், மத்திய அரசு மக்களை துன்புறுத்தி வருவதாக கூறியுள்ளார்.

சத்யபால் மாலிக், ஜம்மு காஷ்மீர் ஆளுநராக இருந்தபோது நடந்த்தாக கூறப்படும் இந்த ஊழல் விவகாரத்தில் சாட்சியம் அளிக்க வருமாறு சிபிஐ, அவருக்கு வெள்ளிக்கிழமை சம்மன் அனுப்பியுள்ளதாக அதிகார வட்டாரங்கள் தெரிவித்தன.

இந்த ஊழல் விவகாரம் தொடர்பாக மேலும் சில விவரங்கள் மற்றும் விளக்கங்கள் கேட்பதற்காக சிபிஐ தமக்கு சம்மன் அனுப்பியுள்ளதாக மாலிக் கூறியுள்ளார். இந்த விவகாரத்தில் ஊழல் நடந்துள்ளதாக நான் கூறியதை அடுத்து எனக்கு

சிபிஐ சம்மன் அனுப்பியுள்ளது. நான் ராஜஸ்தான் மாநிலம் செல்ல இருப்பதால் ஏப்ரல் 27 முதல் 29-க்குள் ஆஜராகி விளக்கம் அளிப்பதாக அவர்களுக்கு பதில் அனுப்பியுள்ளேன் என்றார் மாலிக்.

அரசு ஊழியர்கள் மற்றும் சிவில் பணியாளர்களுக்கு ரூ.2,200 கோடி மதிப்புக்கு குழு மருத்துவக் காப்பீடு வழங்குவதில் முறைகேடு நடந்துள்ளது என்று மாலிக் குற்றச்சாட்டுகளை முன்வைத்ததை அடுத்து ரிலையன்ஸ் ஜெனரல் இன்சூரன்ஸ் மற்றும் டிரினிடி ரீ-இன்சூரன்ஸ் புரோக்கர்ஸ் லிமிடெட் நிறுவனங்கள் மீது சிபிஐ வழக்கு பதிவு செய்துள்ளது.

கடந்தவாரம் மாலிக் ஒரு பேட்டியில், 2019 ஆம் ஆண்டில் நடந்த புல்வாமா தாக்குதல் சம்பவம் தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சகத்தின் செயல்பாடுகளை குறைகூறி பேச வேண்டாம் என பிரதமர் நரேந்திரமோடி தம்மிடம் கேட்டுக் கொண்டிருந்த்தாக கூறியிருந்தார். எனினும் தமது குற்றச்சாட்டுக்கான ஆதாரங்கள் எதையும் அவர் தாக்கல் செய்யவில்லை.

சிபிஐ சம்மனையும் தமது குற்றச்சாட்டுகளையும் தொடர்புபடுத்த வேண்டாம் என்று கேட்டுக்கொண்ட மாலிக், மத்திய அரசு மக்களை துன்புறுத்தி வருவதாக மட்டும் கூறியிருந்தார்.

நான் அளித்த பேட்டியின் காரணமாக எனக்கு சம்மன் அனுப்பியுள்ளதாக நான் கருதவில்லை. ஆனால், மத்திய அரசு மக்களைத் துன்புறுத்தி வருகிறது. நான் எதற்காகவும், யாருக்காகவும் அஞ்சவில்லை என்று மாலிக் கூறினார்.

இதனிடையே சிபிஐ முன் ஆஜராகத் தயார் என முன்னாள் ஆளுநர் சத்யபால் மாலிக் கூறியுள்ளதை ஆம் ஆத்மி கட்சியின் தேசிய அமைப்பாளரும் தில்லி முதல்வருமான அரவிந்த் கெஜ்ரிவால் வரவேற்றுள்ளார்.

இது தொடர்பாக அவர் டுவிட்டர் மூலம் விடுத்துள்ள செய்தியில், “சிபிஐ முன் ஆஜராகி விளக்கம் அளிக்கத் தயார் என கூறியுள்ள உங்களின் துணிச்சலை நான் பாராட்டுகிறேன். அவர் ஒரு கோழை. ஆனால், சோதனையான கால கட்டத்தில் பேசவே மக்கள் அஞ்சும் நிலையில் உங்களின் துணிச்சலை பாராட்டுகிறேன். தேசமே உங்கள் பக்கம் நிற்கிறது” என்று குறிப்பிட்டுள்ளார். ஆனால், கோழை யார் என்று கெஜ்ரிவால் பெயர் குறிப்பிடவில்லை.

Related Stories

No stories found.
logo
Kalki Online
kalkionline.com