மத்திய அரசுதான் மன்னிப்பு கேட்க வேண்டும்: காங்கிரஸ் எம்.பி.!

மத்திய அரசுதான் மன்னிப்பு கேட்க வேண்டும்: காங்கிரஸ் எம்.பி.!

லண்டனில் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் உரையாற்றிய காங்கிரஸ் எம்.பி. ராகுல்காந்தி, நாடாளுமன்றத்தையும் இந்திய ஜனநாயகத்தையும் குறைகூறி விமர்சித்து பேசியதற்காக மன்னிப்பு கேட்க வேண்டும் என்று பா.ஜ.க. எம்.பிக்கள் நாடாளுமன்றத்தில் நிர்ப்பந்தம் ஏற்படுத்தி வரும் நிலையில், காங்கிரஸ் எம்.பி. ஆதிர் ரஞ்சன் செளதுரி, மத்திய அரசுதான் மன்னிப்புக் கேட்க வேண்டும் என்று கூறினார்.

மத்திய அரசு நாடாளுமன்றம் செயல்படாமல் தடுக்கிறது. நாடாளுமன்றம் செயல்படுவதை மத்திய அரசு விரும்பவில்லை என்று கூறிய ஆதிர் ரஞ்சன் செளதுரி, நாடாளுமன்றம் செயல்படாமல் இருக்க ஆளுங்கட்சி எம்.பி.க்களே அமளியில் ஈடுபவதை பார்த்திருக்கிறீர்களா என்று கேள்வி எழுப்பினார்.

ராகுல் காந்தி எதற்காக மன்னிப்பு கேட்க வேண்டும். அதற்கு பதிலாக மத்திய அரசுதான் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று செளதுரி செய்தியாளர்களிடம் பேசுகையில் கூறினார்.

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தின் இரண்டாவது கட்டம் திங்கள்கிழமைதான் தொடங்கியது. முதல் நாளே ராகுல் காந்தி, லண்டனில் பேசிய விவகாரம் தொடர்பாக பா.ஜ.க. மற்றும் காங்கிரஸ் எம்.பி.க்கள் அவையில் கூச்சல் போட்டு அமளியில் ஈடுபட்டனர். வெளிநாட்டு மண்ணில் ராகுல், இந்திய நாடாளுமன்றத்தையும், இந்திய ஜனநாயகத்தையும் பற்றி தரக்குறைவாக பேசியதாக கூறி ராகுல் மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் ஆளுங்கட்சினர் வலியுறுத்தினர்.

இந்த நிலையில் செவ்வாய்க்கிழமையும் இதே கோரிக்கையை முன்வைத்து ஆளுங்கட்சியினர் மாநிலங்களவையில் அமளியில் ஈடுபட்டதால் அவை பிற்பகல் 2 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது.

இதனிடையே அவைத் தலைவரும், மத்திய அமைச்சருமான பியூஷ் கோயல், மூத்த காங்கிரஸ் தலைவர் ஒருவர் நாடாளுமன்றத்தை இழிவுபடுத்தும் வகையில் அந்நிய மண்ணில் பேசியுள்ளார். (ராகுல்காந்தியின் பெயரை அவர் குறிப்பிடவில்லை.) இது ஒரு முக்கியமான விஷயமாகும். இந்தியாவில் ஜனநாயகத்துக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாகவும், அமெரிக்காவும், ஐரோப்பிய நாடுகளும் இதில் தலையிட்டு ஜனநாயகத்தை நிலைநிறுத்த வேண்டும் என்று பேசியுள்ளார். இந்தியாவின் உள்விவகாரத்தை வெளிநாட்டில் பேசிய ராகுல் காந்தி, தனது செயலுக்காக மன்னிப்பு கேட்க வேண்டும் என்று கோயல் கோரினார்.

லண்டனில் பிரிட்டிஷ் நாடாளுமன்ற உறுப்பினர்களிடையே சமீபத்தில் பேசிய ராகுல் காந்தி எம்.பி., நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சித் தலைவர்கள் பேச அனுமதிக்கப்படுவதில்லை. அவர்கள் பேச முற்பட்டால் மைக்கை அணைத்து விடுகிறார்கள். பிரதமர் மோடி, ஜனநாயகத்துக்கு எதிராக தாக்குதல் நடத்தி வருகிறார்.

பணமதிப்பிழப்பு நடவடிக்கை, ஜி.எஸ்.டி., அதானி விவகாரம், இந்திய எல்லைக்குள் சீனா அத்துமீறி நுழைந்தது என எந்த பிரச்னையையும் அவையில் எழுப்ப முடியவில்லை. எதிர்க்கட்சிகளின் குரல்கள் நெரிக்கப்படுகின்றன. இந்தியாவில் ஜனநாயகம் இருப்பதாகத் தெரியவில்லை என்று பேசியிருந்தார்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com