மத்திய அரசின் மிரட்டலா? மாநில அரசின் நாடகமா?

சந்திரசேகர் ராவ்
சந்திரசேகர் ராவ்

தெலங்கானாவில் ஆளும் பாரத் ராஷ்டிர சமிதி கட்சியின் எம்.எல்.ஏ.க்கள் நான்கு பேரிடம் தலா ரூ.100 கோடி  விலை பேசி ஆட்சியைக் கவிழ்க்க முயன்றதாக பாஜகவினர் மீது தொடரப்பட்ட வழக்கில் முதல்வர் சந்திரசேகர ராவுக்கு பின்னடைவு ஏற்பட்டுள்ளது.

இரண்டு மாதங்களுக்கு முன்பு தெலங்கானாவில் உள்ள மொய்னாபாதில் ஒரு பண்ணை வீட்டில் அதிரடி சோதனை நடத்திய போலீசார், ஒரு எம்.எல்.ஏ.வுக்கு  ரூ.100 கோடி வீதம் பேரம் பேசி விலைக்கு வாங்கவும், கே.சி.ஆர். ஆட்சியைக் கவிழ்க்கவும் சதிநடந்திருப்பது தெரியவந்துள்ளதாக கூறியிருந்தனர்.

அப்போது , கட்சி மாறுவதற்காக பணம் தருவதாக பேரம் பேசப்பட்டவர்களில் ஒருவரான தண்டூர் எம்.எல்.ஏ. ரோஹித் ரெட்டி, அமலாக்கத்துறை, சிபிஐ மூலம் தம்மை அச்சுறுத்த மத்திய அரசு முயல்வதாக கூறியிருந்தார்.

கடந்த டிச. 19 மற்றும் 20 தேதிகளில் அமலாக்கத்துறை நிதி முறைகேடு தொடர்பான ஒரு வழக்கில், ரெட்டியிடம் விசாரணை நடத்தியது. முதல்நாள் என்னிடம் எதற்காக விசாரணை நடத்தினார்கள் என்பது தெரியவில்லை. ஆனால், இரண்டாவது நாள் எம்.எல்.ஏ.க்கள் விலைபேசப்பட்ட விவகாரம் என்று சொன்னார்கள் என்றும்  ரெட்டி குறிப்பிட்டிருந்தார்.

தான் பா.ஜ.க.வில் சேரவில்லை என்றால் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ மூலம் நெருக்கடி கொடுப்போம், வழக்கு தொடுப்போம் என்று சிலர், தாம் உள்ளிட்ட நான்கு பாரத் ராஷ்டிர சமிதி எம்.எல்.ஏ.க்களை மிரட்டியதாக அக்டோபர் மாத தொடக்கத்தில் ரோஹித் ரெட்டி புகார் செய்திருந்தார். இதன் தொடர்ச்சியாக,  மொய்னாபாத் போலீஸார் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்திருந்தனர்.

இதனிடையே இந்த விவகாரத்தில் தங்களுக்கு எந்த தொடர்பும் இல்லை என்றும் எம்.எல்.ஏ.க்கள் விலைபேசப்பட்டதாக கூறப்படுவது ஆளும் பாரத் ராஷ்டிர சமிதி அரசின் நாடகமாகும் என்றும் பா.ஜ.க. தெரிவித்துள்ளது.

இந்த வழக்கை சிபிஐ விசாரிக்க உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும் அரசியல் ரீதியாக பரபரப்பை ஏற்படுத்திய இந்த விவகாரத்தில் விசாரணை நடத்த மாநில அரசு அமைத்திருந்த சிறப்பு புலனாய்வுக்குழுவைக்  (SIT )  கலைக்குமாறும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

எனினும் இந்த உத்தரவை எதிர்த்து மேல்முறையீடு செய்யப்போவதாக மாநில சிறப்பு புலனாய்வுக் குழு தெரிவித்துள்ளது.

உயர்நீதிமன்றத்தின் இந்த உத்தரவை வரவேற்றுள்ள பா.ஜ.க தலைவரும் வழக்குரைஞருமான என்.ராமச்சந்திர ராவ், சிறப்பு புலனாய்வுக் குழுவால் விசாரணையை பாரபட்சமின்றி நடத்த முடியாது என்பதுதான் எங்கள் தரப்பு வாதமாகும். எம்.எல்.ஏ.க்களை விலைக்கு வாங்குவது தொடர்பாக நடத்தப்பட்ட பேரங்கள் அனைத்தும் பதிவு செய்யப்பட்டு எங்களிடம் உள்ளன என்று முதல்வர் வெளிப்படையாக அறிவித்துள்ள நிலையில் இந்த விசாரணை நியாயமாக நடக்குமா என்பதும்  சந்தேகமே என்று  கூறினார்.

இது தொடர்பாக சிபிஐ விசாரணை கோரி ஐந்து மனுக்கள் போடப்பட்டன. குற்றஞ்சாட்டப்பட்டவர்கள் தரப்பில் மூன்றும் பாஜக தரப்பில் ஒரு மனுவும், வழக்குரைஞர் ஒருவரும் மனு தாக்கல் செய்திருந்தனர். ஆனால், சில காரணங்களால் பா.ஜ.க. மனு நிராகரிக்கப்பட்டது என்றும்  ராவ் குறிப்பிட்டார். 

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com