மார்ச் நிதிநிலை அறிக்கையில் மகளிருக்கான உரிமைத் தொகை! ஈரோடில் முதல்வர் பரப்புரை!

முதல்வர் ஸ்டாலின்
முதல்வர் ஸ்டாலின்
Published on

மார்ச் மாதம் தாக்கல் செய்யப்படவுள்ள நிதிநிலை அறிக்கையில், மகளிருக்கான உரிமைத் தொகை எப்போது வழங்கப்படும் என்பது குறித்து அறிவிக்கப்படும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவனை ஆதரித்து, ஈரோட்டில் உள்ள சம்பத் நகரில் திமுக தலைவரும் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் பரப்புரையில் ஈடுபட்டார். மகளிருக்கான உரிமைத் தொகை எப்போது வழங்கப்படும் என்கிற முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் கேள்விகளுக்கு பதிலளித்தார்.

அப்போது பேசிய அவர், “ஈரோடு கிழக்கு தொகுதியின் வெற்றிக்காக பாடுபட்டுக் கொண்டிருக்கும் கட்சி நிர்வாகிகள் அனைவருக்கும் வாழ்த்துகள். இளங்கோவனுக்கு நீங்கள் வெற்றியை தேடித் தர வேண்டும். எங்கள் உயிரோடு கலந்த ஊர், இந்த ஈரோடு. திமுகவின் அடித்தளமே இந்த ஈரோடு தான். முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி, தனது பள்ளிப்படிப்பை ஈரோட்டில் தான் முடித்தார். அப்படி வரலாற்று சிறப்புகள் நிறைந்த இந்த ஊரில், கை சின்னத்தை வெற்றி பெறச் செய்ய வேண்டும்.

ஈ.வி.கே.சம்பத்தின் திருமகன் தான் இந்த ஈவிகேஎஸ் இளங்கோவன். அவருக்காக ஓட்டுகேட்க முதன்முதலாக இந்த சம்பத் நகருக்கு வந்துள்ளேன். மகன் இருந்த இடத்தை பூர்த்தி செய்தவதற்கு இந்த இளங்கோவன் உங்களிடம் வாக்கு கேட்டு வந்துள்ளார். திமுகவுக்கு நீங்கள் நம்பிக்கையோடு வாக்களித்துள்ளீர்கள்.

இந்தியாவிலே எந்த மாநிலத்திலும் இல்லாத திட்டமாக, மகளிருக்கான இலவச பேருந்து திட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது. மகளிரெல்லாம் இன்று இலவச பேருந்தில் செல்வதை பார்க்கும் போது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. அதுபோல்தான் மாணவர்களுக்கான காலை உணவு திட்டமும்.

கலைஞர் கருணாநிதி ஆட்சியில் இருக்கும் போது,கொண்டு வந்த திட்டம் தான் விவசாயிகளுக்கான இலவச மின்சார திட்டம். அதை இடையில் வந்த அதிமுக அரசு பல்வேறு வகையில் தடுத்தார்கள். பின்னர் அதை மீண்டும் கொண்டு வந்துள்ளோம். உங்கள் தொகுதியில் முதல்வர் திட்டம், மக்களை தேடி மருத்துவம், நான் முதல்வன் திட்டம் என எண்ணற்ற திட்டங்களை திமுக ஆட்சியில் கொண்டு வந்துள்ளோம்.

நான் பெருமையுடன் சொல்வது, அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்ற திட்டத்தை நிறைவேற்றியது தான். நீட் தேர்வை ரத்து செய்ய பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகிறோம். எனது லட்சியம், நீட் தேர்விலிருந்து விலக்கு பெறுவது தான். இந்த ஆண்டுக்குள் அனைத்து வாக்குறுதிகளையும் நிறைவேற்றுவேன்.

அதிமுக மட்டும் நிதி நிலைமையை ஒழுங்காக வைத்திருந்தால், பெண்களுக்கு உரிமைத் தொகையை வழங்கி இருப்போம். மார்ச் மாதத்தில் நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்ய உள்ளோம். அப்போது மகளிருக்கான உரிமைத் தொகை எப்போது வழங்கப்படும் என அறிவிக்கப்படும் என்று முக ஸ்டாலின் தெரிவித்தார்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com