ஜப்பானுக்கு பயணமாகும் முதல்வர் ஸ்டாலின் - மதுரை எய்ம்ஸ் திட்டப்பணிகள் வேகமெடுக்குமா?

ஜப்பானுக்கு பயணமாகும் முதல்வர் ஸ்டாலின் - மதுரை எய்ம்ஸ் திட்டப்பணிகள் வேகமெடுக்குமா?

முதல்வர் ஸ்டாலின் இம்மாதம் 23 ஆம் தேதி ஜப்பான், சிங்கப்பூர் உள்ளிட்ட நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். ஒரு வாரத்திற்கு மேலாக நீடிக்கும் முதல்வரின் சுற்றுப்பயணத்தில் பல்வேறு முதலீட்டு நிறுவனங்களை சந்திக்கிறார். கலைஞரின் பிறந்த நாள் விழாவை கொண்டாட தமிழகம் திரும்புவதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

வரும் ஜனவரி மாதம் சென்னையில் மாபெரும் உலக முதலீட்டாளர்கள் மாநாடு நடைபெறவிருக்கிறது. இதில் பங்கேற்க பல்வேறு தொழில் நிறுவனங்களைக் சேர்ந்தவர்களை நேரில் சந்தித்து அழைப்பை விடுப்பதுதான் முதல்வர் மேற்கொள்ளப்போகும் பயணத்தின் நோக்கம். முதல்வரின் வெளிநாட்டப் பயணம் இரண்டு மாதங்களுக்கு முன்பே திட்டமிடப்பட்டிருக்கிறது.

வெளிநாட்டு பயணம் மேற்கொள்வதற்கு முன்னர் அமைச்சரவை மாற்றங்களை இறுதி செய்வதும், கலைஞர் நூற்றாண்டு விழா தொடர்பான ஏற்பாடுகளை முடிவு செய்வதும் முக்கியப் பணியாக இருந்து வருகிறது. இந்நிலையில் அமைச்சர் நாசரை மாற்றிவிட்டு, புதிய அமைச்சராக டி.ஆர்.பி ராஜாவை பதவியேற்கச் செய்வதற்கான அறிவிப்புகள் வெளியாகியிருக்கின்றன.

அடுத்து கலைஞர் நூற்றாண்டு விழா ஆரம்பத்தை பிரம்மாண்டமாக நடத்தவும் முதல்வர் திட்டமிட்டிருக்கிறார். வரும் ஜீன் முதல் வாரத்தில் தேசியத் தலைவர்கள் பங்கேற்கும் மாநாடு நடைபெறவிருக்கிறது. ஒரிரு நாளில் இது குறித்து அறிவிப்புகள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

முதல்வரின் வெளிநாட்டுப் பயணத்திற்கு முன்னர் சில புரிந்துணர்வு ஒப்பந்தங்களை இறுதி செய்யும் பணிகளும் நடந்து வருகின்றன. சமீபத்தில் ஜப்பான் நாட்டைச் சேர்ந்த மிட்சுபிஷி நிறுவனம், கும்மிடிப்பூண்டியில் 52 ஏக்கர் பரப்பளவில் 1891 கோடி ரூபாய் முதலீட்டில், புதிய தொழிற்சாலை உருவாக இருக்கிறது. இதற்கான அடிக்கல் நாட்டு விழா நேற்று நடந்தது. இது சம்பந்தமாக மிட்சுபிஷி நிறுவனம், தமிழக அரசு இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டிருக்கிறது.

விழாவில் பேசிய முதல்வர், தொழில்துறை அமைச்சர், அவரது துறைச் செயலாளர்களை எப்போது சந்தித்தாலும் புரிந்துணர்வு ஒப்பந்தங்களின் நிலை பற்றி கேள்வி எழுப்புகிறேன். புதிய முதலீடுகள் எப்போது வரும்? புதிதாக எத்தனை பேருக்கு வேலைவாய்ப்புகள் உருவாகும்? என்று விசாரித்து வருகிறேன்.

புதிதாக வரும் தொழிற்சாலையில் 60 சதவீதத்துக்கும் மேல் பெண்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கப்படும். அதற்கான பயிற்சி மற்றும் மேம்பாட்டு முயற்சிகள் மேற்கொள்ளப்படும் எனவும் மிட்சுபிஷி நிறுவனம் தெரிவித்திருக்கிறது. அகில இந்திய அளவில் மட்டுமல்ல, தெற்காசிய அளவிலும் முதலீடுகளை ஈர்த்திட உழைத்து வருகிறோம் என்று முதல்வர் பேசியிருக்கிறார்.

ஜப்பான் - இந்தியா முதலீடு மேம்பாட்டு கூட்டாண்மை திட்டத்தின் கீழ் அமைக்கப்பட்டுள்ள 12 ஜப்பானிய தொழில்நுட்ப நகரியங்களில், 3 நகரியங்கள் தமிழ்நாட்டில் அமைக்கப்பட்டுள்ளன. தமிழர்களுடனான ஜப்பானியர்களின் உறவை வலுப்படுத்தும் வகையில் மாத இறுதியில் ஜப்பானுக்கு பயணம் மேற்கொள்கிறேன் என்றும் முதல்வர் குறிப்பிட்டிருக்கிறார்.

மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை கட்டவதற்கான திட்ட மதிப்பீடான ரூ.1,977 கோடியில் ஜப்பானின் ஜைக்கா நிறுவனம் ரூ.1,500 கோடி நிதி ஒதுக்கியிருக்கிறது. இது குறித்து சென்ற ஆண்டு இதே மாதத்தில் அறிவிப்பு வெளியானது. 1500 கோடி ரூபாய் ஒதுக்கியிருப்பதை மத்திய சுகாதார அமைச்சர் மன்சூக் மாண்டவியா உறுதிப்படுத்தியிருக்கிறார். ஆனால், திட்டப்பணிகளில் எந்த முன்னேற்றமும் இல்லை.

இந்நிலையில் ஜப்பானுக்கு பயணம் மேற்கொள்ளும் முதல்வர், ஜப்பானின் வெளிநாட்டு முதலீட்டு அமைப்புகளைச் சேர்ந்த அதிகாரிகளை சந்தித்து, மதுரை எய்ம்எஸ் குறித்து விவாதிக்க வாய்ப்புகள் இருப்பதாக செய்திகள் வெளியாகின்றன. ஏற்கனவே தாமதமாகியுள்ள மதுரை எய்எம்ஸ் திட்டப்பணிகளை சுறுசுறுப்பாக்கிட இது உதவும் என்கிறார்கள், அரசியல் விமர்சகர்கள்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com