500 டாஸ்மாக் கடைகளுக்கு பூட்டு என்பது திசை திருப்பல் - முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் சாடல்!

500 டாஸ்மாக் கடைகளுக்கு பூட்டு என்பது திசை திருப்பல் - முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் சாடல்!

தமிழகத்தில் 500 டாஸ்மாக் கடைகள் மூடப்படும் என்று சட்டமன்றத்தில் தமிழக அரசு மேற்கொண்ட அறிவிப்பு நாளை முதல் அமலுக்கு வருகிறது. சென்னையில் 138, கோவையில் 78, மதுரையில் 125, சேலத்தில் 59, திருச்சியில் 100 டாஸ்மாக் கடைகள் நாளை முதல் செயல்படாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தி.மு.க அரசின் முடிவு குறித்து முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கருத்து தெரிவித்துள்ளார். நாங்கள் ஆட்சிக்கு வந்தால் டாஸ்மாக் கடைகளை முழுவதுமாக மூடிவிடுவோம் என்று எதிர்க்கட்சித் தலைவராக இருந்தபோது ஸ்டாலின் பேசினார். கருப்புச் சட்டை அணிந்து டாஸ்மாக் கடையை மூட ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள். ஆனால், இரண்டு ஆண்டுகளில் எதையும் செய்யவில்லை. செந்தில் பாலாஜி மீது அமலாக்கத்துறை நடவடிக்கை எடுத்தபின்னரே டாஸ்மாக் கடைகளை மூடும் அறிவிப்பு வெளியாகியிருக்கிறது.

ஆட்சிக்கு வந்த பின்னர் டாஸ்மாக் கடைகளை மூடுவதாக சொன்னவர்கள், இன்று 500 கடைகளை மூடுவதாக அறிவிப்பதற்கு என்ன காரணமா? இலாகா இல்லாத அமைச்சராக உள்ள செந்தில் பாலாஜியை தொடர்ந்து அமைச்சரவையில் தக்க வைத்துக்கொள்வதற்காக திசை திருப்பும் யுக்தியாக இதை செய்திருக்கிறார்கள். செந்தில் பாலாஜி, சட்டம் ஒழுங்கு, 30 ஆயிரம் கோடி பற்றி யாரும் எதுவும் பேசக்கூடாது என்பதால் திசை திருப்பும் விஷயமாக கடைகளை மூடுவதாக அறிவித்துள்ளார்கள் என்றார்.

கடந்த சட்டசபை கூட்டத் தொடரின் போது மது விலக்கு ஆயத்தீர்வை மானியக்கோரிக்கை தொடர்பான விவாதம் நடந்தது. அதில் கலந்து கொண்ட அப்போதைய மதுவிலக்குத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி, போர்க்கால அடிப்படையில் செயல்பட்டு 500 டாஸ்மாக் கடைகளை மூடவிருப்பதாக அறிவித்தார். இது குறித்து துறை சார்ந்த அதிகாரிகளுடன் பல்வேறு மட்டங்களில் ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது.

வழிபாட்டுத் தளங்கள், பள்ளிகள், கல்லூரிகள் உள்ளிட்ட இடங்களுக்கு அருகேயுள்ள டாஸ்மாக் கடைகள், குறைந்த வருமானம் ஈட்டக்கூடிய டாஸ்மாக் கடைகள் உள்ளிட்டவற்றை கண்டறிந்து, அவற்றை மூட நடவடிக்கை எடுக்கும் பணிகளும் ஆரம்பமாகின. பள்ளிக்கூடங்களில் இருந்து 100 மீட்டர் தொலைவில் உள்ள டாஸ்மாக் கடைகளை கணக்கெடுக்க அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டது.

நகராட்சி, மாநகராட்சிகளில் டாஸ்மாக் கடைகளை அமைப்பதற்கு 50 மீட்டர் என இருந்த தூரத்தை 100 மீட்டராக உயர்த்த ஆய்வுக்கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. ஆனால், அமைச்சர் செந்தில் பாலாஜி அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டதை தொடர்ந்து தாமதம் ஏற்பட்டது.

டாஸ்மாக் கடைகளுக்கு எதிராக மக்கள் ஒன்று திரண்டு போராட்டம் நடத்துவதும், கடைகளை அகற்றுக்கோரி கோரிக்கை விடுப்பதும் பத்தாண்டுகளாக தொடர்ந்து வருகிறது. அ.தி.மு.கவோ தி.மு.கவோ எந்தக்கட்சி ஆட்சிக்கு வந்தாலும் டாஸ்மாக் கடைகளை அகற்ற நடவடிக்கை எடுத்ததில்லை.

கடந்த பத்தாண்டுகளில் இல்லாத நிகழ்வாக நாளை தமிழகம் முழுவதும் 500 டாஸ்மாக் கடைகள் மூடப்பட இருக்கின்றன. தமிழகத்தின் மதுவிலக்கு வரலாற்றில் இதுவும் ஒரு முக்கியமான நிகழ்வாக இடம்பெறும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com