திருச்சியில் மாநாடு, கர்நாடகா தேர்தலில் போட்டி, சசிகலாவுடன் சந்திப்பு - களைகட்டும் ஓ.பி.எஸ் பாலிடிக்ஸ்!
ஏப்ரல் 24 புரட்சித்தலைவர் பிறந்தநாள், அதிமுக 51 ஆம் ஆண்டு, அம்மாவின் பிறந்த நாள் அனைத்தையும் சேர்த்து முப்பெரும் விழாவாக நடைபெறவிருப்பதாக ஓ.பி.எஸ் அறிவித்திருக்கிறார். இதற்கிடையே சசிகலாவை சந்தித்து மாநாட்டிற்கு அழைப்பது, கர்நாடக தேர்தலில் போட்டியிடுவது குறித்து பா.ஜ.கவுடன் பேசவும் முடிவு செய்யப்பட்டிருக்கிறது.
திருச்சியில் இன்று நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் மாநாடு நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. தலைமைக் கழக நிர்வாகிகள் மற்றும் மாவட்டக் கழகச் செயலாளர்கள் ஆலோசனைக் கூட்டம் கழகத்தின் அரசியல் ஆலோசகர் திரு. பண்ருட்டி ச. இராமச்சந்திரன் அவர்கள் தலைமையில் திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகில் உள்ள ஹோட்டலில் நடைபெற்றது. இதில் கர்நாடக தேர்தலில் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிடுவது குறித்தும் பேசப்பட்டது.
கர்நாடக மாநில அ.தி.மு.க பொறுப்பாளர் புகழேந்தி தலைமையில் கர்நாடக முன்னாள் முதல்வர் எடியூரப்பாவை சந்தித்துள்ள ஓ.பி.எஸ் ஆதரவளார்கள், பா.ஜ.கவுடன் கூட்டணி சேர விருப்பம் தெரிவித்திருக்கிறார்கள்.
தேர்தலை சந்திக்க இருப்பதாகவும், இரட்டை இலை சின்னத்தில் தேர்தலில் போட்டியிட இருப்பதாகவும் பேசப்படுகிறது. எடப்பாடிக்கு எதிரான சட்டப்போராட்டத்தில் தோல்வியுள்ள ஓ.பி.எஸ் தரப்பு, கர்நாடகா தேர்தலை முன்னிட்டு எடப்பாடியோடு இன்னொரு ரவுண்டு மோத தயாராகிவிட்டது.
அடுத்தடுத்து எட்டு தோல்விகளை சந்தித்தது தான், எடப்பாடியின் சாதனை என்று குறிப்பிட்ட ஓ.பி.எஸ் குழுவின் அரசியல் ஆலோசகரான பண்ருட்டி ராமச்சந்திரன், ஈரோடு இடைத்தேர்தல் முடிவு தங்களுடைய அணிக்கு உற்சாகத்தை தந்திருப்பதாக குறிப்பிட்டுள்ளார். இரட்டை இலைச் சின்னம் முடக்கப்படாமல் பார்த்துக் கொள்ள அனைத்து உதவிகளையும் செய்தும், எடப்பாடி தோற்றுப் போய்விட்டார் என்றார்.
தி.மு.க தலைமைப்பீடம் திரும்பவும் தங்கள் தரப்புக்கு மீண்டும் கிடைக்கும் என்கிற நம்பிக்கையோடு ஓ.பி.எஸ் தரப்பு, அடுத்த கட்ட நடவடிக்கையை ஆரம்பித்து வைத்திருக்கிறது. எடப்பாடியிடமிருந்து கட்சியை மீட்பதற்காக முதல் கட்டமாக திருச்சியில் ஒரு மாநாடு ஏற்பாடு செய்யப்பட்டிருப்பதாகவும், அதைத்தொடர்ந்து சசிகலாவை ஓ.பி.எஸ் சந்திப்பார் என்றும் பின்னர் மாவட்டம்தோறும் சுற்றுப்பயணம் செய்வார் என்றும் தெரிகிறது.
பா.ஜ.கவுடன் கூட்டணி அமைத்து, கோலார், மைசூர், பெங்களூர் போன்ற தமிழர்கள் அதிகமாக வசிக்கும் பகுதிகளில் போட்டயிடுவது குறித்து முடிவு செய்யப்படுகிறது. கூட்டணி விஷயத்தில் தமிழக பா.ஜ.க தலைமை அ.தி.மு.கவுடன் விலகி இருந்தாலும் உள்துறை அமைச்சர் அமித்ஷா, அ.தி.மு.கவுடன் கூட்டணி தொடர்வதாக
அறிவித்திருக்கிறார். அது எடப்பாடி தலைமையிலான அ.தி.மு.கவா அல்லது ஓ.பி.எஸ் தலைமையிலான அணியா என்பதில் குழப்பம் நீடிக்கிறது.
கர்நாடக சட்டமன்றத் தேர்தலில் களமிறங்க ஓ.பி.எஸ் தரப்பு முடிவு செய்திருப்பதால் யாருக்கு இரட்டை இலைச் சின்னம் கிடைக்கும் என்பதில் குழப்பம் நீடிக்கிறது. ஒருவேளை இரட்டை இலை சின்னம் வேண்டுமென்று ஓ.பி.எஸ் தரப்பு தலைமை தேர்தல் ஆணையத்தை அணுகினால் சாதகமான முடிவுகள் கிடைக்க வாய்ப்பில்லை. ஆனாலும், அ.தி.மு.கவின் கர்நாடகா கிளை என்கிற பெயரில் ஒருவேளை இரட்டை இலைச் சின்னம் கேட்டு அணுகினால், அதை தடுக்க எடப்பாடி தரப்பு தயாராக இருக்கிறது.
சென்ற வாரம் சென்னைக்கு வந்த பிரதமரை சந்திக்க ஈ.பி.எஸ், ஓ.பி.எஸ் இருவரும் நேரம் கேட்டிருந்த நிலையில், அனுமதி மறுக்கப்பட்டது. தமிழக பா.ஜ.க தலைவரான அண்ணாமலை உள்ளிட்டவர்களை கூட பிரதமர் சந்திக்கவில்லை. பிரதமரின் வருகை, முழுவதும் அரசு முறைப்பயணம் என்பதால் கட்சி சம்பந்தப்பட்ட சந்திப்புகளை பிரதமர் தவிர்த்ததாக கமலாலயம் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.